லைஃப்ஸ்டைல்

பாலியல் ரீதியான தொந்தரவு: பெண்கள் எதிர்கொள்வது எப்படி?

Published On 2019-04-03 08:48 GMT   |   Update On 2019-04-03 08:48 GMT
பெண்ணின் அந்தரங்க ஒளிப்படமோ மார்ஃபிங் படமோ வெளியே வந்தால் அச்சத்தால் முடங்கிவிடாமல் அந்த சம்பவத்தைக் கடந்துசெல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பாலியல் தொடர்பான குற்றங்களில் தொடர்ந்து பெண்களே குற்றவாளிகளாக்கப் படுவதற்கும் குற்றச்செயலில் ஈடுபட்ட ஆண்கள் பெருமிதத்துடன் வலம்வருவதற்கும் கற்பென்பது பெண்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் சமூகம் முழுவதும் புரையோடியிருப்பதே முக்கியக் காரணம். பெண்ணின் அந்தரங்கம் பொதுவெளியில் பகிரப்படும்போது அதை வெளிப்படுத்தியவனை விட்டுவிட்டு அந்தப் பெண்ணையே கேலிப் பொருளாக்குகிறோம்.

பாலியல் ரீதியான எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் சமூகத்தின் விரல்கள் முதலில் பெண்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றன. பொள்ளாச்சி சம்பவத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக அடக்கியே வைக்கப்பட்ட பெண்மை இப்போதுதான் சுதந்திரக் காற்றைச் சற்றே சுவாசிக்கிறது.

இதுபோன்ற பாலியல் வன்முறைகளால் பொதுவெளியில் பெண்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. பாலியல் சம்பவத்தால் பெண்கள் மட்டுமே ‘பாதிப்புக்கு’ உள்ளாகிறார்களா? ஆண்களின் கற்புக்குப் ‘பாதிப்பு’ இல்லையா? அல்லது ஆண்களுக்குக் கற்பே இல்லையா? கற்பு என்பதற்கான வரையறை எது?

அந்தரங்கத்தை வெளிப்படுத்தியவனைப் போலவே, அதைப் பார்த்து ஏளனம் செய்பவர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. பெண்கள் இதை அவமானமாகக் கருதாமல், துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் வெகுண்டு எழுந்தால்தான் இதுபோன்ற அவலங்கள் தீரும்.



எந்தக் குற்றத்துக்கும் பெண்ணையே பொறுப்பாளியாக்கும் இந்தச் சமூகத்தின் மனநிலை மாற வேண்டும். ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்பதை முதலில் களைய வேண்டும். பெண் குழந்தைக்குத் தேவை தன்னம்பிக்கையும் விழிப்புணர்வுமேயன்றி நகையோ சொத்தோ இல்லை என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். பெண்கள் பேசினாலே காதல், தொட்டாலே காமம் என்ற நினைப்பில் இருக்கும் ஆண்களின் சிந்தனை மாற வேண்டும்.

ஆணைப் பெற்ற பெற்றோருக்குத்தான் பொறுப்பும் கடமை உணர்வும் அதிகம் இருக்க வேண்டும். தடைகளைத் தாண்டி, பெண் சமூகம் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்தக் காலப் பெண்களை மரியாதையுடன் நடத்தும் விதத்தை ஆண் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும். பெண் பிள்ளைகளைச் சமூகத்தைப் புரிந்து கொண்டவர்களாக சுய மரியாதை உணர்வோடு வாழப் பழக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழலில் பெண்ணின் அந்தரங்க ஒளிப்படமோ மார்ஃபிங் படமோ வெளியே வந்தால் அச்சத்தால் முடங்கிவிடவோ தவறான முடிவை எடுக்கவோ கூடாது. அந்தச் சம்பவத்தைக் கடந்துசெல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். குடும்பமும் அந்தப் பெண்களுக்குத் துணைநிற்க வேண்டும்.

அவர்கள் அந்நிகழ்விலிருந்து மீண்டுவரத் துணைபுரிய வேண்டும். சமுதாயமும் இதுபோன்ற நிகழ்வுகளில் பெண்களின் தவறு ஏதுமில்லை என்பதை உணர வேண்டும். ஆறுதலாக இல்லாவிட்டாலும் வார்த்தைகளால் அவர்களைக் கூறுபோடாமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News