லைஃப்ஸ்டைல்

பெண்களுக்கு பிடித்த திருபுவனம் பட்டு

Published On 2019-03-26 03:22 GMT   |   Update On 2019-03-26 03:22 GMT
தமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றுவதில் பட்டுப்புடவைகளுக்கு தனித்துவமான இடம் உண்டு. சாதாரண உடையில் வருபவர்கள் கூட பட்டுச்சேலை உடுத்தி வந்தால் தனி மிடுக்குடன் தோற்றமளிப்பார்கள். தமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு. மற்ற ஊர்களில் உற்பத்தி செய்யும் பட்டுப்புடவைகளை விட, திருப்புவனம் பட்டு கலைநுணுக்கம் மிக்கது. ஜவுளி கடைகளில் திருபுவனம் பட்டுப்புடவைகளை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். அதற்கு காரணம், அதன் விசிறி மடிப்பு. அதுவே திருபுவனம் பட்டுக்கு கூடுதல் பெருமையும் சேர்க்கிறது. தற்போது திருபுவனம் பட்டுப்புடவைக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

கோவில் நகரமான கும்பகோணத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது திருபுவனம். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் நெசவுத்தொழில்தான் செய்து வருகிறார்கள். அவர்கள் கைதேர்ந்த நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ள பட்டுப்புடவைகள் நெய்வதில் திறமை மிக்கவர்கள். ஒரு பட்டுப்புடவை உற்பத்தி செய்ய குறைந்தது 15 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். மாதத்திற்கு ஒரு குடும்பம் 2 சேலைகள் வரையே தயார் செய்கிறது. இதில் குடும்பத்தில் உள்ள அனைவருமே பங்கு பெறுகிறார்கள். இங்கு ஏராளமான பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (திகோசில்க்ஸ்).

இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளில் குறிப்பிடத்தக்கது, வனசிங்காரம். இது முழுவதும் ஜரிகை இழைகளினால் சிறந்த வேலைப்பாடுகளுடன் நெய்யப்பட்ட பட்டுப்புடவை. இந்த பட்டுப்புடவை திருபுவனம் நெசவாளர்களின் கைத்திறனுக்கு சான்றாகவும் விளங்குகிறது. இதில் மான், மயில், புலி ஆகிய உருவங்கள் மிகவும் தத்ரூபமாக இடம்பிடித்து கண்களுக்கு விருந்தளிக்கும். இதே போல் பலவண்ணங்களில் புதிய புதிய டிசைன்களை நெசவு தொழிலாளர்கள் உருவாக்குகிறார்கள். இந்த சங்கத்தின் கைதேர்ந்த நெசவாளர்களால் தயாரிக்கப்படும் ‘ஜாங்களா’ ரக கல்யாண பட்டுப்புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ரஷிய முன்னாள் அதிபர் பிரஷ்னேவும், ராணி எலிசபெத்தும் இந்தியா வந்தபோது அவர்களுக்கு போர்த்தப்பட்ட பொன்னாடைகள் இங்குதான் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

திருபுவனம் பட்டுச்சேலையில் இடம்பிடிக்கும் ஒரிஜினல் ஜரிகைகளும் அதற்கு கூடுதல் பெருமைத் தேடி தருகிறது. ஜரிகை எடையில் 40 சதவீதம் வரை வெள்ளியும், 0.50 சதவீதம் தங்கமும் உள்ளது. பட்டுப்புடவை ஒன்றின் எடை 400 கிராம் முதல் 1 கிலோ வரை இருக்கும். இதில் 475 கிராம் பட்டும், மீதமுள்ளது ஜரிகையின் எடையாகவும் அமைந்திருக்கும்.

சாயமேற்றப்பட்ட பட்டுநூல் மற்றும் ஜரிகை போன்றவை சங்கத்தின் தனி கண்காணிப்பாளர்களின் கீழ் புடவையாக நெசவு செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் சேலைகளின் எடையை பொறுத்தே அதன் வலு இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் நெசவு செய்ய உபயோகப்படுத்தப்படும் பட்டுநூலின் வலு மற்றும் அடர்த்தியின் அடிப்படையிலேயே அதன் ஆயுள் நீடிக்கிறது. திருபுவனம் பட்டு ரக சேலைகள் உடுத்திக்கொள்வதற்கு அழகாகவும், உறுத்தாமலும் இருக்கும். சேலைகளுக்கு வெளிப்படையான முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, தரம், ரசனைக்கேற்ற வண்ணம் மற்றும் புதிய வடிவமைப்புகளில் புடவைகளை உருவாக்குவதற்கு சங்கத்தில் 3 பேர் கொண்ட வடிவமைப்பு குழுவும் உள்ளது.


இந்த கூட்டுறவு நிறுவனம் மூலம் 1992-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வனசிங்காரம் என்ற பட்டுப்புடவை சிறந்த புடவை வடிவமைப்பிற்கான விருதை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறித்து திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இணை இயக்குனர் மகாலிங்கம், ‘‘2014-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்தோம். தற்போது அதற்குரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் திருபுவனம் பட்டுச்சேலை என்ற சொல்லை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. பட்டுக்கு தனி மரியாதை கிடைப்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரிக்கும். இதன் மூலம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேலும் முன்னேற்றம் அடையும். பட்டு சேலை உற்பத்தி மூலம் பட்டு விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள் என 1 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு பட்டு உற்பத்தி இணையத்தின் மூலம் பட்டு நூல் கொள்முதல் செய்து அதனை சாயம் போட்டு நெசவாளர்களுக்கு வினியோகிக்கிறோம். அவர்கள் அதை புடவையாக உற்பத்தி செய்து கொண்டு வந்து கொடுக்கிறார்கள். காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளுக்கு எடை அதிகம். இவற்றின் எடை குறைவு. தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறையில் இருந்து வாங்குகிறோம். கலை நயத்துடன் தயார் செய்வதால் பெண்களுக்கு இதை உடுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதனால் தான் திருபுவனம் பட்டுச்சேலையை தேடி வருகிறார்கள்.

பருத்தி என்பது அரசன் என்றால் பட்டு, ராணி போன்றது. இதுவரை சாமுத்ரிகா, ஜாங்களா, வனசிங்காரம், கோகுலவந்தனா என 30-க்கும் மேற்பட்ட ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பழங்கால மற்றும் நவீன கால ரகங்களை சேர்த்து புதிய ரகங்களை உருவாக்கி வருகிறோம்’’ என்றார்.
Tags:    

Similar News