ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலை படத்தில் காணலாம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

Published On 2019-05-30 06:28 GMT   |   Update On 2019-05-30 06:28 GMT
திருப்பரங்குன்றம் காசி விசுவநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசுவநாதர் கோவில் உள்ளது. மேலும் மலைமேல் குமரர் என்ற சுப்பிரமணிய சுவாமிக்கு என்று தனி சன்னதியும் அங்கு உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் வற்றாத காசிக்கு நிகரான புண்ணிய தீர்த்த (சுணை) குளம் உள்ளது. இந்த குளத்தை தெய்வீக புலவர் நக்கீரருக்காக முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு பாறையை பிளந்து உருவாக்கியதாக புராணம் கூறுகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான மச்சமுனிவர் இங்கு மீனாக அவதரிக்கிறார் என்று செவிவழி செய்தி கூறுகிறது.

மலைமேல் குமரருக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வேல் எடுக்கும் திருவிழா காலங்காலமாக தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மலையடிவாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேல் எடுத்து அதை பல்லக்கில் வைத்து மலைமேல் கொண்டு செல்வார்கள். பிறகு காசிக்கு நிகரான தீர்த்த குளத்தில் அபிஷேகம் நடைபெறும். அவை கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த தலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுக்கு ஒருமுறை திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது மரபு. அந்த வகையில் காசி விசுவநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டு நிறைவு பெற்றுவிட்டது. மேலும் கூடுதலாக 6 மாதம் கடந்துவிட்டது. பொதுவாக ஒரு கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால் ஒரு ஆண்டுக்கு முன்பே திருப்பணி தொடங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த கோவில் நிர்வாகம் அதற்கான பணிக்கு பிள்ளையார் சுழி கூட போடவில்லை.

வரலாற்றில் முதற்படை வீடு என்ற பெருமை கொண்ட இந்த கோவிலுக்கு என்று கடந்த ஓராண்டுக்கு மேலாக தனியாக துணை கமிஷனர் மற்றும் அலுவலக சூப்பிரண்டு நியமிக்கப்படாத நிலையே உள்ளது. இதுவே கும்பாபிஷேகம் நடைபெறாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் துணை கமிஷனர் இல்லாததால் பொறியாளர் பிரிவு திட்டப் பணியில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று சக ஊழியர்கள் புகார் கூறும் நிலை உள்ளது.

எனவே இனியாவது போர்கால அடிப்படையில் திருப்பணிகள் மேற்கொண்டு காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அப்போது தான் ஐதீகம், மரபுகள் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் தொன்று தொட்டு தொடரும். இல்லையென்றால் ஐதீகம் என்று சொல் காலப்போக்கில் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து விடும்.ஐதீகம் நிலைப்பதற்கு காசி விசுவநாதர் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முன்வருமா என்று கேள்வியுடன் பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். 
Tags:    

Similar News