லைஃப்ஸ்டைல்

குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்துவது எப்படி?

Published On 2019-03-15 05:26 GMT   |   Update On 2019-03-15 05:26 GMT
குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போதோ உணவு உண்ணும் போதோ விக்கல் வரலாம். சின்ன சின்ன முயற்சிகளை பாதுகாப்பாக மேற்கொண்டால் விக்கல் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போதோ உணவு உண்ணும் போதோ விக்கல் வரலாம். தும்மல், அழுகை, ஆழ்ந்த மூச்சி விடும்போது விக்கல் வருவது இயல்பு. இதுபோல் குழந்தைகளுக்கு அடிக்கடி வரும். மிகவும் அரிதாக, உடல்நல பிரச்னைகளால் விக்கல் வரக்கூடும்.

விக்கல் வந்தால் அவசர சிகிச்சை தேவை என்பதெல்லாம் கிடையாது. அது இயல்பான ஒரு விஷயம்தான். ஒரு சிலருக்கு மிகவும் அரிதாக சில பிரச்னைகளை விக்கல் ஏற்படுத்தலாம். அவர்களுக்கு விக்கல் மாதம் முழுக்க வந்தால் என்ன பிரச்னை எனப் பார்க்க வேண்டும். இதுபோல் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

குழந்தைகளுக்கு வரக்கூடிய விக்கல் மிகவும் பொதுவானது. பயம் கொள்ள தேவையில்லை. உணவும் உண்ணும் போதோ உணவு உண்ட பின்போ ஏற்படுவது சகஜம். குழந்தைகள் தங்களை அறியாமலே அதிக காற்றை உணவு உண்ணும் போதும் பால் அருந்தும்போதும் காற்றை விழுங்கி விடுகின்றனர். வயிற்றில் உள்ள வாயு (காற்று) விக்கலை ஏற்படுத்துகிறது.

சின்ன சின்ன முயற்சிகளை பாதுகாப்பாக மேற்கொண்டால் விக்கல் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும். தாய்ப்பால் தரும்போது குழந்தையை உங்கள் தோள்ப்பட்டை அருகில் சரியான நிலையில் தூக்கி வைத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம்.

குழந்தையை சரியான நிலையில் தூக்கி வைத்து தாய்ப்பால் அருந்தும்படி செய்தால், தேவையில்லாமல் காற்று குழந்தையின் வாயின் வழியாக செல்வது தடுக்கப்படும். இதனால் விக்கல் வருவதும் தடுக்கப்படும்.

குழந்தைக்கு தரும் ஃபீடிங் பாட்டிலில் பெரிய துளை இருந்தாலும் அதன் வழியாக அதிக காற்று சென்று குழந்தைக்கு விக்கல் ஏற்படலாம். குழந்தையின் ஃபீடிங் பாட்டில் சொட்டு சொட்டாக வரும் படி இருக்கவேண்டும். அப்படியே தொடர்ந்து பால், தண்ணீர் வெளியேறும்படி பெரிதாக இருக்க கூடாது.

சிலர் விக்கல் வரும்போது தாய்ப்பால் கொடுக்காதீர்கள் என்பார்கள். ஆனால், அது தவறு. விக்கல் வந்தாலும் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் ஊட்டலாம்.

கொதிக்கின்ற நீரில் ½ டீஸ்பூன் சோம்பை போட்டு, அந்த தண்ணீரை இளஞ்சூடாக 2-3 டீஸ்பூன் அளவுக்கு கொடுக்க விக்கல் நிற்கும். உடனடியாக விக்கலை நிறுத்தும் வைத்தியம் இது.

குழந்தையின் வயிறு வலி, வாயு பிடிப்பு போன்றவற்றுக்கு ஓம தண்ணீரை சிறிதளவு கொடுக்கலாம்.. இந்த வைத்தியம் குழந்தையின் வயிற்றில் உள்ள வாயு பிரச்னையை சரியாக்கும். வயிற்று பிடிப்புகூட சரியாகும். விக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
Tags:    

Similar News