லைஃப்ஸ்டைல்

இது ஒரு குழந்தைகளின் விடுமுறைக் காலம்...

Published On 2019-04-03 03:07 GMT   |   Update On 2019-04-03 03:07 GMT
பள்ளி விடுமுறை நாட்கள் பெற்றோர்களும், பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம். சுருக்கமாகச் சொன்னால் விடுமுறை நாட்கள் வீணடிக்க வேண்டிய நாட்கள் அல்ல பயன்படுத்த வேண்டிய நாட்கள்.
மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பள்ளி விடுமுறை காலம் வந்துவிட்டது. ஆனால் இந்த இரண்டு மாதங்கள் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்த மாணவர்களுக்கு சில நாட்களிலேயே சலிப்பு தட்டியிருக்கும். எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதை விட சிரமமானது எதுவும் இல்லை என்பது மாணவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டால் அது பள்ளிகளுக்குத்தான் விடுமுறையன்றி, கல்வி கற்பதற்கும், கொண்டாடுவதற்கும் விடுமுறையல்ல. இன்னும் சொல்லப்போனால் அது பல வித்தைகளை கற்றுக்கொள்ள ஒதுக்கப்பட்ட காலம். எதைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் விடுமுறை நாட்களில் ஒரு தமிழ் நாளிதழையும் ஒரு ஆங்கில நாளிதழையும் தவறாமல் படித்துவிட வேண்டும். நாகரிக மக்களின் அடையாளமே அவர்கள் உலக நிகழ்வுகளை தெரிந்திருப்பார்கள் என்பதுதான்.

உலகநாடுகள், உலக மக்கள்தொகை பெருக்கம் உலக அரசியல், உலக பொருளாதாரம், உலக வரலாறு, உலக வர்த்தகம், உலக தத்துவங்கள், உலக தொழில்நுட்பம் என்று உலகளாவிய விஷயங்களை தெரிந்தவர் தான் சமூகத்தில் முழு மனிதனாக மதிக்கப்படுகிறார். ஆனால் உலக அறிவு இல்லாத ஒரு மாணவன், நாகரிகம் எட்டிப்பார்க்காத காடுகளில் வாழும் கற்கால மனிதனுக்கு சமமாக கருதப்படுவார். செய்தித்தாள் படிக்காத சென்டினல் என்ற பழங்குடி மக்கள் இன்னும் அந்தமான் தீவுகளில் வாழ்கிறார்கள்.

அவர்களை பேட்டி காணச்சென்ற ஜான் ஆலன் சா என்ற அமெரிக்க செய்தியாளரைக் கொன்று கடலில் வீசிவிட்டார்கள். அவர்கள் அனைவரும் செய்தித்தாள் வாசிப்பது இல்லை. எனவே உலக நடப்பு நிலவரங்கள் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு தெரிந்த செய்திகள் எல்லாம் அந்த தீவில் பெய்த மழையும், அடித்த வெயிலும் உள்ள செடிகளும், கொடிகளும், மிருகங்களும்தான்.

பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி செய்யவும், விளையாடவும் நேரம் இருந்திருக் காது. அதுவும் தீவிரமாக படிக்கும் மாணவர்களுக்கு நேரம் இருக்கவே இருக்காது. ஆனால் விடுமுறை நாட்களில் அதற்கான நேரம் நிச்சயம் இருக்கும். பள்ளி மாணவர்கள் தினமும் ஒரு மணிநேரம் ஓட்டபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். இறகு பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்று வழக்கமாக விளையாடும் குழந்தைகள் கூட ஒரு மணிநேரம் ஓடியாக வேண்டும். பெற்றோர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காலை ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்யத்தொடங்கலாம். சில வாரங்களுக்குப் பிறகு ஓடலாம். குடும்பமாக காலையில் ஓடினால் ஒரு குழு உணர்வை வீட்டில் ஏற்படுத்த முடியும். குடும்ப ஆரோக்கியம் பேணவும் அது உதவும்.

பிறநாட்டு மொழிகள் கற்றுக்கொள்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனவே இந்த இரண்டு மாதத்தில் பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான், சீனா போன்ற பிறநாட்டு மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை கற்க மாணவர்கள் முயற்சி செய்யலாம். இன்று ஆன்லைன் மொழிக்கல்வி வசதி இருக்கிறது. அது இலவசமாக கிடைக்கிறது. சில மாணவர்களுக்கு மொழி கல்வி இயற்கையாகவே வந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் பல மொழிகளை ஒரே நேரத்தில் கற் கவும் முடியும். ஓரளவுக்கு புலமை பெற்றபின் அயல்நாடுகளுக்குச் சென்று நமது தமிழ் மொழியை கற்பிக்கும் வாய்ப்பும் இந்தப் பிள்ளைகளுக்கு எளிதில் கிடைக்கும். தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு இந்தத் துறையில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது

சில மாணவர்களுக்கு கலை மீது தீராத ஆர்வம் இருக்கும். இசைக்கருவி வாசித்தல், பாடுதல், ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் போன்ற கலைகளில் அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி எடுக்க சிறந்த நேரம் அடுத்த 60 நாட்கள். தொலைக்காட்சியில் விவாதம் நடத்தும் இளம் நெறியாளர்கள் இப்படி பயற்சி எடுத்தவர்கள்தான்.

எல்லா பெற்றோருக்கும் தேசிய கடமை ஒன்று உண்டு. அது குழந்தைகளுக்கு தரவேண்டிய அறிவியல் கல்வி. அறிவியலை கற்று சரியாக புரிந்துகொண்ட மக்கள் வாழும் நாடுகள் மட்டும்தான் இன்று சிறந்து விளங்குகின்றன. அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சம உரிமையும், சம நீதியையும், சம மரியாதையையும் வழங்க முன் வந்திருக்கிறார்கள். அறிவியல் சரியாக கற்ற மக்கள், சக மனிதனையும் பிற உயிரினங்களையும், கடலையும், காடுகளையும், மலைகளையும், நதிகளையும் உண்மையிலேயே நேசிக்கிறான். அவர்கள்தான் இயற்கையை பாதுகாக்க உண்மையான அக்கறையும் காட்டுகிறார்கள். மக்கள் தொகையையும் கட்டுப்படுத்திவிட்டார்கள். எனவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவியலில் ஆர்வம் வரும் வகையிலான அறிவியல் நூல்களை அறிமுகம் செய்ய வேண்டும். இன்று அதற்கான ‘என்செக்கிளேப்பீடியா’ என்ற நூல்கள் வந்துவிட்டன. அவற்றை பிள்ளைகளுக்கு விடுமுறை நாட்களில் வாங்கித்தாருங்கள். அறிவியல் ஆர்வத்தை தட்டி எழுப்பினால் அந்த மாணவன் தானாகவே படிக்க ஆரம்பித்துவிடுவான். பிறகு அவனது அறிவியல் வேட்கையையும், அறிவியல் வளர்ச்சியையும் யாராலும் தடுத்து விட முடியாது.

மேலே சொன்ன செயல்கள் அனைத்தையும் நாம் மாணவர்களுக்கு திணிக்கக் கூடாது. அவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். விடுமுறைக்கால கல்விப்பயிற்சி அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் செய்பவையாகவும் அவர்கள் விரும்பும் காலத்தில் செய்வதுமாக இருத்தல் வேண்டும். எதையாவது ஒரு நல்ல காரியத்தை செய்து முடித்துவிட்டால் பெற்றோர்கள் அந்த பிள்ளையை பாராட்ட வேண்டும். ஒரு அற்புதமான கலையை 50 நாட்களில் கற்றுக்கொண்டால் அவர்களுக்கு பரிசு கொடுப்பதைப் போல சுற்றுலாதலங்களுக்கு அழைத்துச்செல்லலாம். நீங்கள் பிறந்த ஊருக்கு உங்கள் குழந்தையை அழைத்துச்சென்று நீங்கள் வாழ்ந்த சூழ்நிலையை விளக்கிக் கூறலாம்.

ஒரு கடினமான சாகச பயணமாக ஒரு மலை மீது ஏறலாம். 50 கி.மீட்டர் தூரம் நடக்கலாம். வெகு துரத்திற்கு சுற்றுலா பயணம் செல்லலாம்.

புனித ஜார்ஜ் கோட்டை, செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை போன்ற வரலாற்று பிரசித்திப்பெற்ற இடங்கள், இயற்கை எழில்மிக்க உயிரியல் பூங்காவிற்கு போய் வரலாம். வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள சுற்றுலாதலங்களுக்கு சென்று வரலாம்.

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைக்கு விடுமுறையில் நீச்சல் கற்றுத்தருவது சாலச்சிறந்தது. அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு முப்பது நாட்கள் அனுப்பி வைத்தால் குழந்தை நீச்சல் கற்றுக்கொள்ளும். அதன் பின்னர் நீர்நிலைகளை பார்த்தால் ஏற்படும் அச்சம் அகன்றுவிடும். மிருக காட்சி சாலை, காவல் நிலையம், ரெயில் நிலையம் என்று குழந்தைகளை அழைத்துச்சென்று காட்டலாம். அருங்காட்சியகத்திற்கும் மீன் காட்சியகத்திற்கும், கோளரங்கத்திற்கும் அவசியம் அழைத்துச்செல்ல வேண்டும்.

பள்ளி விடுமுறை நாட்கள் பெற்றோர்களும், பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம். சுருக்கமாகச் சொன்னால் விடுமுறை நாட்கள் வீணடிக்க வேண்டிய நாட்கள் அல்ல பயன்படுத்த வேண்டிய நாட்கள். பல அடிப்படை கேள்விகளுக்கு விடை காண வேண்டிய நாட்கள். ஆபிரகாம் லிங்கன் சொன்னதுபோல கோடாரியை தீட்ட வேண்டிய நாட்கள். எதிர்காலத்தில் மாணவச்செல்வங்கள் படைக்கப்போகும் சாதனைக்கு இந்த நாட்களில் உங்களது உடலையும், உள்ளத்தையும் பட்டை தீட்ட பயன்படுத்துங்கள்.

முனைவர் செ.சைலேந்திரபாபு, காவல்துறை இயக்குனர்.
Tags:    

Similar News