லைஃப்ஸ்டைல்

பிரசவத்தில் கணவரின் பங்கு என்ன?

Published On 2019-03-28 05:16 GMT   |   Update On 2019-03-28 05:16 GMT
எல்லாக் குழந்தைகளுக்கும் தாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குத் தந்தையும் முக்கியம்தான். பிரசவத்தின் போது மனைவிக்கு மனதளவில் தயாராக கணவன் உதவ வேண்டும்.
கர்ப்பம் என்பது நோயல்ல அச்சப்படுவதற்கு... அது பெண்ணுக்கே கிடைத்துள்ள ஓர் அற்புதமான அனுபவம் உணர்ந்து ரசிப்பதற்கு! கர்ப்பிணியானவள் தான் தாயாகப் போகிறோம் எனும் மகிழ்ச்சி ஒருபுறம், சுகப்பிரசவம் ஆக வேண்டும் எனும் எதிர்பார்ப்பு மறுபுறம் மனதை அழுத்த, இரு வேறு மனநிலைகளையும் சமாளித்துக்கொண்டு, தன்னைக் கவனித்துக்கொள்வதன் மூலம் வயிற்றில் வளரும் சிசுவையும் பேணிக்கொண்டு வருகிறாள்.

குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் வரப்போகிறார் எனும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் கர்ப்பிணியைப்போல் கணவருக்கும் தொற்றிக் கொள்வதுண்டு. கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே மனைவிக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளையே உதிர்க்க வேண்டும். முக்கியமாக மூன்றாவது டிரைமெஸ்டரின்போது, மனைவிக்கு ஆதரவாகவே பேச வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் வாக்குவாதம் கூடாது. மனதளவில் காயப்படுவதற்கு வாய்ப்பே தரக்கூடாது.

ஒருவேளை மனைவிக்கு சிசேரியன் தேவைப்படுமானால், அதற்கு அவர் மனதளவில் தயாராக உதவ வேண்டும். கணவரும் அதற்குத் தயாராகிவிட வேண்டும். மருத்துவர் அனுமதித்தால், பிரசவத்தின்போது மனைவியின் அருகில் கணவர் இருக்கலாம். கணவருக்கு இது ஒரு புதிய அனுபவமாகவும் மனைவிக்கு ஆறுதலாகவும் இருக்கும்.

எல்லாக் குழந்தைகளுக்கும் தாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குத் தந்தையும் முக்கியம்தான். எனவே, குழந்தை பிறந்தவுடன், எவ்வளவு விரைவில் குழந்தையைத் தூக்கிவைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு விரைவில் தூக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தந்தைக்கும் குழந்தைக்கும் உள்ள உறவு வலுப்படும். குழந்தை பிறந்த பிறகும் மனைவிக்கு உணர்வுபூர்வமாக மிகுந்த ஆதரவை அளிக்க வேண்டும். குழந்தையின் வளர்ப்பிலும் பங்கெடுத்துக்கொள்ளலாம். இவ்வாறான உதவிகள் தாயின் மனதில் உற்சாகத்தைக் கொடுக்கும். அது தேவையான தாய்ப்பால் சுரப்புக்கு உதவும்.
Tags:    

Similar News