லைஃப்ஸ்டைல்

எலும்புகளை உறுதியாகும் உடற்பயிற்சி

Published On 2019-02-22 07:52 GMT   |   Update On 2019-02-22 07:52 GMT
உடற்பயிற்சி செய்தால்தான் உடலின் எலும்புகள் உறுதியாகும். சாதாரண வாக்கிங், ஜாக்கிங் போன்றவையே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் போதுமானவை.
ஆரோக்கியமான வாழ்க்கையின் அஸ்திவாரம் உடற்பயிற்சி. விளையாட்டுத்துறையிலோ, நடிப்புத்துறையிலோ இருப்பவர்களுக்கு மட்டும்தான் உடற்பயிற்சி அவசியம் என்றும், அதிக பருமன் கொண்டவர்கள்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் பலருக்குள்ளும் தவறான எண்ணம் பதிந்திருக்கிறது. அப்படியில்லை. வாழ்நாளை நீட்டிக்க நினைக்கிற ஒவ்வொருவருக்கும் தினசரி உடற்பயிற்சிகள் என்பவை முக்கியம்.

தினமும் பல் துலக்குவது, காலைக்கடன்களைக் கழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது போன்றவற்றைப் போல உடற்பயிற்சியும் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றப்பட வேண்டும். உடற்பயிற்சிகள் செய்வதால் கிடைக்கிற பலன்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம். அவற்றில் முக்கியமானது நோயற்ற வாழ்வும், என்றும் இளமையும். இந்த இரண்டைத் தாண்டி ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தால்தான் உடலின் எலும்புகள் உறுதியாகும். எலும்புகள்தானே நம் உடலைத் தாங்கும் ஆதாரம்? அந்த ஆதாரம் ஆரோக்கிமாக இருந்தால்தானே நம் உருவமும் உடலும் சீராக இருக்கும்? தினமும் உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு மனம் அமைதியாக இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எலும்புகளுக்குக் குறிப்பிட்ட அளவு சுமை அவசியம். அப்போதுதான் அவற்றின் தன்மை மாறாமலிருக்கும். அதற்குத் தான் உடற்பயிற்சி வலியுறுத்தப்படுகிறது. உடற்பயிற்சி என்றதும் எடை தூக்க வேண்டும், உடல் வலிக்கவலிக்க உடற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்றெல்லாம் அர்த்தமில்லை. சாதாரண வாக்கிங், ஜாக்கிங் போன்றவையே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் போதுமானவை. நம் அசைவுகளுக்கு அவசியமான சைனோவியல் திரவமானது கொஞ்சமாவது உடற்பயிற்சி இருந்தால்தான் சுரக்கும்.

உடற்பயிற்சி செய்யும்போது நம் இதயத்துடிப்பு அதிகமாகும்.நிறைய ரத்தம் பம்ப் செய்யப்படும். ரத்தத்தில் ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சாதாரண பாக்டீரியா, வைரஸ் தொற்றிலிருந்து புற்றுநோய் அபாயம் வரை தவிர்க்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்கிறபோது நம் மூளையிலிருந்து எண்டார்பின் என்கிற ரசாயனம் சுரக்கப்படும். அது நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும்.

Tags:    

Similar News