லைஃப்ஸ்டைல்

மருத்துவ குணம் நிறைந்த நெல் ரகம்

Published On 2019-03-28 03:06 GMT   |   Update On 2019-03-28 03:06 GMT
நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் ரகமான காட்டுயாணம், மற்ற பாரம்பரிய நெல் ரகங்களைவிட கூடுதல் மருத்துவ குணம் கொண்டது.
நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் ரகமான காட்டுயாணம், மற்ற பாரம்பரிய நெல் ரகங்களைவிட கூடுதல் மருத்துவ குணம் கொண்டது. பாரம்பரிய நெல் ரகங்களில் இது நீண்ட காலமாக பயன்பட்டு வருகிறது. எந்த தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய நெல் ரகம் காட்டுயாணம். வறட்சி, வெள்ளத்திலும் கூட மகசூல் கொடுக்கும் நெல் ரகம் இது. அதிகபட்சம் 7 அடி வளரும்.

காட்டுயாணம் சாகுபடி செய்த வயலில் யானை புகுந்திருந்தால்கூட வெளியே தெரியாது. அதனால்தான் இந்த ரகத்துக்கு காட்டுயாணம் என்று பெயர் வந்திருக்க வேண்டும். இதன் அரிசியை மண் பானையில் சமைத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தை தொடர்ந்து ஒரு மண்டலத்துக்குச் சாப்பிட்டுவந்தால், எந்த நோயில் பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடந்தாலும் தெம்பாக எழுந்து நடக்க முடியும். நீரிழிவு நோய்க்கும் நல்ல பலன் அளிக்கக்கூடியது.

இந்தக் காட்டுயாணம் பச்சரிசியை கஞ்சி காய்ச்சி, அதில் கரு வேப்பிலையைக் கொத்தாகப் போட்டு மூடிவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புண் ஏற்பட்டவர்களுக்கு கூடப் பலன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. காட்டுயாணத்தின் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மற்ற நெல் ரகங்களைவிட தனிச்சிறப்பு கொண்டது காட்டுயாணம். 2 சால் உழவு செய்து ஏக்கருக்கு 30 கிலோ விதைத்து, மீண்டும் ஒரு சால் உழவு செய்துவிட்டு, பின்னர் அறுவடைக்கு மட்டும் போனால் போதும். இதைத்தான் நம் முன்னோர்கள் ‘விதைப்போம் அறுப்போம்‘ என்றார்கள். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 24 மூட்டை மகசூல் தரக்கூடியது. 180 நாள் வயதுடையது. ரசாயன உரம் பூச்சிக்கொல்லி இல்லாமல் நல்ல மகசூல் தரக்கூடியது. ஒரு மாதம் தண்ணீர் இல்லாவிட்டாலும், நேரெதிராக தண்ணீர் சூழ்ந்திருக்கும் காலங்களில் கூட பயிர் வீணாகாது.
Tags:    

Similar News