லைஃப்ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் மனநலப்பிரச்சனைக்கு என்ன சிகிச்சை?

Published On 2019-01-21 05:55 GMT   |   Update On 2019-01-21 05:55 GMT
ஏற்கெனவே மனநலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்து வரும் பெண்கள் கர்ப்பம் தரித்ததும் முதல் முறையாக மருத்துவரிடம் பரிசோதனைக்கு வரும்போது அந்த சிகிச்சை விபரத்தை மகப்பேறு மருத்துவரிடம் கூறிவிட வேண்டும்.
ஏற்கெனவே மனநலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்து வரும் பெண்கள் கர்ப்பம் தரித்ததும் முதல் முறையாக மருத்துவரிடம் பரிசோதனைக்கு வரும்போது அந்த சிகிச்சை விபரத்தை மகப்பேறு மருத்துவரிடம் கூறிவிட வேண்டும். மரபுரீதியாக மனக்கோளாறு உள்ளதென்றால் அதையும் அவரிடம் தெரிவித்துவிட வேண்டும்.

முந்தைய கர்ப்பத்தின்போதும், பிரசவத்துக்குப் பிறகும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த விவரத்தையும் தெரிவித்துவிட வேண்டும். அப்போதுதான் தற்போதைய பிரசவத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடியும். முக்கியமாக, ஏற்கெனவே சாப்பிட்டு வரும் மனநல மாத்திரைகளைத் தொடரலாமா அல்லது புதிய மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதைத் தெளிவாகத் தெரிந்து பின்பற்ற வேண்டும்.

கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.

கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப் பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும்.
நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் கர்ப்பிணிக்கு ஓய்வு கொடுக்க மட்டுமல்லாமல், அவருக்கு உடல், மனம் இரண்டையும் வலிமையாக்கி, பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதற்குத் தாய்தான் சிறந்தவள் என்பதை நம் முன்னோர் தெரிந்து வைத்திருந்த காரணத்தால், இந்த வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அடுத்து வளைகாப்பு என்று ஒரு சடங்கு நடத்தப்படுவதற்கும் காரணம் இருக்கிறது. ‘எங்களை எல்லாம் பார்... நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்? நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்... தைரியமாக இரு!’ என்று கர்ப்பிணிக்கு மனதளவில் உறுதியை அதிகப்படுத்தவும், பிரசவ பயத்தைப் போக்கவும் இது உதவுகிறது.

இப்போதைய சூழலில் இம்மாதிரியாக கர்ப்பிணியை மனதளவில் தயார்படுத்தும் உறவுமுறைகளும் உறவினர்களும் குறைந்து வருவதைக் காண்கிறோம்.  இன்றைய இளைய சமுதாயம் இது குறித்து யோசிக்க வேண்டும். எதிர்கால சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருதி, நம் பாரம்பரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைக்குத் திரும்ப வேண்டும்.

Tags:    

Similar News