லைஃப்ஸ்டைல்

ஹெல்மெட் அணிவது கட்டாயமா? கடமையா?

Published On 2019-03-01 05:26 GMT   |   Update On 2019-03-01 05:26 GMT
வற்புறுத்தலுக்காக ஹெல்மெட் அணியாமல் அது தங்களுக்கான பாதுகாப்பு என்பதை மக்கள் நினைத்து செயல்பட்டாலே விபத்துகளும், குறையும். உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டு விடும்.
என் சாண் உடம்பில் சிரசே பிரதானம். அந்த அளவுக்கு சிரசு எனப்படும் தலை முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. பொதுவாக விபத்துகளில் மற்ற உடல் உறுப்புகள் காயமடைந்தாலோ, அல்லது உறுப்புகளை இழந்தால்கூட உயிர்பிழைத்து வாழ்ந்துவிடலாம். ஆனால் தலையில் உள்காயம் பட்டவர்கள் விபத்து நடந்த சில மணித்துளிகள், அல்லது சில மணிநேரங்களில் உயிரிழப்பை சந்திக்கிறார்கள். ஏன், மூளைச்சாவு எனும் கொடியதை சந்தித்துகூட நாள்கணக்கில் செயலற்றுப்போய் பின்னர் மரணித்து விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட தலையை பாதுகாப்பது என்பது நம்மை மட்டும் நாம் பாதுகாத்துக்கொள்வதாக அர்த்தம் இல்லை. ஒருவரை விபத்து உயிரிழப்பில் இருந்து பாதுகாப்பது என்பது அவரை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வதற்கு சமம். விபத்தில் குடும்ப தலைவர் இறந்துவிட்டால் அந்த குடும்பம் நிலைகுலைந்து போய்விடக்கூடும்.

பின்னர் அந்த துயரத்தில் இருந்து மீண்டுவருவதற்குள் அந்த குடும்ப தலைவரின் சொந்தங்கள் மனதளவிலும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதை நாம் கண்கூடாக காண்கிறோம். அதனால்தான் விபத்துகளில் இருந்து தலையை பாதுகாக்கும் வகையில் தலைக்கவசத்தை (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று அரசும், நீதிமன்றங்களும் வலியுறுத்துகின்றன.

ஆனால் தலைக்கவசம் உயிர்க் கவசம் என்பதை ஒருசிலரை தவிர மற்றவர்கள் மனதில் கொள்கிறார்களா? என்றால் இல்லை. இதனால் விபத்துகளில் உயிரிழப்போரில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களே அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 2½ கோடிக்கு மேற்பட்ட வாகனங்கள் இயங்குகின்றன. இதில் 84 சதவீதம் இருசக்கர வாகனங்கள். இன்றைய காலகட்டத்துடன் கடந்த 2001-ம் ஆண்டை ஒப்பிடும்போது இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். முன்பெல்லாம் ஒரு வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது மொபட் இருக்கும். ஆனால் இப்போது வீடுகளில் ஆளுக்கு ஒன்று என்ற நிலைக்கு வந்துவிட்டது வாகன வளர்ச்சி.

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம்வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 77 ஆக இருந்தது. அதுவே கடந்த ஆண்டு (2018) 10 ஆயிரத்து 378 ஆக குறைந்துள்ளது.

இந்த உயிரிழப்புகளை சந்தித்தவர்களில் 32 சதவீதம் பேர் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள். இவர்களில் 75 சதவீதம்பேர் ஹெல்மெட் அணியாதவர்கள் என்பது கவலை தரக்கூடியது. இவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்திருப்பின் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.



அந்த அளவுக்கு ஹெல்மெட்டின் அவசியத்தை விபத்து உயிரிழப்புகள் அவ்வப்போது எடுத்தியம்பிக்கொண்டு இருக்கின்றன. ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வுகளை தமிழக காவல்துறை, போக்குவரத்து துறை அலுவலர்கள் செய்து வந்தாலும் அதற்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை. அதுதான் போகட்டும், சட்டத்தை அமல்படுத்தி இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணியச் செய்துவிடலாம் என்றாலும் அதற்கும் மக்கள் மசிந்தபாடில்லை.

விபத்து உயிரிழப்புகளை தடுப்பதற்காக மோட்டார் வாகன சட்டப்பிரிவு 129-ன்படி இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். அப்படி அணியாவிட்டால் ரூ.100 அபராதம் வசூலிக்கப் படுகிறது. அந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை ரூ.13½ கோடி அளவில் ஹெல்மெட் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிவதை மக்கள் இன்னும் முழு அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த தொகை காட்டுகிறது. சட்டத்திற்காகவோ, அரசாங்கம், கோர்ட்டுகளின் வற்புறுத்தலுக்காகவோ ஹெல்மெட் அணிவதை செய்யாமல் அது தங்களுக்கான பாதுகாப்பு என்பதை மக்கள் நினைத்து செயல்பட்டாலே விபத்துகளும், குறையும். உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டு விடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதும் மாநிலம் முழுவதும் எல்லோரும் ஹெல்மெட்டுகளை வாங்கினார்கள். சில நாட்கள் அணிந்தார்கள். இப்போது அந்த ஹெல்மெட்டுகள் வீடுகளில் கண்காணாத இடங்களில் பதுங்கிக்கிடக்கின்றன.

மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது இப்போது நூறு சதவீதம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலை அனைத்து தரப்பினரிடத்திலும் வரவேண்டும். அதேபோல் போலீசாரின் சோதனைக்கு பயந்தும், அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக மட்டுமே ஹெல்மெட்டை அணிந்து கொள்ளவேண்டும் என்பதை விடுத்து, அது நம் தலையை காக்கும், தலைமுறையை காக்கும் என்ற உள்ளுணர்வோடு அணிந்து செல்வதே சாலச்சிறந்ததாக இருக்கும்.

ஹெல்மெட் அணிவதை கட்டாயம் என நினைத்து செய்வதைவிட கடமை என நினைப்பதே சிறப்பு.

-முக்கூடற்பாசன். 
Tags:    

Similar News