லைஃப்ஸ்டைல்

மனஅழுத்தத்தையும் மகிழ்ச்சியாக மாற்றலாம்

Published On 2019-03-27 03:14 GMT   |   Update On 2019-03-27 03:14 GMT
இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம். இது உளவியல் ரீதியாக மட்டுமின்றி உடலியல் ரீதியாகவும் மனிதர்களை பாதிக்க செய்கிறது.
இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம். இது உளவியல் ரீதியாக மட்டுமின்றி உடலியல் ரீதியாகவும் மனிதர்களை பாதிக்க செய்கிறது. மகிழ்ச்சியை தொலைத்து விட்டு நிம்மதியின்றி தவிப்பவர்கள் அதற்கு காரணமாக சொல்வது இந்த மனஅழுத்ததைத்தான்.!

மன அழுத்தம் மக்களை எந்த வகையில் பாதிக்கிறது?

நம் முன்னோர்கள் இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தார்கள். போதுமென்ற மனம் அவர்களிடம் இருந்தது. எதிலும் பேராசையோ பரபரப்போ இருந்ததில்லை. இதனால் மன அழுத்தமும் இல்லை. இன்றைய காலத்து மக்கள் எந்திரத்தனமான அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே குடும்பம், வேலை, தொழில், பணம், படிப்பு என எதுவானாலும் இவற்றின் அன்றாட செயல்களில் கொஞ்சம் மாறினாலோ அல்லது அதிகரித்தாலோ உடனே ஏதோ பெரிய பிரச்சினை வந்து விட்டதாக நினைத்து மூச்சு திணறி போகிறார்கள். அது தொடர்பாக யாராவது கேள்வியோ விளக்கமோ கேட்டு விட்டால்போதும் நெஞ்சு படபடத்து “எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம்” என்று புலம்புகிறார்கள்.

இந்த மனஅழுத்தம்தான் அவர்களை துயரத்துக்குள் அமிழ்த்தி விடுகிறது. வாழ்க்கையே இருண்டு விட்டது,எதிர்காலம் என்ன ஆகுமோ என்று அச்சப்படுகிறார்கள். இதனால் கையில் இருக்கும் வாழ்வை அனுபவிக்காமல் நழுவ விட்டு விடுகிறார்கள்.

வாழ்க்கை இனிதாக அமைய மன அழுத்தத்தை எவ்வாறு மடைமாற்றம் செய்ய வேண்டும்?

மன அழுத்தம் குறித்து அமெரிக்காவில் பல ஆண்டுகாலமாக பல்லாயிரம் பேர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் “மன அழுத்தம் என்பது நண்பனுக்கு நண்பன், விரோதிக்கு விரோதி. அதனை சாதகமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். பாதகமாகவும் ஆக்கிக் கொள்ளலாம்” என்று கண்டறியப்பட்டது. அதாவது ஒரு வேலையை விரும்பி செய்யும் போது பாஸிட்டிவ் ஆன மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பாதிப்பில்லை. மாறாக அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறனை அதிகரிக்க செய்கிறது. அந்த வேலையை செய்து முடிப்பதற்கான ஆற்றலை, புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இதனால் ஸ்ட்ரெஸ்ஸாக எண்ணக்கூடிய அந்த வேலையை மகிழ்ச்சி தரக்கூடியதாக மாற்றி விடுகிறது.

அதையே சுமையாக நினைத்து செய்யும் போது நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் ஏற்பட்டு நமது செயல் திறனை முடக்கி விடுகிறது. இதனால் உடலும் மனமும் பாதிக்கப்பட்டு சோர்ந்து விடுகிறது. மன அழுத்தத்தின் விளைவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பிரச்சினைகளோ, சூழ்நிலைகளோ உங்களுக்கு எந்த கெடுதலையும் தராது. எந்த நேரத்திலும் உங்கள் மனநிலையை நேர்மறையாக வைத்திருந்தால் போதும், அதுவே எந்த பிரச்சினைகளையும் சமாளித்து அந்த சூழலை மகிழ்ச்சியானதாக மாற்றி விடும்.

பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் பலரும் அந்த சமயத்தில் தங்களுக்கு யாராவது ஆறுதல் சொல்ல மாட்டார்களா? என்று எதிர்பார்ப்பார்கள். அல்லது அப்படி பட்டவர்களை தேடிச் செல்வார்கள். அங்கு ஆறுதல் கிடைத்தால் சரி, இல்லை என்றால் மன அழுத்தம் மேலும் அதிகரித்து மோசமான விளைவை ஏற்படுத்திவிடும்.

இதற்கு காரணம் என்னவென்றால் நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சுரக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்தான். இந்த ஹார்மோன் தான் யாராவது நம்மை கவனிக்க மாட்டார்களா? என்ற ஏக்கத்தை நம் மனதில் உண்டாக்குகிறது. மன அழுத்தம் இருக்கும் சமயத்தில் நீங்கள் ஆறுதலைத்தேடி செல்ல வேண்டியதில்லை. அதற்கு பதிலாக வேறு யாரிடமாவது நீங்கள் பரிவு காட்டினாலே போதும், உங்கள் மனம் அமைதி அடைந்து விடும். ஏன் என்றால் இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோனுக்கு தேவை ‘கவனித்தல்’ மட்டுமே. அதை நீங்கள் பெறுவதாகவும் இருக்கலாம். கொடுப்பதாகவும் இருக்கலாம்.

இதற்கு பர்மாவில் நடந்த சம்பவத்தில் இருந்து ஒரு உதாரணத்தை காட்ட முடியும். பர்மாவில் உள் நாட்டு கலவரம் நடந்த போது ஏராளமான மக்கள் தங்கள் வீடு, வாசல், உறவுகள், உடமைகளை இழந்து தவித்தனர். பாதிக்கப்பட்ட இந்த மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற அச்சத்துடன் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

அடர்ந்த காடு, மலை, மேடு, பள்ளங்கள் வழியாக நடுக்கத்தோடு கடந்து கொண்டிருந்த அந்த கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர் மற்றவர்களுக்கு ஈடுகொடுத்து நடக்க முடியாமல் தள்ளாடினார். தன் மகனை பார்த்து “என்னால் இதற்கு மேல் நடக்க முடியாது, எனவே என்னை பற்றி கவலைப்படாமல் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்” என்றார்.

மகன் பலவாறு வற்புறுத்தியும் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தார். தந்தையால் நடக்க முடியவில்லைதான், ஆனால் ஆபத்தான சூழலில் அவரை எப்படி விட்டு செல்வது என்று யோசித்த மகன் ஒரு உபாயம் செய்தான். தன் சிறு வயது மகனை அவரிடம் கொடுத்தான். அப்பா இவனாலும் நடக்க முடியவில்லை. அவனை தூக்கிக்கொண்டு போவது எனக்கு சிரமமாக இருக்கிறது. அதனால் அவனையும் உங்களுடன் இங்கே வைத்துக் கொள்ளுங்கள். இனி இவன் உங்கள் பொறுப்பு என்று சொல்லி விட்டு வேகமாக நடக்க தொடங்கினான்.

அவ்வளவுதான் தன் உயிரை பற்றி கவலைப்படாத அந்த பெரியவர் தன் பேரப்பிள்ளையை மகன் விட்டுச் செல்ல போகிறான் என்றவுடன் பதைபதைத்து போனார். “இவனை அழைத்துக் கொண்டு செல்ல உனக்கு சிரமமாக இருந்தால் நீ போ... நான் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று சொன்னபடி குழந்தையை வாரி அணைத்துக்கொண்டார். பேரனை காப்பாற்ற வேண்டுமென்ற உந்துதல் அவர் மனதில் ஏற்பட்டது. அந்த அழுத்தம் காரணமாக மற்றவர்களைவிட வேகமாக நடந்தார். பத்திரமாக நாடு கடந்தார்.

இந்த உண்மை சம்பவம் நமக்கு சொல்லும் பாடம் ஒன்றுதான். விருப்பமும் பொறுப்பும் இருந்தால் அழுத்தத்தால் நன்மையே விளையும். அதுவே நம் மனதில் உடலில் திடத்தையும் வேகத்தையும் அளிக்கும். நம்முன் தோன்றும் எந்த சவாலையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றலை கொடுக்கும்.

பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது?

உங்கள் மனப்பிரச்சினை களுக்கு இறக்கை கொடுங்கள். அவை உங்களை விட்டு எங்காவது பறந்துச் செல்லட்டும் என்கிறார் அறிஞர் டெர்ரி கில்மெட்.
பிரச்சினைகளை கையாளத் தெரிந்தவர்களுக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. வாழ்க்கை உங்களை அழுத்தி நீங்கள் கொஞ்சம் தர்மச் சங்கடமாக உணரும் சமயத்தில் ஒரு விசயத்தை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றியின் ஒரு பகுதியே அந்த அழுத்தம். அழுத்தம் இல்லை என்றால் வைரம் இல்லை என்கிறார் அறிஞர் எரிக் தாமஸ்.

அழுத்தம்தான் குப்பைகளை உரமாக மாற்றுகிறது. அழுத்தம்தான் கரியை வைரமாக மாற்றுகிறது. அதுபோல் உங்களுக்குள் ஏற்படும் மன அழுத்தத்தையும் திடமும் ஆற்றலும் கொடுக்கும் வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஆகவே உங்களுக்கு அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் விழிப்புணர்வோடு செயல்பட்டால் நன்மை பயக்கும் வகையில் அதனை சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி செய்தால் அழுத்தமே ஆனந்தமாக மாறும். அதில் மகிழ்ச்சி என்னும் பூ மலரும்.
Email:fajila@hotmil.com
Tags:    

Similar News