லைஃப்ஸ்டைல்

வங்கி கடன் மூலம் பழைய வீடு வாங்குபவர்களுக்கான ஆலோசனைகள்

Published On 2019-03-09 02:32 GMT   |   Update On 2019-03-09 02:32 GMT
வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் ஆகியவை வீட்டு கடன் வசதி திட்டத்தில் பழைய வீடு வாங்குவதற்கும் கடன்களை அளிக்கின்றன.
வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் ஆகியவை வீட்டு கடன் வசதி திட்டத்தில் பழைய வீடு வாங்குவதற்கும் கடன்களை அளிக்கின்றன. அவ்வாறு கடன் பெற விரும்புபவர்கள் சில அடிப்படையான விஷயங்களை அறிந்து செயல்படுவதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்க இயலும். அதன் அடிப்படையில் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம்.

தக்க மதிப்பீடு

வீட்டு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் வங்கிகள் சம்பந்தப்பட்ட வீடு அமைந்துள்ள இடம், அதன் சொத்து மதிப்பு, மனை அங்கீகாரம், வில்லங்கம் உள்ளிட்ட பல விஷயங்களை கவனிக்கின்றன. மேலும், வங்கியின் மதிப்பீட்டாளர் மூலம் வீட்டை மதிப்பீடு செய்யப்பட்டு கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில் கடன் வழங்குவது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும். அந்த அறிக்கையில் வீடு கட்டப்பட்டு முடிந்த ஆண்டுகள், அதற்கேற்ப கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், வீட்டின் தாங்குதிறன், அஸ்திவாரத்தின் நிலை போன்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கடன் தொகை குறையலாம்

கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆன பழைய வீடுகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீட்டின் மதிப்பில் 60 முதல் 70 சதவீதம் வரை கடன் தொகையாக அளிக்கலாம். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சொந்த பிளாட்டுக்கு கடன் பெறுவதாக இருப்பின், ஒரு வீட்டின் பிரிக்கப்படாத மனையின் பாகம் சுமாராக 300 அல்லது 250 சதுர அடி இருக்கக்கூடும். அந்த நிலையில் பெரிய அளவில் வீட்டு கடன் கிடைக்க வாய்ப்பில்லை. அவ்வாறு கடன் அளிக்கப்பட்டாலும் கடனை திரும்ப செலுத்துவதற்கான இ.எம்.ஐ என்ற மாதாந்திர தவணைக்கான கால அவகாசம் குறைவாக இருக்கும்.

தனி வீடுகள்

தனி வீடுகளுக்கு இடத்தின் மதிப்பு எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் சற்று எளிதாக கடன் பெற இயலும். அடுக்குமாடி வீடுகளில் மனை உரிமை முற்றிலும் ஒருவருக்கு மட்டுமே சொந்தமாக இருக்காது என்ற காரணத்தால் இடத்தின் மதிப்பு அடிப்படையில் கடன் தொகை குறைவாக கணக்கிடப்படும்.

விலையை குறைக்க வாய்ப்பு

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்காமல் பழைய வீடு வாங்குவது ஒரு வகையில் நல்லது என்ற மாற்று கருத்தையும் ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் முன் வைக்கின்றனர். அதாவது, கட்டமைப்பின் வயது காரணமாக உருவான பாதிப்புகள், அதன் தாங்குதிறம் குறைந்திருப்பது, வாங்கிய பின்னர் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் ஆகிய காரணங்களை முன் வைத்து பேரம் பேசி வீட்டின் விலையை குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக கேட்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News