லைஃப்ஸ்டைல்

குழந்தைகளின் விருப்பங்களை அலட்சியம் செய்யாதீங்க

Published On 2019-02-19 07:52 GMT   |   Update On 2019-02-19 07:52 GMT
குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் வாழும் குடும்ப சூழல் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடிதான் குழந்தைகளின் மன நிலையும் இருக்கும். குழந்தைகளுக்கு எதுவும் புரியாது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு வயது முதல் குழந்தையின் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் வளர்கிறது. ஒரு வயது குழந்தைக்கு சுற்றுச்சூழல் எல்லாமே புரியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். குழந்தையை எதிரில் வைத்துக் கொண்டு பெற்றோர் வாக்கு வாதம் செய்வது, சண்டை போடுவது இவையெல்லாம் குழந்தையின் மன நிலையை பாதித்து, குழந்தையை இயல்புக்கு மாறாக அமைதியாக்கிவிடும். குழந்தைகள் குறும்புத்தனங்கள் செய்து, மகிழ்ச்சியாக வளர அவைகளின் குடும்பசூழல் நன்றாக இருக்கவேண்டும்.

ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டியது குழந்தைகளுக்குதான். தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால் குழந்தைகள் மனம் வெதும்பிப்போய்விடுவார்கள். தேவையான முக்கியத்துவம் கிடைக்காதபோது தங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று குழந்தைகள் நினைக்கத் தொடங்கிவிடும். அப்படி நினைக்கும் குழந்தைகள் யாரிடமும் பேசாமல் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மவுனமாகிவிடும்.

குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத் தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக் கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவை யற்ற ஆயுதமாகும்.

குழந்தைகளை கண்டிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும். கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு மற்ற குழந்தைகள் முன் அவர்களை திட்டுவதோ அவமதிப்பதோ கூடாது. ஏன்என்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.
Tags:    

Similar News