லைஃப்ஸ்டைல்

குழந்தைகளை மந்தமாக்கும் ஜங்க் ஃபுட்

Published On 2019-04-30 06:36 GMT   |   Update On 2019-04-30 06:36 GMT
ஃபாஸ்ட் ஃபுட் ஆரோக்கியத்தின் எதிரி... இது தெரிந்திருந்தாலும் குழந்தைகளின் அடம் பெற்றோரைப் பணிய வைக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இன்றைய பெற்றோர் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க அதிகம் மெனக்கெடுகிறார்கள். அதே நேரத்தில், உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகளை ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட அனுமதிக்கிறார்கள். அதனால் குழந்தைகள் வகுப்பறையில் கவனச் சிதறலுக்கு ஆளாகிறார்கள். பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அவர்களால் முடிவதில்லை. வீட்டுப் பாடம் எழுத ஆர்வம் இல்லாமல் தவிர்க்கிறார்கள். இந்தப் பிரசனை சம்பந்தப்பட்ட குழந்தையை ‘முட்டாள்’ என அடையாளப்படுத்துகிறது.

அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் குழந்தைகள் சோம்பலையே வெளிப்படுத்துகிறார்கள். யோசிக்கவே சிரமப்படுகிறார்கள். நேர்மறை சிந்தனைகள் குறைகின்றன. உளவியல் சிக்கல்கள் மனதில் மையம் கொள்கின்றன. பாக்கெட் சிப்ஸுகளில் சோடியமும் பொட்டாசியமும் அதிக அளவு உள்ளன. இவை உடலில் அதிகமாகத் தேங்கும்போது ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலுள்ள அதிகக் காரமும் ஆரோக்கியத்துக்கு எதிரியே! இந்தச் சுவைக்கு நாக்குப் பழகி விடுவதால் சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்புவதில்லை. கசப்பு, உவர்ப்பு, புளிப்பு உள்ளிட்ட சுவைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகின்றன.

கீரை, காய்கறிகளைத் தவிர்ப்பதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. உடல் மட்டுமின்றி மனரீதியான அபாயங்களையும் உருவாக்கும் ஃபாஸ்ட் ஃபுட், குழந்தைகளை ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தி விடுகிறது. உறுப்புகளையும் ஹார்மோன்களையும் பாதிக்கிறது. சிந்திக்கும் திறனைக் குறைத்து அறிவுத் தேடலுக்கு தடை போடுகிறது.



அடம் பிடிக்கும் குழந்தைகள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் மனப்பக்குவத்தை அடைகிறார்கள். இந்த உணவுக் கலாசாரம் குழந்தைகளின் நிகழ்காலத்தை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்குகிறது. உணவின் உளவியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வீட்டில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

எந்த மாற்றத்தையும் மனதில் இருந்து தொடங்க வேண்டும். குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு பெற்றோரே ரோல் மாடல்! ஃபாஸ்ட் ஃபுட் விளைவுகளை குழந்தைகளுக்கு மெல்லச் சொல்லி புரிய வைக்கலாம். ஆசிரியர், மருத்துவர், நண்பர்கள் மூலம் குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். சமைக்கத் திட்டமிடும் போது, குழந்தைகளை இணைத்துக் கொள்ளலாம். இன்றைய சமையல் என்ன, எந்த காய் சமையலுக்கு, என்ன பொரியல் என்பதிலும் சுட்டிகளின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கலாம். வீட்டில் நன்கு சமைத்துச் சாப்பிடும் போது ஃபாஸ்ட் ஃபுட் தேவை குறையும்.

சத்தான தானிய வகைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லம் பயன்படுத்தலாம். அது, ரத்தசோகையை கட்டுப்படுத்தி, புத்திக்கூர்மையை அதிகரிக்கும். இயற்கை சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் என்னென்ன சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன என்பதைப் புரிய வைக்கலாம். உணவை ரசித்து, சுவைத்து சாப்பிடப் பழக்க வேண்டும். 
Tags:    

Similar News