ஆன்மிகம்
திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

64 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த உறையூர் பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம்

Published On 2019-05-18 03:15 GMT   |   Update On 2019-05-18 03:15 GMT
திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் 64 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி உறையூரில் மிகவும் பழமை வாய்ந்த பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. உதங்க மாமுனிவருக்கு சிவபெருமான் ஐந்து நிறங்களில் காட்சி அளித்ததால் இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் ஐவண்ணநாதர், பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15-ந்தேதி சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த ஆண்டு தேரோட்டத்திற்காக தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை 8.10 மணிக்கு இந்த தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. சன்னதி தெரு, சவுராஷ்டிரா தெரு, டாக்கர் ரோடு, நவாப் தோட்டம் உள்ளிட்ட வீதிகளில் சுற்றிய தேர் இறுதியாக 12 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது.

பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோவிலில் கடந்த பல ஆண்டுகளாகவே வைகாசி விசாகத்தின்போது சவுக்கு கம்புகளால் செய்யப்பட்ட சாதாரண தேரில் தான் சுவாமி வீதி உலா வந்தார். 64 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று புதிதாக செய்யப்பட்ட தேரில் சுவாமி வலம் வந்ததால் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 
Tags:    

Similar News