லைஃப்ஸ்டைல்

உங்களின் துயரம்... இச்சமூகத்தின் துயரம்...

Published On 2019-03-19 03:28 GMT   |   Update On 2019-03-19 03:28 GMT
இச்சமூகம் பெண்ணின் உடல் முழுமைக்கும் மானத்தை வைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் அவர்கள் தம் மானம் காக்கவேண்டி நிரந்தரமான மன அழுத்தத்துடனே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
கற்பிழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அந்த பெண் எழுப்பும் ஓலம் மரணத்தின் ஓலத்தை விட கொடியது. பொள்ளாச்சியில் எழுந்த அந்த ஓலம் என் செவிகளை அடைந்த போதும், ஒளி அலைகளாக என் கண்களை அடைந்தபோதும் என் ரத்தம் கொதித்தது. அப்பெண்களுக்கு ஓடிப்போய் உதவ என்னால் இயலவில்லையே என்ற நிலை எனக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

முகநூல் எனும் பெரும்பாலோர் படிக்கும் சமூக வலைதளத்தை நாம் எவ்வாறு, எதற்காக, ஏன் உபயோகிக்க வேண்டும் என்று காவல் துறையும் சமூக ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும் உரைத்த வண்ணம் உள்ளனர். ஏன் பெண்களே அவற்றை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?

“நெறி தவறினால் மானம் போம்” என்பது அறம். ஆனால் இச்சமூகம் பெண்ணின் உடல் முழுமைக்கும் மானத்தை வைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் அவர்கள் தம் மானம் காக்கவேண்டி நிரந்தரமான மன அழுத்தத்துடனே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். பிறந்த நொடி முதல் இடுகாட்டில் அழியும் வரை அவளது மானம் அவளுடைய உடலோடு ஒட்டிக்கொண்டுள்ளது. ஆகவே தான் பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் பொதுவெளிக்கு வந்தால் அது குற்றமாகிறது.

என்னதான் புராணங்களும், அறங்களும் ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்லியிருந்தாலும் கூட பெண்களின் பாதுகாப்புக்காக சட்டங்கள் பல உருவாகி ஆண்களின் வக்கிரத்தை அடக்கி வைத்துள்ளது. இருப்பினும் காமக்கொடூரர்கள் உலகு முழுவதும் பரந்து கிடக்கின்றனர். அரேபிய நாடுகள் மற்றும் வடகொரியா நாடுகளில் உள்ள நீதி மேலாண்மை இங்கும் இருந்தால் பொள்ளாச்சியின் இக்கயவர்களுடைய சமாதிகள் மீது மரங்கள் முளைத்திருக்கும்.

குற்றம் நடந்த மூன்று நான்கு நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்ணே கூட தன்னை சிதைத்தவர்களை சுட்டுக்கொல்ல வாய்ப்பினைப் பெற்றிருப்பர். நமது நாட்டிலோ எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அதற்குள் பாதிக்கப்பட்ட பெண்களின் துயரங்கள் கூடிக்கொண்டே போகும். எனவே தாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே உணரவேண்டியுள்ளது.

அறிவியல் அசுர வளர்ச்சியின் விளைவாக உருப்பெற்றுள்ள இச்சமூக வலைதளங்கள் நிறைய நன்மைகள் செய்தாலும் பொள்ளாச்சி வழக்கு போன்ற நிகழ்வுகள் பேரிடர் துயரங்களை ஏற்படுத்துகின்றது. இது போன்ற சைபர் குற்றங்கள் நமக்கு ஏற்படும் போது அதற்கான அடித்தளம் அமைத்துக்கொடுப்பதே நாம் தான் என்பதை நாம் உணரவேண்டும். எப்படிப்பட்ட தகவலை எந்த அளவுக்கு யாருடன் பரிமாறிக்கொள்ளலாம் என்பதை நாமே தான் தீர்மானிக்க வேண்டும்.

நம்மோடு தொடர்பு கொண்டிருப்பது ஆணா, பெண்ணா, என்று கூட தெரியாத நிலையில் நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் நாம் அளித்து விடுவதால் ஏற்படும் இன்னல்கள் ஏராளம். வழக்கமான குற்றங்களில் யார் எப்போது எங்கே செய்கிறார்கள் என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் சைபர் குற்றங்களை நமக்கு தெரிந்தவர்களே வேறுமுகமூடியுடன் நமக்கு அருகில் இருப்பதாக சொல்லிக்கொண்டு, வெகு தொலைவில் இருந்து நமக்கே துரோகம் செய்வது தான் வேதனை. பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் இந்த நொடியில் கூட வேறெங்காவது நடந்து கொண்டுதான் இருக்கும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சோர்ந்து முடங்கிவிடக்கூடாது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு பெண்ணுக்கு ஏற்பட அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். வலுவாக காலூன்றி போராட வேண்டிய தருணம் இது. தமிழகமே உங்களின் பக்கம் நிற்கிறது. நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று ஒரு வரி சொன்னால் சோர்ந்துபோன உங்களின் உறவினரும், நண்பர்களும் உங்களுக்காக உதவ முன் வருவார்கள். பொது மக்களும், சட்டமும் இந்த நிலையில் உங்களுக்கு நிச்சயம் துணை நிற்பர்.

உங்கள் துயரம் இச்சமூகத்தின் துயரம், மரியாதை, கவுரவம், ஏழ்மை, கற்பு, எதிர்காலம் என்றெல்லாம் உங்கள் முன் நிற்கும் தடைகளை உடைத்தெறிந்து விட்டு புறப்படுங்கள். உங்கள் உதவியின்றி சி.பி.சி.ஐ.டியோ, சி.பி.ஐயோ வெற்றிக்கரமான எந்த விசாரணை வியூகங்களையும் அமைக்க இயலாது. உங்களின் பாதுகாப்பு அரணாக உள்ள சட்டங்களை உபயோகியுங்கள். மீறியவர்களை எதிர்த்துப் போராடுங்கள். நீதி கிடைக்கும் வரை ஓயக்கூடாது. காவல் துறையில் இதுபோன்ற நிகழ்வுகளை கடமையோடும், உணர்வுபூர்வமாகவும் கையாளும் அதிகாரிகள் நிறையவே உள்ளனர்.

புகார் கொடுத்த பெண்ணின் விவரங்களை பாதுகாப்பு மற்றும் அவரது எதிர்காலம் கருதி பொது வெளியில் வெளியிடக்கூடாது என்பது சட்டமாக உள்ளது. இருப்பினும் இன்று பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் பொது வெளிக்கு வந்து விட்டது. அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதால் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்புள்ளது. பகிரங்கமாக வெளியிட்டு இருந்தால் அது காவல் துறையாகவே இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவருகிறது. ஆனால் இன்று வரை ஒரேயொரு பெண்ணைத் தவிர யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் இல்லாத நிலையில் காவல்துறையினர் என்ன செய்ய முடியும்?. வீடியோ ஆதாரங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று புகார் பெற்று எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என்று தெரியாது. பாதிக்கப்பட்டவரை போலீசார் தொடர்பு கொண்ட மாத்திரத்திலேயே அவர்கள் தம் மன உளைச்சலின் விளிம்புக்கே சென்று தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டிய நிகழ்வுகள் நிறைய உண்டு. தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. குடும்பத்தார்களும் ஒத்துழைப்பு தர மறுத்து விடுவது உண்டு.

பாதிக்கப்பட்டவர்கள் பெயர் மற்றும் குடும்ப விவரங்கள் வெளியே வராத வண்ணம் விசாரிக்கும் கடமை காவல் துறையினருக்கும், நீதிமன்றத்திற்கும் உண்டு. அதனை உறுதி செய்தால் மட்டுமே இது போன்ற வழக்குகளில் சிறப்பான விசாரணையும், தண்டனையும் எதிர்பார்க்க இயலும். அதே நேரத்தில் பத்திரிகைகளும், ஊடகங்களும் காவல் துறையை விட வேகமாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

எத்தனைதான் தவிர்த்தாலும் ஊடகங்கள் பாதிக்கப்பட்டவருடன் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து நிழற்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து வெளியிடுகின்றனர். சட்டத்திற்கு பயந்து முகத்தை மட்டும் மறைத்து வெளியிடுகின்றனர். இதனால் அச்சம் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணோ அவரது குடும்பத்தாரோ நிச்சயம் காவல் துறைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஊடகங்கள் தம் பொறுப்பை உணர வேண்டும். அதே சமயம் அரசின் விசாரணையில் நடக்கும் தவறுகளை புகார்தாரர் பாதிக்கப்படாத வகையில் பொது வெளிக்கு கொண்டுவர பத்திரிக்கைக்கும், ஊடகத்திற்கும் உரிமை உண்டு.

மு.அசோக்குமார்,
போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு)
வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்
Tags:    

Similar News