ஆன்மிகம்

திருப்புல்லாணி கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்

Published On 2019-05-22 08:27 GMT   |   Update On 2019-05-22 08:27 GMT
வைணவத் திருத்தலங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த ஆலயம் பற்றி சில தகவல்கள் இங்கே பார்க்கலாம்.
வைணவத் திருத்தலங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் சிறப்பு வாய்ந்தது. ராமநாதபுரம் அருகில் இருக்கிறது திருப்புல்லாணி திருத்தலம். இந்த பெருமாள் கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் சேதுக்கரை அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் பற்றி சில தகவல்கள் இங்கே பார்க்கலாம்.

சமுத்திர ராஜன் உருவம்

ராமபிரான், கடலில் பாலம் கட்ட அனுமதி வேண்டி நின்றான். ஆனால் கடல் அரசன், ராமர் முன்பாக தோன்றவில்லை. எனவே ராமர், கடலின் மீது பாணம் எய்த முயன்றார். இதனால் பயந்து போன சமுத்திர ராஜன், தன் மனைவியுடன் அங்கு தோன்றி ராம பிரானை சரணடைந்தான். இதை நினைவூட்டும் விதமாக, இந்த ஆலயத்தில் சயனராமர் சன்னிதி முன் மண்டபத்தில், சமுத்திர ராஜனும், சமுத்திர ராணியும் வீற்றிருக்கின்றனர். அருகில் ராமருக்கு உதவிய விபீஷணனும் இருக்கிறார்.

சயன ராமர்

கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி வேண்டி, மூன்று நாட்கள் காத்திருந்தார், ராம பிரான். அந்த மூன்று நாட்களும் தர்ப்பைப் புல்லின் மீது சயனம் கொண்டார். அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தில் ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து சயனித்த நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம் என்பதால் இங்கு சீதை இல்லை. ஆதிசேஷன் இருப்பதால், அவரது வடிவமான லட்சுமணனும் இங்கு இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். கருவறை சுவரில், கடலில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள்.

குழந்தை வரம்

குழந்தை பாக்கியத்திற்காக தசரதர், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து தேவதூதன் ஒருவன் அளித்த பாயசத்தை தனது மூன்று மனைவிகளுக்கும் வழங்கினார். அவர்கள் அதை சாப்பிட்டனர். அதன் பலனாக அவர்களுக்கு ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர்.

இத்தலம் அருகில் உள்ள சேதுக்கரையில் நீராடி விட்டு, கோவிலுக்கு வந்து நாகர் சிலைக்கு முன்பாக கணவனும் மனைவியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாக பிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக பால் பாயசம் தரப்படும். இதனை அருந்தினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
Tags:    

Similar News