லைஃப்ஸ்டைல்

இரத்தவங்கி: செயல்முறையும், சீர்கேடுகளும்...

Published On 2019-03-30 03:42 GMT   |   Update On 2019-03-30 03:42 GMT
இரத்த வங்கியில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், பரிசோதனையாளர்களும் தகுந்த கல்வியும், சிறப்பு பயிற்சியும் பெற்றவர்களாக இருப்பதால் சிறிய, சிறிய தவறுகளும் எளிதாக கண்டு பிடிக்கப்பட்டு, நிவர்த்தி செய்யவும், தவிர்க்கவும் முடியும்.
சில மாதங்களுக்கு முன்னர், சாத்தூரை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளவரின் இரத்தம் செலுத்தப்பட்டு அந்த அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் பிறந்து இரண்டு மாதம் ஆன அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று முற்றிலும் இல்லை என்ற அதிகாரபூர்வமான அறிக்கை நமக்கு ஆறுதலும், நிம்மதியும் தருகிறது. என்றாலும் கடந்த மூன்று மாதங்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களில் எச்.ஐ.வி. தொற்று இல்லாத இரத்தம் ஏற்றப்பட்டு 20 கர்ப்பிணி பெண்கள் இறந்து போய் இருக்கிறார்கள் என்ற தகவல் மீண்டும் நமக்கு பேரதிர்ச்சியைத் தருகிறது. துறை ரீதியான நடவடிக்கைகள் மருத்துவர்கள் மற்றும் 12 மருத்துவ ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், நமக்கு ஏற்புடையதாக இல்லை.

பொதுவாக ஒருவருக்கு இரத்தம் ஏற்றப்படுவதற்கு முன்பு மருத்துவர்கள் அவரது இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்வர். இரத்தம் ஏற்றப்பட்டவுடன் 10 நிமிடத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும். இரத்தம் ஏற்றப்பட்டவுடன் குளிர், நடுக்கம் ஏற்பட்டால் உடனே இரத்தம் ஏற்றுவதை நிறுத்திவிட்டு ஒவ்வாமைக்கான மருந்துகளை கொடுக்க வேண்டும். இதில் பாதிப்புகளை தடுத்து விடமுடியும். இரத்தம் செலுத்தப்பட்டவுடன் 30 நிமிடத்துக்கு ஒரு முறை இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.

அந்த நபரின் சிறுநீரை சேகரித்து பரிசோதனை செய்ய வேண்டும். அதில் இரத்தம் கலந்து வந்தால் கோளாறாகி விடும். 24 மணி நேரம் கடந்தவுடன் மீண்டும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் பிரச்சினை இல்லை என்றால் ஆபத்து இல்லை. இரத்தம் ஏற்றும்போது செவிலியர்கள் அருகில் இருந்து கவனிக்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இரத்தம் செலுத்தியவர்கள் இந்த முறைகளை சரியாக பின்பற்றாமல் கவனக்குறைவாக செயல்பட்டு இருந்ததாலோ அல்லது காலாவதியான இரத்தத்தை செலுத்தியதாலோ 20 கர்ப்பிணி பெண்கள் இறந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நேர்ந்துள்ளது.

ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு அதிக இரத்தம் இழக்கும் போது அவரைக் காப்பாற்ற இன்னொருவர் தானம் செய்த இரத்தமே தேவைப்படுகிறது. பெரிய அறுவை சிகிச்சை செய்யும் போது ஏற்படக்கூடிய இரத்த இழப்பிற்கு ஈடு செய்ய தானம் செய்யப்பட்ட இரத்தமே தேவைப்படுகிறது. சாதாரண பிரசவம் ஆன சில பெண்களுக்கு உதிரம் நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் போது, அந்த பெண் இறக்காமல் இருக்க இரத்தமே தேவைப்படுகிறது. அதிகப்படியான இரத்த சோகை, ஹூமோபிலியா என்ற இரத்த போக்கு நோய், பெரிய தீக்காயங்கள் உள்ளவர்களுக்கும் இரத்தம் செலுத்துவதே உயிர் காக்கும் நடவடிக்கையாக இருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது மனித இரத்தம் உயிர் காக்கும் மா மருந்தாகவே தெரிகிறது. இதனால் தான் இரத்தம் ஒரு மருந்தாக அறிவிக்கப்பட்டு, இரத்த வங்கிகள் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் மேற்பார்வையில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் பல நடந்து வந்தாலும் செயற்கை முறையில் அங்கீகரிக்கப்பட்ட இரத்தம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. எனவே தானத்தில் சிறந்தது இரத்த தானம் என்று மனித கொடையாளிகளை நம்பியே இரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 2015-ன் கணக்கின்படி 304 இரத்த வங்கிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 264 இரத்த வங்கிகளே செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 94 இரத்த வங்கிகள் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் உதவி பெற்று செயல்படுகின்றன. மீதமுள்ள 170 இரத்த வங்கிகள் (நாக்கோ) உதவியின்றி பெரும்பாலும் தனியார் மூலம் நடைபெற்று வருகின்றன. 76.4 சதவீத இரத்த வங்கிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சார்ந்தன. மீதம் உள்ளவை தனியார் இரத்த வங்கிகளாக உள்ளன.

இவற்றில் 108 இரத்த வங்கிகள் (41 சதவீதம்) சென்னை, கோயம்புத்தூர், காஞ்சீபுரம், சேலம் மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் அமைந்துள்ளன. 10 லட்சம் மக்கள்தொகைக்கு 3.7 சதவீத இரத்த வங்கிகள் என்ற மாநில சராசரிக்கு குறைவாக தர்மபுரி (2 சதவீதம்) கிருஷ்ணகிரி் (2.7 சதவீதம்) ஆகிய இரண்டு மாவட்டத்தில் உள்ளன. 104 இரத்த வங்கிகளில் மட்டுமே இரத்தக்கூறுகள் பிரித்து எடுக்கும் வசதி உள்ளன.

அனைத்து இரத்த வங்கிகளுமே அனுமதி பெற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், 38.4 சதவீதம் இரத்த வங்கிகள் மட்டுமே 2015-ம் ஆண்டு நிலவரப்படி நிலுவையில் உள்ள அனுமதியைப் பெற்றிருந்தன. மீதம் உள்ளவை அனுமதி புதுப்பிக்கப்படுவதற்காக விண்ணப்பித்து இருந்தன. இவைகளை நேரில் சென்று பார்வையிட்டு எத்தனை பேருக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் என்ற விவரம் தெரியவில்லை. 2015-ம் ஆண்டு கணக்கின்படி சேகரிக்கப்பட்ட இரத்த யூனிட் எண்ணிக்கை 8,44,908. இவற்றில் 93.1 சதவீதம் தன்னார்வ இரத்த கொடையாளிகள் மூலம் பெறப்பட்டன. மீதமுள்ளவை நோயாளிகளின் உறவினர் நண்பர்கள் மூலம் பெறப்பட்டன.

சராசரியாக ஒவ்வொரு இரத்த வங்கியும் ஆண்டுக்கு 3500 யூனிட் இரத்தம் சேகரித்து, பராமரித்து தேவையுள்ளவர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த அனைத்து செயல் முறைக்கும் பிஇரத்தியேகமான தேசிய வங்கிகள் வழிகாட்டுதல் உள்ளது. அனைத்து வங்கிகளும், ஒவ்வொரு முறையும் இவற்றை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு இரத்த வங்கியும் இரத்த யூனிட்டுகளை சேமித்து வைக்க பிஇரத்தியேகமான இரத்த வங்கி ரெப்ரிஜீரேட்டர்களை வைத்திருக்க வேண்டும். தடையில்லாத தொடர் மின்சாரம் கிடைத்திட பிஇரத்தியேக ஜெனரேட்டரை வைத்திருக்க வேண்டும்.

இரத்தம் ஒரு மருந்து என்பதால், மற்ற மருந்துகளைப் போல காலாவதி தேதி என்ற ஒன்று இரத்தத்திற்கும் உண்டு. 2 டிகிரி முதல் 6 டிகிரிவரை பாதுகாக்கப்படும் சாகம் என்ற திரவத்துடன் கலக்கப்பட்ட முழு இரத்தம், சிவப்பணு கூறு இரத்தம் ஆகியவை 42 நாட்கள் வரை வைத்திருக்கலாம். இரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்மா என்ற திரவம் (மைனஸ் 30 டிகிரி) 1 ஆண்டு வரை வைத்திருக்கலாம். வெளியே எடுத்த உடன் “தாயிங்க்” உஷ்ணமேற்றுதல் முறைப்படி குறிப்பிட்ட அளவு சூடேற்றி 30 நிமிடத்துக்குள் ஆரம்பிக்க வேண்டும். 1 மணி முதல் 4 மணிக்குள் மருத்துவ கண்காணிப்புடன் நரம்பின் வழியாக செலுத்திவிட வேண்டும். கெட்டுபோன இரத்தம் பார்த்தாலே தெரியும்படி இருக்கும். திரி, திரியாக தெரிந்தாலே அதனை உபயோகிக்கக்கூடாது.

இரத்த வங்கியில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், பரிசோதனையாளர்களும் தகுந்த கல்வியும், சிறப்பு பயிற்சியும் பெற்றவர்களாக இருப்பதால் சிறிய, சிறிய தவறுகளும் எளிதாக கண்டு பிடிக்கப்பட்டு, நிவர்த்தி செய்யவும், தவிர்க்கவும் முடியும். சரியாக செயல்படுத்தப்பட்டால் இரத்தம் ஏற்றுதல் ஆபத்தில்லாத ஒரு எளிதான முறை. பலருக்கு உயிர்காக்கும் சிறந்த மருந்தாக இரத்தம் இருந்து வருகிறது. சரியான இரத்தம், சரியான நேஇரத்தில், சரியான முறையில், சரியான நபருக்கு செலுத்தப்பட்டால் நன்மைகள் கோடியளவு கிடைக்கும். அனுமதிக்கப்பட்ட செயற்கை இரத்தம் வரும்வரை, மனித இரத்த இழப்பிற்கு மற்றொரு கொடையாளியின் இரத்தமே ஈடுசெய்யும்.

கனிவுடனும், கவனமுடனும் செயல்படுவோம். உயிர்களைக் காப்போம்.

டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன்,

முன்னாள் துணை இயக்குனர்,

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்.

Tags:    

Similar News