லைஃப்ஸ்டைல்

சிறுதானிய பாசிப்பருப்பு இடியாப்பம்

Published On 2019-04-03 04:35 GMT   |   Update On 2019-04-03 04:35 GMT
சிறுதானியங்களில் சத்தான உணவுகளை செய்யலாம். இன்று சிறுதானியம், பாசிப்பருப்பு சேர்த்து சத்தான இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பதப்படுத்திய சிறுதானிய மாவு (சாமை, குதிரைவாலி) - தலா 1 கப்.
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை, துவரம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4-5,
கட்டி பெருங்காயம் - சிறிது,
பாதாம், முந்திரி - தலா 6.

தாளிக்க :

கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிது,
நெய், உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
மஞ்சள்தூள் - சிறிது.



செய்முறை

பாசிப்பருப்பை வேக வைத்து கொள்ளவும்.

வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

சாமை, குதிரைவாலி மாவை லேசாக வறுத்து, 1½ கப் வெந்நீர், உப்பு சேர்த்து கிளறி இட்லி சட்டியில் இடியாப்பமாக பிழிந்து ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து தாளிக்க வைத்திருக்கும் பொருட்களை தாளித்து, மஞ்சள்தூள், உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து இடியாப்பத்தை உதிர்த்து போட்டு நன்கு கலந்து, வறுத்து அரைத்த பொடிகளை தூவி கலந்து, சூடாக சிறிது நெய் விட்டு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: மேலும் ருசியாக்க வறுத்த முழு முந்திரி, தேங்காய்த் துருவல், மல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து கலந்து பரிமாறலாம். இதேபோல் வறுத்த சேமியாவை ஆவியில் வேகவைத்து தாளித்தும் செய்யலாம்.
Tags:    

Similar News