ஆன்மிகம்

ராஜயோகம் தரும் ராஜமாதங்கி

Published On 2019-05-24 06:33 GMT   |   Update On 2019-05-24 06:33 GMT
ராஜமாதங்கி தேவி, பக்தர்களுக்கு சகல நலன்களையும், செல்வத்தையும் அளிப்பதற்காக, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் சக்திகளும் ஒருங்கே பெற்றவளாக இருக்கிறாள் என்பது ஐதீகம்.
கல்வி மற்றும் செல்வம் ஆகிய இரண்டு பாக்கியங்களுக்கும் அதிதேவதையாக இருப்பவள் ராஜமாதங்கி ஆவாள். ஒப்பற்ற அழகும், அனைவரையும் வணங்கச் செய்யும் கம்பீரமும் கொண்ட ராஜமாதங்கிக்கு, ராஜ சியாமளா, காதம்பரி, வாக் விலாஸினி என்ற பெயர்களும் உள்ளன. ஆதிசங்கரர் முதல் சங்கீத மும்மூர்த்திகள் வரை ஆன்மிக சான்றோர்கள் பலரும் இந்த அன்னையை வழிபட்டு சிறப்படைந்துள்ளனர்.

ஆதி பராசக்தியின் மந்திரிணியாக இருந்து ஆலோசனைகள் சொல்லும் இவள், சாக்த வழிபாட்டில் சப்த மாதர்களில் ஒருவராகவும், தசமகா வித்யைகளில் ஒன்பதாவது நிலையிலும் இருக்கிறாள். இந்தியாவின் வட மாநிலங்களில் இவளை ‘சியாமளா தேவி’ என்று அழைக்கிறார்கள். இதற்கு ‘நீலம் கலந்த பச்சை நிறம்’ என்று பொருளாகும். ராஜமாதங்கி தேவி, பக்தர்களுக்கு சகல நலன்களையும், செல்வத்தையும் அளிப்பதற்காக, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் சக்திகளும் ஒருங்கே பெற்றவளாக இருக்கிறாள் என்பது ஐதீகம்.

மதங்க முனிவரின் மகள்


இறைவனின் அருள் வேண்டி கடும் தவம் செய்தார் மதங்க முனிவர். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சியளித்தார். ஈசனிடம், “அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும்” என்றும், “மகளை மணந்து கொண்டு ஈசன் தனக்கு மருமகனாக இருக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் வைத்தார். அப்படியே சிவனும் அருளினார்.

மகாசக்தி மனித உருவம் எடுக்க இயலாது என்பதால், அன்னையின் மந்திர சக்தி மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தது. திருவெண்காடு ஆலயத்தில் உள்ள மதங்க புஷ்கரணியில் மலர்ந்திருந்த நீலோத்பல மலரில் ராஜ மாதங்கி பிறந்தாள். அது ஒரு ஆடி மாத வெள்ளிக்கிழமையாகும். அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் கையில் உள்ள கரும்பு வில்லே ராஜமாதங்கியாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது. மாதங்கி பருவம் அடைந்ததும், ஈசனின் வாக்குப்படியே அவருக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டார் மதங்க முனிவர். சித்திரை மாத வளர்பிறை சப்தமி திதியில், சிவபெருமான் மதங்கேஸ்வரராக வருகை புரிந்தார். மாதங்கிக்கும், ஈசனுக்கும் திருவெண்காட்டில் திருமணம் நடந்தது என்று திருவெண்காடு தல புராணம் கூறுகிறது.

திருமணத்தின்போது, அன்னை மாதங்கிக்கு எவ்விதமான சீர் வரிசையும் செய்யப்படவில்லை. அகிலத்தையே தன் கைப்பிடியில் வைத்திருக்கும் நாயகிக்கு, தம்மால் என்ன செய்ய முடியும் என்று மதங்க முனிவர் அமைதியாக இருந்துவிட்டார். ‘ஆண்டவனின் திருமணமே ஆனாலும், சீர் வரிசை இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது’ என தேவர்களுக்குள் விவாதம் ஏற்பட்டது. அது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் சிவனே தலையிட்டு, “சீர்வரிசை தருவதும், பெறுவதும் தவறு” என்று கண்டித்தார்.

“சீர் பெறுவது திருமணச் சடங்குகளில் ஒன்று” என பிரம்மா கூறியதை அடுத்து, சிவனின் ஆணைப்படி நந்திதேவர் கயிலையில் இருந்து பெரும் செல்வத்தினை கொண்டு வந்து, அன்னைக்கு கொடுத்து பிரச்சினையை தீர்த்ததாக திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் ஆலய தல புராணம் தெரிவிக்கிறது.

அரச போகம் அளிக்கும் மாதங்கி தேவியின், அங்க தேவதைகளாக ஹசந்தி சியாமளா, சுக சியாமளா, சாரிகா சியாமளா, வீணா சியாமளா, வேணு சியாமளா, லகுஷ்யாமளா என ஆறு தேவிகள் தோன்றி கலைகளின் அதிபதிகளாக மாறினர். லலிதா சகஸ்ர நாமம், ஸ்ரீசாக்த பிரமோதத்தம், மீனாட்சி பஞ்ச ரத்னம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம், நவரத்தின மாலா போன்ற பல நூல்களில் ராஜ மாதங்கியின் புகழ் போற்றப்படுகிறது.

இந்த தேவியின் மரகதப் பச்சை வண்ணம் - ஞானத்தைக் குறிக்கிறது. கைகளில் உள்ள வீணை - சங்கீத மேதை என்பதை சொல்கிறது. கிளி - பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும், ஆத்ம ஞானத்தையும் காட்டுகிறது. மலர் அம்பு - கலைகளில் தேர்ச்சியையும், பாசம், ஈர்ப்பு, சக்தியையும், அங்குசம் - அடக்கி ஆளும் திறனையும், கரும்பு- உலகியல் ஞானத்தையும் குறிப்பதாக ஐதீகம்.
Tags:    

Similar News