ஆன்மிகம்

ஈசனின் திருவருள் பெற்ற திருநாவுக்கரசர்

Published On 2019-05-25 09:32 GMT   |   Update On 2019-05-25 09:32 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவாமூரில், புகழனாருக்கும், மாதினியாருக்கும் பிறந்தவர், மருள்நீக்கி. இவர் திருநாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவாமூரில், புகழனாருக்கும், மாதினியாருக்கும் பிறந்தவர், மருள்நீக்கி. இவரது தமக்கையின் திருநாமம் திலகவதி. பெற்றோர் இறந்து விட தமக்கை திலகவதியின் அரவணைப்பில் வளர்ந்தார் மருள்நீக்கி. இவர் திருப்பாதிரிப்புலியூர் சென்று சமண நூல்களைக் கற்று, சமண சமயத்தைத் தழுவி ‘தருமசேனன்' எனப்பெயர் சூடிக்கொண்டார்.

இதனால் மனம் நொந்த திலகவதி அருகிலுள்ள திருவதிகை பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் வந்தடைந்தார். அங்கேயே தங்கியிருந்து அனுதினமும் ஆலயத்தை தூய்மை செய்து, ஈசனுக்கும் அம்பாளுக்கும் மலர் தொடுத்து சாத்தி வழிபட்டு வந்தார். அதோடு தன் தம்பியை நல்வழிப் படுத்துமாறு இறை வனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் தரும சேனனை சூலை நோய் (வயிற்றுவலி) தாக்கியது. சமணத் துறவிகளால் தரும சேனனின் நோயைத் தீர்க்க முடியவில்லை. இதனை அறிந்த திலகவதி, தனது தம்பியை தன்னோடு அழைத்துக் கொண்டு ஈசனின் சன்னிதிக்குச் சென்று, திருநீற்றை எடுத்து தருமசேனனின் அடிவயிற்றில் தடவி விட்டார். அதோடு வாயில் உண்பதற்கும் கொடுத்தார். என்ன ஆச்சரியம். அதுவரை எந்த மருந்து கொடுத்தும் தீராத அந்த நோய், உடனடியாக தீர்ந்தது. தேவாரப் பதிகமும் பாடத் தொடங்கினார். அந்த பாடலின் இனிமையில் கரைந்த இறைவன், “இன்று முதல் நீ திருநாவுக்கரசர் என்று அழைக்கப்படுவாய்” என்று அசரீரியாக அருளினார்.

அதன்பிறகு சிவதல யாத்திரை தொடங்கினார் திருநாவுக்கரசர். பிற சமயத்தவர்களால் பல இன்னல்களை அடைந்து, ‘சிவாய நம’ என்ற மந்திரத்தால் அதில் இருந்து மீண்டு வந்தார். மறைந்து போயிருந்த பல ஆலயங்களை மீட்டெடுத்தார். பல சிவாலயங்களை தரிசித்து, இறுதியில் திருப்புகலூர் வந்தடைந்தார். அவரது பற்றற்ற நிலையையும், பக்தியையும் உலகிற்கு காட்ட விரும்பினார் சிவபெருமான். அதன்படி அவர் உழவாரப் பணிகள் செய்த இடத்தில் எல்லாம், பொன்னும், நவமணிகளும் கிடைக்கும்படிச் செய்தார். ஆனால் அதையெல்லாம் சிறிதும் மனசஞ்சலம் இல்லாமல் ஆலய தடாகத்துக்குள் வீசி எறிந்தார், திருநாவுக்கரசர்.

பின்னர் நடன மங்கைகளை வரச் செய்தார். அவர்கள் வந்து திருநாவுக்கரசரின் முன்பாக நின்று, கூந்தல் அவிழவும், ஆடைகள் நழுவும் படியாகவும் ஆடிப்பாடி அவரை மயக்க முற்பட்டனர். ஆனாலும் மனம் பிறழாத திருநாவுக்கரசர், உழவாரப் பணியில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். இதையடுத்து இனி செய்வதற்கு ஏதுமில்லை என்று கருதி பெண்கள் அங்கிருந்து அகன்றனர்.

ஒரு கட்டத்தில் சித்திரை மாத சதயம் நட்சத்திர நன்னாளில், திருப்புகலூர் ஈசனுடன் ஒன்றிப் போனார் திருநாவுக்கரசர். இந்த விழா திருப்புகலூர் சூளிகாம்பாள் சமேத அக்னி புரீஸ்வரர் திருத்தலத்தில் ஐதீக விழாவாக நடைபெறுகிறது.

திருநாவுக்கரசரின் அற்புதம்

திருவையாறு அருகிலுள்ள திங்களூரில் வாழ்ந்து வந்தார் அப்பூதியடிகள் எனும் சிவபக்தர். இவர் திருநாவுக்கரசரின் சிவபக்திச் சிறப்பினையும், சிவபெருமான் அவருக்கு அருளிய அருட்திறத்தையும் கேட்டு, திரு நாவுக்கரசரை நேரில் காணாமலேயே அவர் மேல் பெரும் பக்தி கொண்டார்.

தனது ஊரில் தான் அமைத்த நூலகத்திற்கு ‘திருநாவுக்கரசர் வாசக சாலை’ எனவும், தண்ணீர் பந்தலுக்கு ‘திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல்’ எனவும், திருமடத்திற்கு ‘திருநாவுக்கரசர் திருமடம்’ எனவும், அன்னதான சத்திரத்துக்கு ‘திருநாவுக்கரசர் அன்னதான சத்திரம்’ எனவும், தன்னுடைய பிள்ளைகள் இருவருக்கும் ‘பெரிய திருநாவுக்கரசு’, ‘சின்ன திரு நாவுக்கரசு’ எனவும் பெயரிட்டிருந்தார்.

ஒருமுறை திருநாவுக்கரசர் திங்களூர் பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயத்திற்கு வந்தார். அப்போது அங்கு அவர் பெயரில் அமைந்திருந்த அனைத்தையும் கண்டு வியப்புற்றார். அதற்கு காரணம் யார் என்று விசாரிக்க, அப்பூதியடிகள் பற்றி தெரியவந்தது. உடனே திருநாவுக்கரசர், அப்பூதியடிகள் வீட்டிற்குச் சென்றார். அங்கு திருநாவுக்கரசருக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. அந்த வீடும் கூட ‘திருநாவுக்கரசர் இல்லம்’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

வீட்டின் முன்பு நின்று “அப்பூதியாரே! அடியேன் திருநாவுக்கரசு வந்திருக்கிறேன்” எனக்கூறி அழைத்தார்.

வந்திருப்பவர் திருநாவுக்கரசர் என்பதனை அறிந்த அப்பூதியடிகள், தம் கைகளைத் தலைமேல் குவித்துக் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிய அவர் திருப்பாதங்களைப் பணிந்து தொழுதார். பின்னர் திருநாவுக்கரசரை இருக்கையில் அமரச் செய்து தமது குடும்பத்துடன் பூஜித்து வழிபட்டார். திருநாவுக்கரசரைத் தமது இல்லத்தில் அமுதுண்ண வேண்டினார். திருநாவுக்கரசரும் அதற்கு இசைந்தார்.

அறுசுவை உணவு தயாரானது. திருநாவுக்கரசர் அமுதுண்ண வாழை இலை அரிந்து வரும்படி, தன்னுடைய மூத்த மகனை அனுப்பினார் அப்பூதியடிகள். ஆனால் வாழை இலையை எடுத்துவரும் வழியில் அவனை பாம்பு தீண்டிவிட்டது. இருப்பினும் வாழை இலையை கொண்டு வந்து பெற்றோரிடம் கொடுத்து விட்டு, தன்னை பாம்பு தீண்டிய விஷயத்தை சொல்லி விட்டு இறந்து போனான்.

அப்பூதியடிகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘சிவனடியார் தன் வீட்டில் உணவருந்தும் வாய்ப்பை தான் இழந்து விடுவோமே’ என்று கருதிய அப்பூதியடிகள், மகன் இறந்ததை மறைத்து, திருநாவுக்கரசருக்கு உணவளிக்க முன்வந்தார்.

உணவருந்தும் முன் ‘சிவாய நம’ என்று ஓதி, அனைவருக்கும் திருநீறு வழங்கினார், திருநாவுக்கரசர். அப்போது அப்பூதியடிகளின் மூத்த மகனைக் காணவில்லை. அது குறித்து கேட்டார் திருநாவுக்கரசர். ஆனால் அப்பூதியடிகள், “இனி அவன் உதவமாட்டான்” என்று கூறினார்.

என்ன ஏதென்று திருநாவுக்கரசர் வலியுறுத்தி கேட்கையில் தான், அவனை பாம்பு தீண்டியதும், அவன் இறந்து போனதும் தெரியவந்தது.

அதைக் கேட்டு அதிர்ந்த திருநாவுக்கரசர், “எங்கே பிள்ளை? அவனை உடனே திங்களூர் கயிலாசநாதர் ஆலய மண்டபத்திற்கு கொண்டுவாரும்' எனக்கூறினார்.

அனைவரும் இறந்த சிறுவனின் உடலோடு ஆலயத்திற்குச் சென்றனர். அங்கு, “ஒன்று கொலாம் அவர்சிந்தை உயர்வரை' எனத் தொடங்கும் ‘விடம் தீர்த்தப் பதிகம்’ பாடி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றினார், திருநாவுக்கரசர்.

அனைவரது கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அப்பூதியடிகள் தன் குடும்பத்தோடு, திருநாவுக்கரசரின் திருவடிபணிந்து தொழுதார்.

அமைவிடம்

மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 35 கி.மீ தூரத்திலும், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்திலும், திருநள்ளாறிலிருந்து 11 கி.மீ தூரத்திலும் திருப்புகலூர் அமைந்துள்ளது.
Tags:    

Similar News