லைஃப்ஸ்டைல்

அன்பை வளர்க்கும் குழந்தை இலக்கியம்...

Published On 2019-04-02 03:04 GMT   |   Update On 2019-04-02 03:04 GMT
பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி புத்தகங்களை நேசிக்கச் செய்தால் மட்டுமே குழந்தை இலக்கியம் வளரும்.
இன்று (ஏப்ரல் 2-ந்தேதி) சர்வதேச குழந்தைகள் புத்தகதினம்.

உலக ஆசிரியர் தினம், உலகப் பெற்றோர் தினம்போல குழந்தைகள் புத்தக தினம் ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு புதிய குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் உருவாக வாய்ப்பாகவும் அமையும். சீன மொழியிலோ, ரஷிய மொழியிலோ, ஆங்கில மொழியிலோ குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சி அபாரமானது.

தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சியோ குழந்தை படைப்பாளிகளின் வளர்ச்சியோ அந்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை என்பதுதான் யதார்த்தம். ஆங்கிலேயரின் ஆதிக்கம் ஏற்படும்வரை தமிழில் குழந்தை இலக்கியம் என்பது இல்லாத ஒன்றாகவே இருந்தது. தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் பிசி என்னும் விடுகதைகள் மட்டுமே குழந்தைகளுக்கானவையாக, குழந்தைகள் விரும்புகின்றவையாக இருந்தன எனலாம். அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய பாடல்கள் குழந்தைகளுக்கு அறம் பயிற்றுவிக்கும் பாடல்களாக இருந்தன. இவற்றைக் குழந்தைகளுக்கான பாடல்களாகக் கொள்ள இயலாது.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு முதலிய குழந்தைப் பாடல்களை எழுதினார். அதே காலத்தில் பாரதியாரும் ஓடிவிளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற ஒரே ஒரு பாடலை குழந்தைப் பாடலாக எழுதி தமிழ்நாட்டுக் குழந்தைகளைத் தன்வசப்படுத்தினார். இவர்கள் இருவரும் எழுதிய பாடல்கள்தான் குழந்தைப் பாடல்கள். குழந்தைகள் பாடும் பாடல்கள். குழந்தைகள் விரும்பும் பாடல்கள்.

இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு கா.நமசிவாய முதலியார் போன்றவர்கள் குழந்தைப் பாடல்கள் எழுதினாலும் குழந்தைகளைக் கவரும் பாடல்களை எழுதிக் குவித்தவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவே ஆவார். மாமரத்தில் ஏறலாம் மாங்காயைப் பறிக்கலாம் என்று எழுதத் தொடங்கியவர் பாடலை முடிக்கும்பொழுது குழந்தைகளை மயக்கும் மாயாஜாலம் காட்டுகிறார்.

வாழை மரத்தில் ஏறலாம் என்றால் அடுத்த அடி வாழைக்காயைப் பறிக்கலாம் என்றுதான் நமக்குச் சொல்லத் தோன்றும். வள்ளியப்பா பாடலை முடிக்கும் நேர்த்தியைப் பாருங்கள்.

வாழை மரத்தில் ஏறலாம் வழுக்கி வழுக்கி விழுகலாம்என்று எழுதியிருக்கிறார். இதைப் படிக்கின்ற குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.

வள்ளியப்பா குழந்தைகள் விரும்பும் பாடல்களை எழுதினார். வள்ளியப்பா எழுதிய பாடலைப் படித்த குழந்தை, வள்ளியப்பா போலவே பாடல் எழுதும் வகையில் பாடல்களைப் படைத்தவர் அவர்.

வள்ளியப்பா எழுதிய பாடல் நில் நில் நில் நில்லாவிட்டால் உடனே ஓடிச் செல் செல் செல், புல் புல் புல், புல்லைப் பிடுங்கி வயலை உழுதால், நெல் நெல் நெல்இதைப் படித்து ரசித்துக் குதிக்காத பிள்ளைகளே இருக்க முடியாது.

வள்ளியப்பா ஒருமுறை கொத்தமங்கலம் சுப்புவைப் பார்க்கப் போயிருந்தார். வா வா வா வள்ளியப்பா என்று வரவேற்றவர் “உன்னால் மட்டும்தான் குழந்தைப் பாடல் எழுத முடியுமா? எங்கள் வீட்டுப் பேரனும் பாடல் எழுதியிருக்கிறான் கேள்” என்று சொல்லிவிட்டு “டேய் வந்து பாடுடா” என்றார். பாட்டி பாட்டி பாட்டி, பாட்டி சேலையை ரெண்டாக் கிழிச்சா, வேட்டி வேட்டி வேட்டி என்று அந்தப் பையன் பாடியதைக் கேட்டு மலைத்துப் போய்விட்டார் வள்ளியப்பா.இப்படிப்பட்ட பாடல்கள்தான் குழந்தைப் பாடல்களின் இலக்கணம்.

குழந்தை இலக்கியப் படைப்பாளி என்பவன் குழந்தைகளோடு ஓடி ஆடி குழந்தைகள் பேசுவதைப் பேசி குழந்தையாக மாறினால்தான் தரமான குழந்தை இலக்கியத்தைப் படைக்க முடியும்.

தமிழ்வழிக் கல்விதான் நாற்பதுகள் தொடங்கி எண்பதுவரை தமிழ்நாட்டில் இருந்தது. எண்பதுகளுக்குப் பின் ஆங்கிலவழிக் கல்வி மோகம் ஏற்பட்டு தனியார் பள்ளிகள் புற்றீசல்கள் போல் கிளம்பி வளர தமிழ் புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலை. யாரும் சட்டம் போட்டுப் புறக்கணிக்கவில்லை. தானாகவே புறக்கணிக்கப்பட்டு தமிழ்வழிக் கல்வி சரிந்தது. பிள்ளைகளுக்கு பாடம் தவிர பிற புத்தகங்களை படிக்கும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கத் தவறினோம். வாரம் ஒருமுறை நூல்நிலைய வகுப்பு ஒன்று இருக்கும். அப்போது பிள்ளைகள் நூல்நிலையம் சென்று கதை வரலாறு பாடல் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் இருந்தது. பிள்ளைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் அவ்வளவாக இருக்கவில்லை. மேலைநாடுகளில் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க நிறைய செலவழிக்கிறார்கள். சிறுவயது முதலே புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால்தான் மக்கள் அறிவு வளரும் எழுத்தாளர்களின் படைப்புகள் போற்றி வாங்கப்படும்.

வள்ளியப்பா குழந்தை எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து குழந்தை எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தினார். அவர்களின் படைப்புகள் வெளிவர பதிப்பாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்று குழந்தைப் புத்தகங்கள் நிறைய வெளிவர உழைத்தார். அவர் காலத்தில் குழந்தை இலக்கிய வளர்ச்சியின் பொற்காலம். ஆனால் தற்போதைய நிலை கவலைக்குரியது. நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை வைத்து மட்டும் புத்தகங்கள் வெளிவருவது குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உதவாது.

பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி புத்தகங்களை நேசிக்கச் செய்தால் மட்டுமே குழந்தை இலக்கியம் வளரும். குழந்தை இலக்கிய வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு மகத்தானது. புத்தகங்களை குழந்தைகளுக்கு ஆசிரியர் அறிமுகப்படுத்தும் நேர்த்தி முக்கியமானது. உடல் மொழி, குரல் இனிமை, நிகழ்வை நடித்துக்காட்டிச் சொல்லும் பாங்கு, இவற்றால் அந்தப் புத்தகத்தின் வீச்சு மேம்பட வாய்ப்பிருக்கிறது.

அமெரிக்காவில் தொடக்கப்பள்ளிகளிலேயே பிள்ளைகளைக் குழந்தைப் புத்தகங்களைப் படிக்கத் தூண்டும் வகையில் பாடத்திட்டத்தில் நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

வயதுக்கேற்ற வகையில் நூல்நிலையங்களில் புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள். வயதுக்கேற்ற வகையில் எனது பாடல்களை மூன்று முதல் எட்டு வயது, 9 முதல் 11 வயது, 12 முதல் 16 வயது என வகைப்படுத்தி வயதுக்கேற்ற பாடல் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன். இப்படி வகைப்படுத்துவதால் அந்தந்த வயதுப் பிரிவினருக்கேற்ற புத்தகங்களை அவர்களிடம் போய்ச்சேரச் செய்யலாம்.

இந்தக் குழந்தைகள் புத்தக தினத்தில் ஒன்றை நம் நினைவில் கொள்ள வேண்டும்.

படிப்பது அறிவு வளர்ச்சிக்கு. ஏட்டுக்கல்வி அறிவை வளர்க்கலாம். பண்பை, அன்பை வளர்ப்பது இலக்கியங்கள் மட்டுமே. பெற்றோர்கள் நல்ல புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து படிக்கச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மிகச்சிறந்த இலக்கியங்களை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். படைப்பாளிகள் குழந்தைகள் விரும்புகிற அவர்களைப் பண்படுத்துகிற தரமான இலக்கியங்களைப் படைத்துத் தரவேண்டும். சிறுவயதில் வாசிக்கும் பழக்கத்தைப் படியவிட்டால் வாழ்க்கையின் இறுதிவரை வாசிக்கின்ற பழக்கம் நம்மை விட்டு விலகாது. நிறையப் படிப்போம். பண்பை வளர்ப்போம். அன்பைப் பகிருவோம். இதுவே குழந்தை இலக்கியப் பயன்பாட்டின் உச்சம்.

குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி, சென்னை.

Tags:    

Similar News