லைஃப்ஸ்டைல்

மனோதைரியமும், தன்னம்பிக்கையும்

Published On 2019-04-29 03:36 GMT   |   Update On 2019-04-29 03:36 GMT
தன்னம்பிக்கையை உறுதிபடுத்துங்கள். நீங்கள் எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே ஆவீர்கள். மனோதைரியமும், தன்னம்பிக்கையும்தான் நம்மை வாழ வைக்கும் உயிர்நாடி.
மனிதன் மனிதனாக வாழ்ந்து தனது கடமைகளை செவ்வனே செய்து முடிப்பது. மனிதநேயத்துடன் வாழ்வது, குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவது, ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நடப்பது, பூமியில் பிறந்த பயனை அடைந்து மற்றவர்கள் போற்ற வாழ்வது, மேலும் சொல்லப்போனால் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனே‘ வெற்றியின் லட்சியத்தை அடைந்தவன் என்று சொல்லலாம்.

பொதுவாக, வெற்றி என்பது ஒரு நல்ல செயலின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்றே எடுத்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்களை விட அப்படி ஒன்றும் பிரமாதமான திறமை படைத்தவர்கள் இல்லை. அவர்கள் வெற்றி பெற, தோல்வி அடைந்தவர்களுக்கு காரணமாகிறார்கள். ஆனால் தோல்விகள் நிரந்தரமில்லை. “நாமும் ஜெயிக்க முடியும்“ என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

அவமானங்கள் வெற்றியின் அஸ்திவாரம்


இன்று வாழ்க்கையில் பலர் பலவிதமான அவமானங்களை சந்திக்கின்றனர். அதை சகிக்க முடியாமல் சிலர் தவறான முடிவு கூட எடுத்து விடுகின்றனர். அவமானத்தை அவமானமாக எடுத்து கொள்ளாமல் லட்சியத்தை அடைவதற்கான வெறியாக மாற்றி கொள்ள வேண்டும். கிரேக்க நாட்டில் ஒரு சிறுவன் ‘திக்குவாயன்‘ என்று அவமானப்படுத்தப்பட்டான்.

பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட அவனுக்கு பேச்சு வரவில்லை. எல்லோரும் ஏளனம் செய்தனர். அப்போது அவனுக்குள் ஒரு வெறி பிறந்தது. கூழாங்கற்களை வாயில் போட்டு பேசிப் பழகு என்று அவன் தாய் சொன்னபடி செய்தான். நாளடைவில் அவன் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. வார்த்தைகள் சரளமாக வந்தன. சொற்பொழிவில் ஒரு ஈர்ப்பு இருந்தது. கூட்டம் கூடியது. உலக புகழ்பெற்ற பேச்சாளர் ஆனார். அவர்தான் டெமாஸ்தனிஸ் என்ற பேச்சாளர். அவமானங்கள் வெற்றியின் அஸ்திவாரம்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை உள்ளவர்களை யாராலும் வெற்றி காண முடியாது. மருத்துவமனையில் உள்ள நோயாளியை நண்பர்களும், உறவினர்களும் சென்று பார்க்கிறார்கள். ஏன்? அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டத்தான். மிகவும் கடுமையான வியாதியாக இருந்தாலும் மற்றவர்கள் கொடுக்கும் ஆறுதலான வார்த்தைகள்தான் அவரது வியாதியை பாதியாக குறைக்க காரணமாகிறது. நமது எண்ணங்களும், நிலைப்பாடுகளும், உளம் சார்ந்தது என்றாலும், தன்னம்பிக்கைதான் உயிர் சார்ந்தவை.

ஆகவே, தன்னம்பிக்கையை உறுதிபடுத்துங்கள். வெற்றிதரும் சிந்தனைகளை மட்டும் உயிர்மூச்சாக கொள்ளுங்கள். நீங்கள் எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே ஆவீர்கள். மனோதைரியமும், தன்னம்பிக்கையும்தான் நம்மை வாழ வைக்கும் உயிர்நாடி. 
Tags:    

Similar News