லைஃப்ஸ்டைல்

குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று - தடுக்கும் வழிமுறைகள்

Published On 2019-02-13 05:46 GMT   |   Update On 2019-02-13 05:46 GMT
குழந்தை பிறந்த பிறகு, 5 வயது வரையிலும் குடல் தொடர்பான குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அவற்றில் குடல் தொடர்பான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இளம் குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுகிற ஷிகெல்லோசிஸ் என்கிற குடல் சம்பந்தப்பட்ட தொற்றுநோயை உண்டாக்கும் ஒரு பாக்டீரியா குழுவின் பெயர்தான் ஷிகெல்லா(Shigella). பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகின்றனர்.

நோய் அறிகுறிகள்

இந்த நோய்த்தொற்றின் முக்கியமான அறிகுறி வயிற்றுப்போக்கு. இது மற்ற வயிற்றுப் பிரச்சனைகளைவிட கடுமையானதாக இருக்கும். அடிக்கடி ரத்தத்துடன் கலந்த வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுத் தசைகளில் பிடிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்கிறார் மருத்துவரும் அமெரிக்கக் குடல் மற்றும் இரைப்பை அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான Kara Gross Margolis. குமட்டல், வாந்தி, அரிதான வலிப்புத் தாக்கங்கள், பிந்தைய தொற்று வாதம் என்கிற எதிர்வினை வாதம் போன்ற பிற அறிகுறிகளும் இந்நோயால் உண்டாகிறது.

இந்த வாதத்தின் அறிகுறிகள் பெரும்பாலும் கணுக்கால், முட்டிகள், பாதம் மற்றும் இடுப்புப் பகுதி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்ற பிற வடிவங்களிலும் இருக்கின்றன. சிலருக்கு குடல் அசைவுகளில் பிரச்சனை, மலக்குடல் கீழே சரிந்து போதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. ஷிகெல்லோசிஸ் நோயின் அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்டதற்கு பின் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தோன்றும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கும்.

நோய்த்தடுப்பு முறைகள்

இந்த நோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு சரியான பின்பும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரைக்கும் இந்நோய்த் தொற்று இருக்கும். எனவே, நம்மை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு நம் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

கழிவறைக்கு சென்ற பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளின் Diaper-ஐ மாற்றிய பிறகு சுத்தமாக கைகளை கழுவுவதோடு அதை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். உங்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்னை இருக்கும் போது உணவு தயார் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த பாக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பல வழிகளில் பரவும் என்பதால், உங்கள் குழந்தைகளுக்கு இப்பிரச்சனை இருந்தால் அது சரியாகும் வரையில் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இதன் மூலம் மற்ற குழந்தைகளுக்கு பரவுவதைத் தடுக்கலாம்.

வெளியிடங்களில் உணவருந்துவதைத் தவிர்த்துவிட்டு வீடுகளில் நாமே சுகாதாரமான முறையில் நமது உணவைத் தயார் செய்து சாப்பிடலாம். இதனால் வெளியிடங்களில் உள்ள சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் மூலம் இத்தொற்று பரவுவதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

வெளியூர் பயணங்களின்போது, நன்கு வேகவைத்த உணவு மற்றும் சுத்தமான தண்ணீர், பழங்கள்போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News