லைஃப்ஸ்டைல்

மிகச்சிறந்த கல்வி எது?

Published On 2019-05-27 03:39 GMT   |   Update On 2019-05-27 03:39 GMT
நிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம்.
கல்லூரி வாசலில் காத்திருக்கும் மக்களின் முகங்கள், அலைமோதும் கூட்டங்களைப் பார்க்கையில் இன்றைய சமுதாய நிலை குறித்து ஒரு கவலை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அடிப்படையான மனிதத் தன்மையை அது அழித்து விட்டது என்று நாம் உணரவில்லை. லட்சங்களை கொட்டி குவித்து பிள்ளைகளை படிக்க வைத்து வெளிநாடு அனுப்பி விட்டு, அதைப் பற்றிய பெருமை, கர்வம் என்று நடமாடி கடைசியில் முதியோர் இல்லம் போகும் பெற்றோர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். சந்தையில் விலைக்கு வாங்கும் கல்வியும், பட்டங்களும் அடிப்படை மனித நேயத்தை, உறவுகளுக்கு இடையில் உள்ள நெருக்கம், அன்பு இவைகளை அழித்து விடுகிறது.

உணவு, உடை, உறைவிடம் இவையே வாழ்வின் அடிப்படைத் தேவை. ஆனால் இவைகளால் மட்டும் வாழ்வு பூரணமாகி விடாது. அதற்கு தெளிந்த அறிவு வேண்டும். எது நல்லது, எது கெட்டது என்று பகுத்தறிந்து, அதன் வழி நின்று வாழ்வை செம்மையாக வாழ அறிவு வேண்டும். அதை சிறந்த கல்வியால் மட்டுமே தர முடியும். இன்றைய கல்வி வெளிநாட்டு மோகத்தை, ஆடம்பர வாழ்வின் மோகத்தை, அதிகரித்து மக்களை விட்டு வெகு தூரம் விலகிப்போக வைத்து விடுகிறது.

சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் திறமையை, தன் காலில் நிற்கும் தைரியம், தன்னம்பிக்கையைத் தருவதில்லை. வெளிச்சூழ்நிலை ஒருவனின் மனதை மாற்றும்போது, கல்விதான் அவனின் அக ஒளியைப் பிரகாசிக்க வைக்க முடியும். அது சந்தைக் கல்வியாக, பட்டங்கள் விலை கொடுத்து வாங்கக் கூடியதாக இருக்கக் கூடாது.

உண்மையான கல்வி மனதின் ஆற்றலை வளர்த்து, நேர்பாதையில் சிந்திக்க வைத்து, சமுதாயத்திற்கு ஒரு முன் மாதிரியாகச் செயல்பட வைப்பது. அன்றைய கல்வி இவைகளைக் கற்றுத் தந்தது. அதனால்தான், ஆர்யபட்டர், பாஸ்கராசார்யா, வராஹமிஹிரர், சாணக்கியர் என்று பலரைத் தந்தது. வானவியல், ஆயர்வேதம், மருத்துவ சிகிச்சை முறைகள், ஜோதிடம் என்று பல துறைகளில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இன்றைய அறிவியல் சாதனைகளுக்கு அடிப்படையாக இருந்தார்கள்.

இன்றைய கல்வி முறை எத்தனை சிந்தனைவாதிகளை உருவாக்குகிறது. இன்று கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும்போது, இங்கு நிறைய வெளிநாட்டு கம்பெனி வருகிறது. இதில் ஏதானும் ஒன்றில் செலக்ட் ஆகிவிட்டால் வெளிநாடு போய்விடலாம், அங்கேயே கம்பெனி மாறி சிறிது நாளில் அந்த நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று கணக்குப்போடுகிறார்கள்.

இதில் படித்தால் இவன் நல்ல பண்புகள், குணங்களுடன் வருவான். தான் வாழும் இந்த சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பைத் தருவான். இவனால் மனித சமுதாயத்திற்கு சிறந்த சேவை செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் அதிகம் பேர் பாடப்பிரிவுகளை, கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில்லை. தன் மகன் ஒரு மருத்துவனாக, பொறியியலாளராக வர வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்பவர்கள் அவன் சிறந்த மனிதனாக வர வேண்டும் என்று எத்தனை செலவு செய்கிறார்கள்? பெற்றோர்கள், ஆசிரியர்களை விட்டு வெகுதூரம் மாணவன் போய் விடுகிறான்.

மிகப்பெரிய இடைவெளி. மனப்பாட எந்திரங்களாகி, மன ஒருமைப்பாடு என்பது இல்லை. சிறந்த கல்வியை உட்கிரகித்துக் கொள்ள மன ஒருமைப்பாடு அவசியம். அது அவனுக்குள் ஒரு பரந்த ஒளி மிகுந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறது. நல்ல உணர்வுகள் மனதில் விரிய, விரிய அது நமக்குள் வளர்கிறது. மனித சமுதாயத்துடன் நல்லுறவை வளர்க்கிறது. புத்தி, ஞாபகம், உடலின் வன்மை, ஐஸ்வர்யம், வளர மனதை ஒருமுகப்படுத்துங்கள் என்கிறது வேதங்கள்.

குறுகிய வட்டத்திற்குள் சுற்றாமல் பரந்த, விசாலமான அறிவைத் தருவதே சிறந்த கல்வி. அதைத் தேடுங்கள். ஓடி, ஓடி அறிவைத் தேடுங்கள். ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம். “உண்மை பேசல், கற்ற கல்வியின் மூலம் சமுதாயத்திற்கு நன்மை செய்தல். நல்ல செயல்களில் இருந்து விலகாதிருத்தல், தீமை விளைவிக்கும் செயல்களைச் செய்யாதிருத்தல், பெற்றோர்கள், உறவுகள், சக மனிதர்களை மதித்தல், நல்ல பண்புகளை வளர்க்கும், பிறர் மதிக்கும் செயல்களைச் செய்தல் ஆகியவையே சிறந்த கல்விக்கு இலக்கணம். அறிந்து கொள், தெரிந்து கொள், ஆழமாகச் சிந்தனை செய், பின் அதன் வழி நில் என்கிறது வேதங்கள். இதையேதான் திருவள்ளுவர், ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்கிறார். கல்வியை, சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது இந்தக் குறளை நினைவில் நிறுத்தலாமே!!

ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர்
Tags:    

Similar News