லைஃப்ஸ்டைல்

வெளியூர் செல்பவர்கள் வீடுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

Published On 2019-03-27 08:49 GMT   |   Update On 2019-03-27 08:49 GMT
தனி வீடுகள் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
தனி வீடுகள் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் பல்வேறு காரணங்களுக்காக வீட்டை பூட்டிவிட்டு சில வாரங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் சூழல் ஏற்படலாம். அந்த நிலையில் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

* வீட்டு வாசலில் நீர் தெளித்து கோலம் இடும் பழக்கம் கொண்டவர்கள் ஊரில் இல்லாத சமயத்தில், தினமும் அந்த பணியை செய்வதற்கு நன்றாக அறிமுகம் உள்ளவர்களை அமர்த்துவதே பாதுகாப்பானது. அவரையே வீட்டில் உள்ள செடிகளுக்கு, தினமும் தண்ணீர் விடச்சொல்லலாம்.

* நியூஸ் பேப்பர், தபால், கொரியர் ஆகியவற்றை வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் அல்லது அறிமுகமான கடைகளில் கொடுக்கும்படி ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

* வீட்டில் போர்டிகோ, பால்கனி, பின்பக்கம் ஆகிய வீட்டை சுற்றிலும் உள்ள பகுதிகள், வீட்டிற்கு உட்புறம் ஆகியவற்றில் சிறிய மின் விளக்குகளை நீங்கள் திரும்பி வரும்வரை ஒளிரும்படி செய்வதும் பாதுகாப்பானது.

* வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை, லவ் பேர்ட்ஸ், வண்ண மீன்கள் போன்றவற்றை பிரயாணம் செல்வதற்கு ஒரு வாரம் முன்னதாகவே அருகில் உள்ள Pet Shelter ஒன்றில் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்வது நல்லது.

* வாட்டர் ஹீட்டர், தொலைக்காட்சி, நீரேற்றும் மோட்டர், கார்ப்பரேஷன் தண்ணீர் குழாய், கேஸ் சிலிண்டர், வாஷிங் மிஷின், வாட்டர் லைன், ஏர் கண்டிஷனர், மைக்ரோவேவ் ஓவன், அயர்ன் பாக்ஸ், டிஷ் வாஷர், வாக்குவம் கிளனர் ஆகியவற்றின் மின்சார இணைப்புகளை துண்டித்திருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

* பிரிட்ஜ் மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை காலி செய்து, சுத்தமாக துடைத்து உலர வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றிற்கான கவர்கள் இருந்தால் மூடி வைப்பது நல்லது.

* கதவு, ஜன்னல்களை அடைத்து, ஸ்கிரீன்களை முழுவதுமாக இழுத்து விடப்படுவதுடன், குளியலறை வெண்டிலேட்டர்கள் கச்சிதமாக அடைக்கப்படுவது அவசியம். அவசியத்துக்கு ஏற்ப கதவுகளை கூடுதல் பூட்டுகள் கொண்டு பூட்டி வைக்கலாம்.

* கூடுதல் முன்னெச்சரிக்கையாக கதவுகள், ஜன்னல், இரும்பு கேட் ஆகியவற்றில் திறந்தால் ஒலி எழுப்பும் அலாரங்களை பொருத்தலாம். வீட்டில் உள்ள சி.சி.டிவி கேமராவில் உள்ள பழைய பதிவுகளை தக்க விதத்தில் சேமித்த பின்னர் அவை காட்சிகளை பதிவு செய்யும் நிலையில் ‘ஆன்’ செய்வது முக்கியம்.

* சில அவசரமான சூழ்நிலைகளில் வீட்டை திறக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அதன் அடிப்படையில் நன்றாக அறிமுகம் ஆன பக்கத்து வீட்டில் உள்ளவர் அல்லது அருகாமையில் உள்ளவர்களிடம் வெளி கேட் மற்றும் பிரதான நுழைவாசல் ஆகியவற்றின் கூடுதல் சாவியை கொடுத்து வைக்கலாம். 
Tags:    

Similar News