லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு அதிகளவு பற்பசை தீங்கு விளைவிக்கும்

Published On 2019-02-18 03:56 GMT   |   Update On 2019-02-18 03:56 GMT
சிறுவர்கள் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசை விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அதிக அளவில் பற்பசையை பயன்படுத்துவது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
சிறுவர்-சிறுமியர்களை காலையில் பல் துலக்க வைப்பதே பெரும்பாலான பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. மூன்று, நான்கு வயது கடந்த குழந்தைகள் பல் துலக்குவதற்கு சோம்பேறித்தனம் கொள்வார்கள். அவர்களுக்கு பெற்றோரே பல் துலக்கிவிடும் நிலையும் இருக்கிறது. அது ஒருபுறம் இருக்க, சிறுவர்கள் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசை விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். சிலர் டூத் பிரஷின் மேல்மட்ட பகுதி முழுவதும் பற்பசையை தடவி கொடுத்துவிடுவார்கள். அப்போதுதான் பற்களை நன்றாக சுத்தம் செய்ய முடியும் என்று நினைப்பார்கள். அது தவறானது.

மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவில்தான் பற்பசையை தடவி கொடுக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவிலும் நான்கில் ஒரு பகுதி அளவுக்குத்தான் பற்பசையை உபயோகிக்க வேண்டும். அதுதான் குழந்தைகளின் பற்களுக்கு ஆரோக்கியமானது.

அதிக அளவில் பற்பசையை பயன்படுத்துவது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். பல் துலக்கு வதற்கு பயன்படுத்தும் பிரஷ் மென்மையானதாக இருக்க வேண்டும். மென்மையான பிரஷ்தான் பற்களுக்கு பாதுகாப்பு தரும். கடின பிரஷ்களை பயன்படுத்துவது பற்களின் ஈறுகளுக்கு பங்கம் விளைவித்துவிடும். குழந்தைகள் உபயோகப்படுத்தும் பிரஷ் தலைப்பகுதி ஒன்றரை அங்குலம் அளவில் இருப்பது நல்லது.

குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் வரையாவது பல் துலக்க வைக்க வேண்டும். ஆனால் நிறைய பேர் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே குழந்தைகளை பல் துலக்க வைத்துவிடுகிறார்கள். சில குழந்தைகள் பல் துலக்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அமெரிக்காவிலுள்ள நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் நடத்திய ஆய்வில் 38 சதவீத குழந்தைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு பற்பசை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. பட்டாணி அளவில்தான் பற்பசையை பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
Tags:    

Similar News