லைஃப்ஸ்டைல்

கோடையில் இருந்து உடலைக் காக்க...

Published On 2019-05-03 03:04 GMT   |   Update On 2019-05-03 03:04 GMT
வெயில் கொடுமை ஆரம்பித்து விட்டது. இச்சமயத்தில் உடலுக்கு என்னென்ன தொல்லைகள் ஏற்படும், அதை எப்படிச் சமாளிப்பது? அதைப்பற்றி சற்று விவரமாகப் பார்ப்போம்.
குளிர்காலத்தில், ‘அப்பப்பா என்ன குளிர்; தாங்கவே முடியவில்லை, வெயில் காலமே பரவாயில்லை போல் இருக்கிறது’ என்று சொல்வதுண்டு. வெயில் காலம் வந்துவிட்டால், அந்த வெயிலின் கொடுமையை என்னவென்று சொல்வது, வியர்வையாகக் கொட்டுகிறது. இதற்கு குளிர் காலம் எவ்வளவோ மேல்’ என்றும் கூறுவதுண்டு. அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது இதற்கு மிகவும் பொருந்தும். கோடை காலம் தொடங்கி விட்டது, வெயில் கொடுமை ஆரம்பித்து விட்டது. இச்சமயத்தில் உடலுக்கு என்னென்ன தொல்லைகள் ஏற்படும், அதை எப்படிச் சமாளிப்பது? அதைப்பற்றி சற்று விவரமாகப் பார்ப்போம்.

தோல் தான் நமது உடலின் பெரிய உறுப்பாகும். உடலுக்கு கவசம் போல் வெளிக்காயம் வராமல், தோல் தான் நமது உடலைப் பாதுகாக்கிறது. வைட்டமின் டி உற்பத்தி செய்து உடல் எலும்பை உறுதியாக வைத்துக்கொள்கிறது. உடலுக்கு அழகை கொடுக்கிறது. வியர்வை மூலம் உடல் சீதோஷ்ணத்தை சரிசமமாக வைத்துக் கொள்கிறது. அதிக வியர்வையினால், உடலிலுள்ள உப்பு மற்றும் நீர் அதிகமாக உடலில் இருந்து வெளியேறுவதனால் உடல் மிகவும் பலவீனம் அடையும். லேசாக களைப்பு, மயக்கம், தலைவலி, குமட்டல் போன்ற தொல்லைகள் தோன்றும். நாக்கு வறட்சி அடையும். சிறுநீர் செல்வது குறையும். நீர்க் கடுப்பும் சிலருக்கு உண்டாகும். உடலில் போதிய தண்ணீர் இல்லாததனால் மலச்சிக்கல் ஏற்படும். இரவில் தூக்கம் சரியாக இருக்காது.

சூரிய ஓளியில் உள்ள யு.வி கதிர்கள் தோல் மேல் தொடர்ந்து படும்போது தோல் நிறம் சிவக்கும், தோல் அரிக்கும் அல்லது தடித்துப்போகும் அதிகமாக வியர்த்து கொட்டும். அதனால் உடலில் அரிப்பு தோன்றும். முதுகு மற்றும் பல உடற்பாகங்களில் வியர்க்குரு தோன்றும். உடலின் பல பகுதிகளில் வேனல் கட்டிகள் எனப்படும் சிறு, சிறு கொப்பளங்கள் தோன்றும்.

முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இவை அதிகம் வர வாய்ப்புண்டு. முகத்தில் உள்ள முகப்பரு அதிகரிக்க வாய்ப்புண்டு. தோல் வனப்பு குறைந்து, சுருக்கம் ஏற்படும். உடலில் பூஞ்சைக் காளான் நோய்த் தொற்று ஏற்படலாம். அது அக்குள் மற்றும் இடுப்புப் பகுதியில் அதிகமாகத் தோன்றும். வெயில் காலத்தில், அதிகமாக உடற்பயிற்சி செய்த பின்பு காலில் உள்ள ஆடு சதையில் அதிகமாக வலி உண்டாகும். உப்பு கலந்த தண்ணீரைக் குடித்தால் வலி உடனே சரியாகிவிடும். இத்தகைய தொல்லை வருபவர்களுக்கு, சிறிது உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால், சதையில் வலி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

உடலின் வெப்பம் அதிகரிக்கும் போது, முதலில் அதிக தலைவலி, குமட்டல், வாந்தி ஏற்படும். பின்பு சதையில் ஓரு வித நடுக்கம், மனக்குழப்பம், மனப்பதற்றம், மயக்க நிலை மற்றும் சுயநினைவு இழப்பும் ஏற்படலாம். மூளையில் உடல் வெப்பத்தை கண்காணிக்கும் மையம் செயல் இழந்து விடுவதால் இத்தொல்லை ஏற்படுகிறது. உடலைத் தொடும்போது மிகவும் சூடாக இருப்பது தெரியும். வியர்வை சிறிதும் இருக்காது. ரத்த அழுத்தம் குறையும், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழக்க நேரிடும். பாதிக்கப்பட்டவரை உடனே தனி அறைக்கு எடுத்துச் சென்று குளிர்ந்த நீரால் குளிப்பாட்ட வேண்டும். பனிக்கட்டிகளை அக்குள் மற்றும் இடுப்புப் பகுதியில் வைக்க வேண்டும். மின் விசிறியை உபயோகித்தோ அல்லது குளிர்சாதனப் பெட்டியின் உதவியுடனோ உடலின் சூட்டைக் குறைக்க வேண்டும். திரவத்தை ஊசி வழியாக உடலினுள் செலுத்த வேண்டியிருக்கும்.

முடிந்தவரை, அதிகமாக வெயில் இருக்கும் சமயத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும். வெளியே போவதற்கு முன்பு தண்ணீர், சிறிது உப்பு கலந்த மோர் அல்லது பழரசம் அருந்துவது நல்லது. வெளியே போகும் போது அவசியம் குடை எடுத்துச் செல்லவும். தலையில் ஏற்படும் சூட்டைத் தணிக்க தலையில் தொப்பி அணியலாம். குறைந்தது 2, அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். இதய நோய் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்கள் டாக்டரின் அலோசனைப்படி தேவையான நீரை அருந்தலாம். வெயில் அதிகம் இருந்தாலும் முதியவர்களுக்கு தாகம் அவ்வளவாக எடுக்காது. ஆகையால் போதிய தண்ணீர் குடிக்க மாட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் முதியவர்களை போதிய தண்ணீரை குடிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தர்பூசணி, இளநீர், ஆரஞ்சு போன்ற பழரசங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். கோடைக்கேற்ற பழம் நுங்கு நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியை தரும், பதனீர் கோடையில் உடலுக்கு மிகவும் நல்லது. மசாலா அதிகம் உள்ள உணவை தவிர்க்கவேண்டும். அல்லது குறைக்கலாம். உதாரணம்: அசைவ உணவு. கம்பு அல்லது ராகியில் கூழ் செய்து அதில் கெட்டி தயிர், சிறு வெங்காயம், உப்பு சிறிது போட்டு மண் பாத்திரத்தில் வைத்திருந்து பருகலாம் அல்லது சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து பருகினால் வெயிலின் தாக்கத்திலிருந்தும், உடல் சூட்டையும் குறைக்கும். எளிதில் செரிக்ககூடியது. மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சி தரவல்லது. செயற்கைப் பானங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

கண்கள் மிகவும் சூடாக இருந்தால் வெள்ளரிக்காயை நறுக்கி கண்கள் மேல் சிறிது நேரம் வைத்தால், கண் சூடு குறையும். காற்றோற்றட்டமுள்ள அறையில் முடிந்தவரை இருந்தால் நல்லது. மின் விசிறி, ஏர்க்கூலர், குளிர் சாதனப் பெட்டி ஆகிய உபகரணங்களைத் தேவைக்கேற்ப உபயோகிக்கலாம். படுக்கை அறையில் வெட்டிவேர் கொடியைத் தண்ணீரில் நனைத்துத் தொங்கவிட்டால் அறை குளிர்ச்சியாக இருக்கும்.

வியர்க்குரு அதிகம் இருந்தால் கேலமைன் கிரீமை உடலுக்குத் தடவலாம். லேசான பருத்தியிலான அல்லது கதர் ஆடைகளை அணிவது நல்லது. காலையிலும், இரவிலும் குளித்தால் உடல் சூடு குறையும். கண்ணிற்கு குளிர்ச்சி தரும் கண்ணாடியை உபயோகப்படுத்தலாம். அரிப்பு அதிகமாக இருப்பின், டாக்டரை கலந்து அதற்குத் தேவையான மாத்திரைகளை சாப்பிடவேண்டும். ஆகவே கோடையில் குளிர்ச்சி பெற தண்ணீர், மோர், பழரசம், பதநீர், நுங்கு, கஞ்சி போன்றவைகளை தினமும் சேர்ந்துக்கொண்டு, லேசான பருத்தி ஆடை அணிந்து, தினமும் இருமுறை குளித்து வந்தால் போதும். நாம் இருக்கும் இடத்திலேயே ஊட்டியின் குளிர்ச்சியை ஓரளவிற்கு அனுபவிக்க முடியும்.

டாக்டர் வி.எஸ்.நடராஜன், முதியோர் நல மருத்துவர், முன்னாள் தலைவர்,

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை.
Tags:    

Similar News