லைஃப்ஸ்டைல்

தேர்வு பற்றி பெற்றோரிடம் பேசுங்கள்...

Published On 2019-03-18 03:19 GMT   |   Update On 2019-03-18 03:19 GMT
தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவது முக்கியம்தான். அதற்காக நிமிடம்தோறும் பயமுறுத்துவதும், பயந்து கலங்குவதும் தேவைதானா? என்பது யோசிக்கப்பட வேண்டியது.
பொதுத்தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறிய வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வும் நெருங்கிவிட்டன. இவை முக்கியமான தேர்வுகள் என்பதை காரணம் காட்டி, பெற்றோர் குழந்தைகளை அரட்டி, மிரட்டி வருவது வாடிக்கை. மாணவர்களோ மனதில் அச்சத்துடன் ஒவ்வொரு நாளையும் நகர்த்துவார்கள். நின்றால், நடந்தால், பேசினால் குற்றம் கண்டுபிடிப்பார்கள். படி... படி... என்ற போதனைகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். உங்கள் வீட்டிலும் இது சகஜமாக நடக்கிறதுதானே?

தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவது முக்கியம்தான். அதற்காக நிமிடம்தோறும் பயமுறுத்துவதும், பயந்து கலங்குவதும் தேவைதானா? என்பது யோசிக்கப்பட வேண்டியது.

பெற்றோரிடம் நேரடியாக மனம் விட்டுப் பேசாத மாணவர்கள்தான், தோல்வியைச் சந்திப்பதுடன், எதிர்மறை முடிவுகளையும் எடுக்கிறார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, பெற்றோரிடம் தேர்வு குறித்தும், தேர்வு பற்றிய பயம் குறித்தும் பேசுவதுதான். இந்த விஷயத்தில் பெற்றோர்தான் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றாலும், மாணவர்களும் தங்களது கருத்தை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

9-ம் வகுப்பு படிக்கும்போதே, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வைச் சொல்லி பயமுறுத்துவதை பெற்றோர் கைவிட வேண்டுமென்றால், மாணவர்கள் தேர்வு பற்றிய பயத்தை மனதில் வைத்துக் கொண்டு, பெற்றோரை ஏமாற்றித் திரியக் கூடாது. சரி படிக்கிறேன் என்று நடித்து சமாளிக்கக்கூடாது. அப்படி நாடகமாடினால் தேர்வு முடிவு வரும் சமயத்தில் உண்மை வெளிப்படும். மனம் குழப்பம் அடைந்து தவறான முடிவு எடுக்கத் தூண்டிவிடும். இதற்கு ஆரம்பத்திலேயே பெற்றோரிடம் தங்கள் நிலையை தெளிவுபடுத்தி விடலாம்.

வாழ்க்கை என்பது இந்தத் தேர்வுடன் முடிந்துவிடுவதில்லை. தேர்வில் மதிப்பெண்களை உயர்த்த பல வழிகள் உள்ளன. மறுதேர்வு எழுதும் வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது என்பதை சராசரி மாணவர்கள், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிடுவோமோ என்று அஞ்சும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர், தங்கள் குழந்தையின் திறன் அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி படிக்க வைக்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி பயமுறுத்தக்கூடாது.

மதிப்பெண் இலக்கை அடையாதவர்கள் எவ்வளவோ பேர், வாழ்க்கையில் இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கிறார்கள். மதிப்பெண்களில் வாழ்க்கை இல்லை என்பதை இது உணர்த்தும். எனவே பதற்றமின்றி தேர்வை எதிர்கொண்டாலே வெற்றி பெற்றுவிடலாம். உண்மையில் பயமற்ற மனதால் அதிக விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். பாடங்கள் நன்கு புரியும்.

தேர்வு இடைவேளையையும், படிக்கும் நேரத்திலும் சிறிது இடைவேளை எடுத்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். மூளையை சுறுசுறுப்பாக்கும் ஜூஸ் வகைகள், உணவுகளை சாப்பிடுங்கள். நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகளை இனிமேலாவது வழக்கமாக்குங்கள். அடுத்த தேர்வில் பயம் வராமல் தடுத்துவிடலாம்.

எதிர்பார்த்த மதிப்பெண் வந்தாலும், வராவிட்டாலும், வாங்கிய மதிப்பெண்ணை வைத்து வாழ்வைத் தொடர முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை காயப்படுத்தி, கடுப்பேற்றுவதைவிட சிறந்த வழிகாட்டிகளாக இருந்து அவர்களின் எதிர்காலத்திற்கு உதவுங்கள்!
Tags:    

Similar News