லைஃப்ஸ்டைல்

உங்களுக்கு உடற்பயிற்சி தேவையா?

Published On 2019-02-14 03:45 GMT   |   Update On 2019-02-14 03:45 GMT
உங்களுக்கு உடற்பயிற்சி தேவையா என்பதை உங்கள் உடல் மட்டுமே தீர்மானிப்பதில்லை. உங்கள் உடலுழைப்பும், இயக்கமும்தான் தீர்மானிக்க வேண்டும்.
நான் சரியான வெயிட்லதான் இருக்கேன் என்று மார்தட்டிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு உடற்பயிற்சி தேவையா என்பதை உங்கள் உடல் மட்டுமே தீர்மானிப்பதில்லை. உங்கள் உடலுழைப்பும், இயக்கமும்தான் தீர்மானிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டரின் முன்னால் உட்கார்ந்தபடி வேலை செய்கிறவர் என்றால் சீக்கிரமே உங்களுக்கு தோள்பட்டை வலியும், முதுகுவலியும் வரலாம். டூ வீலரில் நீண்ட தூரம் பயணம் செய்கிறவர் என்றால் முதுகுவலி வரலாம். எனவே, உடல் பருமன் இருந்தால்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. ஆரோக்கியமான வாழ்வுக்கும் அது அவசியம் என உணருங்கள்.

முதலில் ஃபிட்னஸ் நிபுணரை அணுகுங்கள். உங்கள் எடை மற்றும் உயரத்துக்கேற்ற பி.எம்.ஐ இருக்கிறதா என்று சரி பாருங்கள். பி.எம்.ஐ அதிகமிருக்கிறதா? அன்றே ஜிம்மில் சேர்வதென முடிவெடுங்கள். ஜிம்மெல்லாம் சரிப்படாது என்றால் உங்களுக்கேற்ற ஜிம்மில் சேர்வதென முடிவெடுத்தால் போதாது. அந்த இடம் சரியானதுதானா, அங்குள்ள ஃபிட்னஸ் நிபுணர்கள் முறைப்படி படித்து, சான்றிதழ் பெற்றவர்களா என பார்க்க வேண்டும்.

எக்சர்சைஸ் எல்லாம் குழந்தை பெற்ற பெண்களுக்கும், நடுத்தர வயசுப் பெண்களுக்கும்தான் என்கிற எண்ணமும் பல பெண்களுக்கு உண்டு. அதுவும் தவறு. நிறைய இளம்பெண்களுக்கு PCOD எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கிறது. அது உடல்பருமனுக்கு காரணமாகலாம். டீன் ஏஜிலிருந்தே உடற்பயிற்சி செய்கிற பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டால் பி.சி.ஓ.டி பாதிப்பு குறைவதுடன், பருமன் ஏற்படுத்தும் பல பிரச்னைகளையும் ஆரம்பத்திலேயே அண்ட விடாமல் செய்யலாம்.

ஜிம்முக்குப் போகலாம்தான்... ஆனால் நிறுத்திட்டா மறுபடி உடல் எடை அதிகமாயிடுமாமே என்கிற பயத்தின் காரணமாக அதைத் தவிர்ப்பவர்களும் உண்டு. அதுவும் தவறான நம்பிக்கையே. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்கிற வரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பார்கள்.

தினசரி உடற்பயிற்சி செய்வார்கள், அதை நிறுத்தியதும் உணவுக் கட்டுப்பாடு தளர்ந்து, கண்டதையும் சாப்பிடுவார்கள். தினசரி உடற்பயிற்சி என்பதும் மாறிப் போகும். இப்படி இல்லாமல், ஜிம்முக்கு போவதை நிறுத்தினாலும் உணவுக்கட்டுப்பாட்டையும் தினசரி உடற்பயிற்சியையும் தவறாமல் செய்கிறவர்களுக்கு நிச்சயம் எடை ஏறாது.
Tags:    

Similar News