லைஃப்ஸ்டைல்

கோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தும்

Published On 2019-04-23 03:47 GMT   |   Update On 2019-04-23 03:47 GMT
கோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தி, உங்கள் தரப்பு நியாயத்தை கெடுப்பதோடு, உங்களின் மீதான சுற்றியிருப்பவர்களின் பார்வையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது
கோபத்தைப் பற்றிய சில தவறான நம்பிக்கைகளும் இருக்கின்றன. கோபத்தை உள்ளுக்குள் போட்டு அடக்காதே. அதை கொட்டிவிடுவதுதான் நல்லது என்பார்கள். ஆனால், கோபத்தை உள்ளே அடக்குவது, வெளியே கொட்டுவது இரண்டுமே ஆபத்தானது. அதற்காக, யாரிடம் போய் கோபத்தில் வெடிக்கலாமென பார்த்துக்கொண்டிருக்க அவசியமில்லை. கோபத்தில் கொப்பளிக்காமலேயே உணர்ச்சிகளைத் தெரிவிக்க உங்களால் பழகிக்கொள்ளலாம்.

இதேபோல் நான் எனக்குக்கீழ் இருப்பவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டால் என்னை ஏறி மிதிப்பார்கள் என்ற நம்பிக்கையும் பலருக்கு உண்டு. கோபத்தை அடக்கி சுயக்கட்டுப்பாடுடன் நடந்து கொள்வதற்கு மிகுந்த நெஞ்சுரம் தேவை. நீங்கள் அப்படி நடக்கும்போது அவர்கள் உங்களை இன்னும் அதிகமாக மதிப்பார்கள்.

நான் கோபப்படவில்லையென்றாலும், ஒண்ணுமில்லாத விஷயத்துக்குக்கூட தேவையில்லாமல் வீண் வாக்குவாதம் செய்து நம்மை டென்ஷனாக்குவதற்கென்றே சிலர் இருக்கிறார்களே... அப்படி நம்மை சீண்டுகிறவர்களிடம் எப்படி கோபப்படாமல் நிதானமாக இருக்க முடியும்? இந்தக் கேள்வி நியாயமானதுதான். உங்கள் கோபம் சரியானதாக இருந்து, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் உண்மையில், கோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தி, உங்கள் தரப்பு நியாயத்தை கெடுப்பதோடு, உங்களின் மீதான சுற்றியிருப்பவர்களின் பார்வையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த இடத்தில்தான் கோபத்தை நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

அடிக்கடி ‘மூட் அவுட்’ ஆவது உங்களது சுபாவமாக இருந்தால், இதுவரை உங்களுடைய கோபத்திற்கான பழியை அடுத்தவர் மீது சுமத்தியிருக்கலாம். அவர்கள்தான் என்னை கோபப்பட வைத்தார்கள் என்று உங்களுடைய உணர்ச்சிகளின் ரிமோட் கன்ட்ரோலை மற்றவர்களிடம் கொடுத்திருப்பீர்கள். இனி அந்த ரிமோட் கன்ட்ரோலை உங்கள் கைக்கு கொண்டுவந்துவிடுங்கள். அதற்கு முதலில், ‘நான்தான் ஆத்திரப்பட்டுவிட்டேன். இதற்கு முழுவதும் நான் மட்டும்தான் காரணம்’ என்று உங்களுடைய செயல்களுக்கு நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சூழலை கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும்.

உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் சூழல் எது? அப்போது என்ன நடந்தது? கோபம் வரும்போது எப்படி நடந்துகொண்டீர்கள்? எப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்? இவற்றையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டால், அடுத்த முறை அதேபோன்ற சூழல் வரும்போது அதை எதிர்கொள்ள வசதியாக இருக்கும்.

யாராவது நம்மை கோபப்படுத்தினால் சட்டென்று யோசிக்காமல் எதையும் பேசாதீர்கள். நிதானமாக யோசித்துப் பிறகு பேசலாம். மூச்சை நன்றாக இழுத்துவிட்டோ அல்லது ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டோ பிறகு பேசலாம். அப்போது கோபம் அடங்கி நிதானமாக பேச முடியும்.

ஏதாவது பிரச்னை வரும்போது உங்கள் பக்கத்திலிருந்து மட்டும் யோசித்திருப்பீர்கள். எதிரில் இருப்பவரின் சூழலையும் யோசிக்க வேண்டும். பிரச்னையை அவருடைய கோணத்திலிருந்து யோசித்து பார்க்கலாம். குறிப்பாக சின்ன விஷயமாக இருந்தால் பெரிசு பண்ண
வேண்டாமே…

எதிரில் இருப்பவர் என்ன பேசினால் நமக்கு கோபம் வரும்? எந்தச் சூழலில் எனக்கு கோபம் தலைக்கேற வாய்ப்புள்ளது? என்பதை முன்கூட்டி கணித்து விட்டால் அதற்கு எப்படி நாம் எதிர்வினையாற்றுவது என்பதை தீர்மானித்து வைத்துக் கொண்டால் பிரச்னையை எளிதில் சமாளித்துவிடலாம் அல்லது அந்த சூழல் வரும்போது, அங்கிருந்து நகர்ந்து விடலாம். அது சூழலின் தீவிரத்தன்மையை குறைத்துவிடும்.

சில நேரங்களில் அலுவல் ரீதியான கோபத்தையோ, வயதில் மூத்தவரிடம் உண்டாகும் கோபத்தையோ வெளிக்காட்ட முடியாது. அதற்கு சிறந்த வழி. ஒரு பேப்பரில் அவரைத் திட்ட நினைப்பதையெல்லாம் எழுதி, அதை கிழித்தெறிந்து விடுங்கள். 
Tags:    

Similar News