ஆன்மிகம்
சேலம் கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

சேலம் கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2019-05-20 06:39 GMT   |   Update On 2019-05-20 06:39 GMT
சேலம் கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சேலத்தில் அழகிரிநாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் வைகாசி மாதத்தில் வரும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டுக்கான வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அழகிரிநாதருக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகிரிநாதர் சாமி, ராஜகணபதி கோவில் முன்பு இருக்கும் தேர்நிலையம் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர்.

இதையடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

சேலம் கடைவீதியில் அமைந்துள்ள ராஜகணபதி கோவில் முன்பு தொடங்கிய தேரோட்டம், முதல் அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் நின்று சாமியை தரிசனம் செய்ததுடன் தேர் மீது பூக்கள் தூவினர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News