லைஃப்ஸ்டைல்

கருச்சிதைவுக்கு பிறகான கருத்தரித்தல்

Published On 2019-01-23 03:35 GMT   |   Update On 2019-01-23 03:35 GMT
ஒரு கருச்சிதைவு நிகழ்ந்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் கருச்சிதைவுக்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்தே, அவர் அடுத்து கருத்தரிக்கக்கூடிய காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும்.
கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு, பெண்களுக்கு எளிதில் அழிக்க முடியாத வடுக்களை விட்டுச்செல்கிறது. அதற்கான ஒரே மருந்து, மீண்டும் கருத்தரித்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதுதான். ஆனால், இன்றைய காலகட்டத்தில், கருச்சிதைவு/கருக்கலைப்புக்குப் பின்னர் கருத்தரிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.

“பெண்களின் கரு எதிர்பாராதவிதமாக கலைந்துபோவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் கர்ப்பிணி மட்டுமல்லாமல், அந்தக் கருவுக்குக் காரணமான ஆணுடைய விந்துவின் ஆரோக்கியமும் கருச்சிதைவுக்கு சில சமயம் காரணமாக இருக்கலாம். மற்ற காரணிகள், கரு வளர்ச்சி தொடர்பானவையாக இருக்கலாம். இதில் ‘Anatomical Factors’ என்று சொல்லப்படும், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்ரீதியான பாதிப்புகள், 10-லிருந்து 15 சதவிகித கருச்சிதைவுகளுக்குக் காரணமாக இருக்கலாம். அதாவது, கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது, மாதவிடாய்ப் பிரச்னைகள் போன்றவை இதில் அடங்கும்.

அடுத்தது, ‘Auto-immunal Factors’. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருவளர்ச்சியைத் தாங்கக்கூடிய சக்தி இல்லாமல், கருச்சிதைவு உண்டாவது. 10-லிருந்து 15 சதவிகிதக் கருச்சிதைவுகளுக்கு இந்த ‘ஆட்டோ இம்யூனல் ஃபேக்டர்ஸ்’ காரணமாக இருக்கலாம். தொற்று காரணமாக 0.5-லிருந்து 5 சதவிகிதக் கருச்சிதைவுகள் நேரலாம். ஹார்மோன் சமச்சீரின்மை, தைராய்டு, சர்க்கரைநோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளிட்டவை 20 சதவிகிதக் கருச்சிதைவுகள் உண்டாகக் காரணமாகலாம். என்றாலும், கிட்டத்தட்ட 50 சதவிகிதக் கருச்சிதைவுகள் காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் இருக்கின்றன.

பொதுவாக, கருத்தரிப்புக்கான வாய்ப்புகள் மற்றும் சிக்கலில்லாத பிரசவத்துக்கும், பெண்ணின் வயதுக்கும் நிறைய தொடர்பு உண்டு. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு இயல்பாகவே கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க, கருமுட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொய்வுநிலையை எட்டும். இதனால்தான் 30, 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பு என்பது சற்றே சவாலான விஷயமாகிறது. ஆனால், சரிவிகித, உட்டச்சத்துமிக்க உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டால், கருமுட்டையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். லண்டனில் நடந்த ஆய்வு ஒன்று, கருச்சிதைவுக்கும் வயதுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய அட்டவணை இங்கே…

கருச்சிதைவும் கருக்கலைப்பும் பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கக்கூடியவை. ஒரு கருச்சிதைவு நிகழ்ந்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் கருச்சிதைவுக்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்தே, அவர் அடுத்து கருத்தரிக்கக்கூடிய காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும். சராசரியாக, ஒரு கருச்சிதைவுக்கு அடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகே கருத்தரிப்பு நிகழ வேண்டும்.

ஒருவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், கணவன் - மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனையின் கீழ் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல்நிலையில் இருக்கும் பெண்களும், கருத்தரிப்புக்குப் பின்னர் கர்ப்பகால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தம்பதியில் இருவரில் ஒருவருக்கு தைராய்டு, சர்க்கரைநோய் போன்ற பிரச்சனைகள் இருந்தால், கர்ப்பிணி, உட்சுரப்பியல் பரிசோதனை (Endocrinology Test) செய்துகொள்ள வேண்டும். கருவுக்கு மரபணு தொடர்பான சிக்கல் இருக்கிறதா என்பதை `Karyotyping Test’ மூலம் அறிந்துகொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்ணின் மனநிலை நிம்மதியாக இருக்கவேண்டியது அவசியம். எனவே ஒரு கருச்சிதைவுக்குப் பின்னர், அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளே அவரைச் சூழ்ந்திருக்க வேண்டும்; எதிர்மறையான பேச்சுகளையும் அச்சுறுத்தல்களையும் குடும்பமும் சுற்றமும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
Tags:    

Similar News