லைஃப்ஸ்டைல்

உலகத்தின் உன்னதம் குழந்தை

Published On 2018-11-14 02:35 GMT   |   Update On 2018-11-14 02:35 GMT
குழந்தைகளோடு செலவழிக்கும் நேரங்கள் உறவுகளின் முதலீடு. அதில் அவர்களோடு விளையாடி அடிக்கடி தோற்றுப்போனால், வாழ்வில் வெற்றியே.
இன்று (நவம்பர் 14-ந்தேதி) குழந்தைகள் தினம்.

குழந்தைகள் ஒரு குடும்பத்தின் பொக்கிஷம். இந்த தேசத்தின் அற்புதம். உலகத்தின் உன்னதம். அவர்கள் தெய்வத்தின் மறு வடிவங்கள். இந்த மண்ணை துளிர்விக்கும் பசுமைபோல், மனதை குளிர்விக்கும் அன்பு மேகங்கள். வாழ்வின் எதார்த்தங்கள். வருங்கால மனிதனுக்கு தனது தலைமுறையை எடுத்துச் செல்லும் புதிய மரபணுக்கள். இம்மண்ணில் தவழும் நிலவுகள்.

குழந்தை ஓர் அற்புதமான கவிதை. உருவத்தில் தெரிவது அல்ல குழந்தை. அது கவிதைபோல் கருவில் உருவாக்கப்படுவது. ஆதலால், வகுப்பறையில் கற்பதற்கு முன்பே, கருவறையிலேயே அது நிறைய உருக்கொள்கிறது. கருவிற்குள் இருக்கும் குழந்தைக்கு தாய் கற்றுக் கொடுப்பதைத்தான், அது பிறந்ததும் மண்ணில் பிரதிபலிக்கிறது.

குழந்தை மொழி இனிது. மழலை இனிதினும் இனிது. கவிதையை வாசிக்கவும், நேசிக்கவும் தெரிந்த மனிதனுக்கு, சந்தங்களின்றி வருகின்ற கவிதையும் மகிழ்விப்பதைப்போல், தம்மக்கள் மழலைச் சொல் யாழினிலும், குழலினும் இனிதெனப் புரியுமென்கிறார் திருவள்ளுவர். அமிழ்தம் உணவாகக் கிடைப்பது அரிது. உணவினை அமிழ்தாக்க அன்புக் கரங்களில் குழந்தைக்கு ஊட்டி மகிழுங்கள். குழந்தையும் அதேபோல் தன் சிறுகையில் கூழினை அளாவி ஊட்டும். அது அமிழ்தினும் இனிதென்பது சுவைத்தவர் பெருமிதம். இது வள்ளுவரின் வாழ்வியல் அனுபவம்.

ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடமும், முழுவதுமான பள்ளிக்கூடமும் பெற்றோரே. “மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு அனுப்பவேண்டாம்” என்று எழுதித் தந்த ஆசிரியரின் கடிதத்தை அம்மாவின் கையில் புரியாத வயதில் தந்தான் சிறுவன். அதைப் படித்துவிட்டு, அழுகையை மனதோடு அடக்கிக்கொண்டு, சத்தமாய் மகனிடம் “உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கேற்ப, அவனுக்கு கற்பிக்கும் திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை” என்று வாசித்தார் அந்த தெய்வீகத் தாய். அத்தாய் வீட்டினை பள்ளிக்கூடமாக்கினார். மகன் பின்னாளில் அதை ஆய்வகமாக்கினார். மூளை வளர்ச்சியில்லாத தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் அந்த குழந்தை, இன்று உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தனது பெயரை உச்சரிக்கும் பெருமை பெற்றது அவர் அன்னையாலே.

ஆபிரகாம் லிங்கன் தனது குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்போது அவனுக்கு கற்றுக் கொடுக்கவேண்டியவற்றை ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதினார். ஒவ்வொரு ஆசிரியரும், அதனை வகுப்பறை செல்வதற்கு முன் படித்துவிட்டு குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால், மொழியின் இலக்கணங்களை அறிவதற்கு முன்பு, வாழும் இலக்கணங்களை ஒவ்வொரு குழந்தையும் அறியும். ஓர் அற்புதமான மனித சமுதாயம் இம் மண்ணில் பரிசாய் அமையும். பெற்றோர்கள்தான் ஒவ்வொரு குழந்தையின் முன்மாதிரிகள். ஒவ்வொரு குழந்தையும் இம்மண்ணில் பிறக்கின்றபோது ஓர் ஆலமரத்தின் விதையைப்போல், அசாத்தியமான சக்தியோடு பிறக்கிறது. அதனைச் சரியான முறையில் வளர்த்தெடுத்தால் அக்குழந்தைகள் அற்புதங்களை நிகழ்த்தும்.



குழந்தைகள் மாயக் கண்ணாடிகள். ஒன்றை பலவாய் பிரதிபலிப்பவர்கள். அவர்களிடம் புன்னகைத்தால், நிறைய சிரிப்பர். திட்ட ஆரம்பித்தாலோ, வசைபாடுவர். அன்பாய்க் கொஞ்சினால் பாசமழை பொழிவர். பாராட்டினால் வாழ்த்துப் பூமாலை சூடுவர். பகைத்தால் போர் புரிவர். சிறு சேட்டைகளைச் சகித்தால், பொறுமையின் இலக்கணமாவர். கிண்டலடித்தால், வெட்கித் தலைநிமிரார். ஊக்கப்படுத்தினால், நம்பிக்கையின் தும்பிக்கையாயிருப்பர். அவமானப்படுத்தினால், குற்றவாளிபோல் கூனிக் குறுகிடுவர். அங்கீகரித்தால், உலகம் விரும்பும் மனிதராவர்.

நேர்மைப்படுத்தினால் நீதிமானாய் ஜொலிப்பர். மொத்தத்தில் நாம் விதைப்பது எவ்விதையாயிருப்பினும், வளர்ந்ததும் மரங்கள் ஒரு விதையை மட்டும் தருவதில்லை. அதுபோல் ஓராயிரமாய் மகிழ்ந்து தருவர் குழந்தைகள். அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளாலும், பெற்றோர்களாலும், குழந்தைகளின் பேச்சுத்திறன் பாதிக்கப்படுகிறது. அவர்களின் உடல் பருமனாகிறது. சிறுவயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றனர் என்பது ஆராய்ச்சியின் எச்சரிக்கை. மகாகவி பாரதி போல் “ஓடி விளையாடு பாப்பா!” என்று ஓடச் சொல்லிக் கொடுக்கும் தந்தை இந்த தேசத்தின் ஆரோக்கியத் தூண்.

மனதிற்கு ஒரு கலையையும், உடலுக்கு ஒரு விளையாட்டையும் தன்னுள் உருவாக்கிக் கொள்ளும் குழந்தை நம் தேசத்தின் உயிர்ப்பு. அதை ஒவ்வொரு குழந்தையிலும் விதைப்போம்.

குழந்தைகள் பெற்றோர்களின் பிம்பங்கள். ஒரு குழந்தையின் தாத்தா இறந்ததும் அவரது அறை சுத்தம் செய்யப்பட்டது. அதிலிருந்த தேவையற்றவைகள் தூக்கியெறியப்படுகின்றன. தாத்தா சாப்பிட்ட நசுங்கிய தட்டை மட்டும் குழந்தை வீட்டிற்குள் கொண்டு வந்தது. “இதை ஏன் எடுத்து வந்தாய்?” என்று தந்தை கேட்டார். அப்பா! நீங்க வயதானதும் உங்களுக்கு சாப்பாடு போடுவதற்குத்தான்! என்றது குழந்தை. வளர்த்த தந்தையை கொச்சைப்படுத்தியவருக்கு, தந்தையாகிய குழந்தை சொல்லிக்கொடுத்த பாடம் இது.

குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் அதிகமாக விளையாட விரும்பும். அதனைத் தொந்தரவு என நினைத்து அவர்களை அமைதிப்படுத்த அவர்கள் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ அல்லது ஒரு செல்போனையோ கையில் கொடுக்கும்போது குழந்தைகள் அமைதியாகிவிடும். அதுபோல், சமூக வலைதளங்களில் சிக்கிப்போகும் குழந்தை, விட்டில் பூச்சிகளாய் விரைந்து மடியும். குழந்தைகளை நெறிப்படுத்துவதும், வழிப்படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும். இல்லையெனில், அவர்களுக்கு தருகின்ற வாய்ப்புகள் துடுப்பில்லாத கலன்போல கடலில் மூழ்கிவிடும்.

குழந்தைகளோடு செலவழிக்கும் நேரங்கள் உறவுகளின் முதலீடு. அதில் அவர்களோடு விளையாடி அடிக்கடி தோற்றுப்போனால், வாழ்வில் வெற்றியே.

ஆர்.திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ்., துணைஆணையர், நுண்ணறிவுப்பிரிவு
Tags:    

Similar News