ஆன்மிகம்
வயலூர் முருகன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

வயலூர் முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

Published On 2019-05-18 03:36 GMT   |   Update On 2019-05-18 03:36 GMT
வயலூர் முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருச்சியை அடுத்த வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சாமி தினமும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு அழைத்து வரப்பட்டார். அதனை அடுத்து தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

தேரோட்ட நிகழ்ச்சியில் திருச்சி, அதவத்தூர், வரகனேரி, அல்லித்துறை, சோமரசம்பேட்டை, எட்டரை, கோப்பு, நவலூர் குட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தேர் வலம் வந்தபோது, ஆங்காங்கே சாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பட்டு செல்லும் வைபவமும் நடந்தது.

இன்று (சனிக்கிழமை) காலை நடராஜர் தரிசனம், விசாக நட்சத்திரத்தில் தீர்த்தவாரியும், பிறகு பால்காவடிகள், அபிஷேகங்கள் நடைபெறும். இரவு வள்ளிதேவசேனா சமேத முத்துகுமாரசாமி வெள்ளி கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சி அளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அத்துடன் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. 20-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறும். 
Tags:    

Similar News