ஆன்மிகம்
அல்லித்துறை செல்வமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

செல்வமாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2019-05-29 05:34 GMT   |   Update On 2019-05-29 05:34 GMT
சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை செல்வமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை செல்வமாரியம்மன் கோவிலில் கடந்த 12-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு படுகள நிகழ்ச்சியும், கழுவேற்றமும் நடைபெற்றது. நேற்று காலை திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை தூக்கி வந்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று(புதன்கிழமை) கிடா வெட்டு நிகழ்ச்சியும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

இதேபோல சோமரசம்பேட்டை அருகில் உள்ள தாயனூர் மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் சப்பர தேரில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று பக்தர்கள் பால்குடம், கரகமும் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. இன்று(புதன்கிழமை)குட்டி குடித்தலும், நாளை(வியாழக்கிழமை) இளநீர் பூஜையும் நடைபெறுகிறது. நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.
Tags:    

Similar News