லைஃப்ஸ்டைல்

கர்ப்ப கால நஞ்சு நோய்

Published On 2019-04-13 06:26 GMT   |   Update On 2019-04-13 06:26 GMT
நஞ்சு நோய் என்கிற ‘எக்ளாம்ப்சியா’ (Eclampsia) முதல் பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் தாய்மார்க்கே அதிகமாக வரும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்நோய் கடுமையான கர்ப்ப கால நோயாகும். இது சாதாரணமாக இருபத்து நான்காவது வாரத்திற்குப் பின்னரே ஏற்படும். இந்நோயை ‘எக்ளாம்ப்சியா’ (Exlampsia) என்றும் ‘எக்ளாம்ப்சியா முன்கட்ட நோய்’ என்றும் இருவகைப்படுத்தலாம். எக்ளாம்ப்சியா முன்கட்ட நோயில் மிகை இரத்த அழுத்தம், உடல் வீக்கம், சிறுநீரில் புரத இழப்பு போன்றவை மட்டும் இருக்கம். எக்ளாம்ப்சியா நோயில மேலே சொன்னவைகளோடு வலிப்பு அல்லது மயக்க நிலையும் அல்லது இரண்டுமே சேர்ந்து இருக்கலாம்.

யாருக்கு நஞ்சு நோய் வரும்?


இது முதல் பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் தாய்மார்க்கே அதிகமாக வரும். கர்ப்பிணியாய் இருக்கும் தாய்க்குச் சர்க்கரை நோயெனும் நீரிழிவு, மிகை இரத்த அழுத்த நோய் மற்றம் சிறுநீரக நோய்கள் இருந்தாலும் மனநிலை இறுக்கங்கள் இருந்தாலும் இந்நோய் வரும்.

எக்ளாம்ப்சியா முன்கட்ட நோயின் அறிகுறிகள்

இந்நோயில் மிகை இரத்த அழுத்த நோயிருப்பதால் அதற்குண்டான அறிகுளிகளான மயக்கம், தலைசுற்றல், கிறுகிறுப்பு, தலைவலி போன்றவை இருக்கலாம். உடலில் நீர் கோர்த்து உடல் வீக்கமும், கை, கால்கள் வீக்கமும் தோன்றும். சாதாரணமாகவே எழுபத்தைந்து சதவீத பெண்களுக்குக் கர்ப்பத்தின் கடைசி வாரங்களில் காலிலும், கணுக்காலிலும் வீக்கம் இருக்கும். இவ்வீக்கம் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டால் குறைந்துவிடும். குழி விழக்கூடிய, அதாவது அழுத்தினால் குழிவிழக்கூடிய வீக்கம் பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேலாக இருந்தால் அது நோயினைக் குறிக்கக் கூடியதாம். வீக்கம் முகம், கைகள், வயிற்றுப் பகுதி போன்ற இடங்களில் இருந்தால் அது நோயினால் ஏற்படக்கூடியதே ஆகும். இத்தகைய வீக்கம் இருதயச் செயலிழப்பு, இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் ஏற்படலாம்.

எந்த ஒரு கர்ப்பிணித் தாயின் எடை அரையிலருந்து ஒரு கிலோ அளவுக்கு வாரமொருமுறை கூடுகிறதோ அத்தாயை கவனமாகக் கண்காணித்தல் அவசியம். இந்த அதிகமான எடை கூடுதல் நீர் சேர்வதால் ஏற்படக்கூடிய மறைந்திருக்கும் வீக்கத்தை உணர்த்தும். அதிகமாக எடை கூடுகின்ற தாய்மார்களில் ஐம்பதிலிருந்து அறுபது சதவித நோயாளிகள் கர்ப்ப கால நஞ்சு நோயால் தாக்கப்படுவார்கள்.

இந்நோயில் மிகை இரத்த அழுத்த நோயின் அறிகுறிகளோடு வாந்தி, மங்கலான பார்வை, மேல்வயிற்று வலி, சில சமயங்களில் கண்பார்வையற்றுப் போதல் போன்றவை இருக்கலாம். இந்த கர்ப்ப கால நஞ்சு நோய் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களை கர்ப்ப காலத்திலேயே நோய் நிர்ணயம் செய்து முறையான சிகிச்சை அளித்தல் அவசியம். இல்லையெனில் தாய் மற்றும் சேய் ஆகியோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

‘எக்ளாம்ப்சியா எனும் நோயில் மிகை இரத்த அழுத்தம் மற்றும், உடல் வீக்கம் இஇருப்பதோடல்லாமல் விட்டுவிட்டு உடல் முழுவதும் வலிப்பு வரும். இந்நோய்க்கும் முறையான சிகிச்சை அளித்து, தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டும். இந்தக் கர்ப்ப கால நஞ்சு நோய் இருக்கும் தாய்மார்க்கு பூரண ஓய்வு தேவை. உடல் வீக்கம் குறைய சிறுநீர் போகும் மாத்திரைகளைக் கொடத்தல் அவசியம். மிகை இரத்த அழுத்தத்தினைக் குறைக்க இரத்த அழுத்தக் குறைப்பு மாத்திரைகள் தேவைப்படும் அல்லது ஊசிகள் தேவைப்படலாம். மேலும், தூக்க மருந்துகளும் இந்நோயினைக் கட்டுப்படுத்த அவசியம் தேவை.

இந்நோயுடைய தாய்மார்களுக்கு முறையான சிகிச்சை அளித்த பின்னர், பிரசவம் மருத்துவரின் கண்காணிப்பில்தான் செய்யப்பட வேண்டும். தேவையேற்பட்டால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டி வரும். கடுமையான கர்ப்ப கால நஞ்சு நோயிருக்கும் தாய்மார்கள் மூளையில் ஏற்படும் இரத்தப்போக்கு, மேலும் கடுமையான நுரையீரல் வீக்கத்தால் இறந்துகூடப் போக வாய்ப்புகள் உண்டு. இக்கர்ப்ப கால நஞ்சு நோயிருக்கும் தாய்க்குப் பிறக்கப்போகும் குழந்தை, தாய்க்கு நோய் கடுமையாக இருந்தால் இறப்பதற்கான வாய்ப்பு பதினைந்திலிருந்து இருபது சதவீதமாகும். இத்தாய்மார்களுக்குப் பிறக்கும் அறுபது சதவீத குழந்தைகள் குறைப்பிரசவமாகப் பிறக்க வாய்ப்புகள் உள்ளது.
Tags:    

Similar News