லைஃப்ஸ்டைல்

குழந்தைகளின் விடுமுறை காலம்

Published On 2019-04-01 06:24 GMT   |   Update On 2019-04-01 06:24 GMT
விடுமுறை காலம் மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறையை மாணவர்கள் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். நெருக்கடியான மனநிலையில் இருந்து விடுபட்டு அண்டை அயலார் மற்றும் உறவினர்களிடம் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நண்பர்களுடன் கூடி விளையாட வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வதில் ஈடுபட வேண்டும்.

செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்து கொண்டு மாணவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளக்கூடாது. அது மாணவர்களிடம் மனஅழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள், மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

பொழுதுபோக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விட்டு மாணவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது. அதே நேரத்தில் மாணவ- மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசை வார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசு மற்றும் உணவு உள்பட எந்த பொருட்கள் வாங்கி கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, எங்கு செல்கிறேன்? எவ்வளவு நேரமாகும் என்பது உள்ளிட்ட தகவல்களையும் மாணவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் மறக்காமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் நடந்த சுவையான, சோகமான நிகழ்வுகள் என்று எது இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்க கூடாது. வீட்டினரின் ஆதரவோடு தான் மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை சொன்னால் தான் அதற்கான தீர்வுகளை பெரியவர்கள் காண முடியும்.

எந்த தவறையும் மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. எனவே மாணவர்கள் விடு முறையில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்ட கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

விடுமுறை காலம் மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்குள்ள திறமைகளை கண்டறிந்து அதை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குரிய பயிற்சிகளையும் முறையாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News