ஆன்மிகம்

வயலூர் முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடக்கிறது

Published On 2019-05-17 05:36 GMT   |   Update On 2019-05-17 05:36 GMT
திருச்சி அருகே வயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடக்கிறது.
திருச்சி அருகே வயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் இரவில் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று அதவத்தூரில் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி ரதாரோகணம் நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கி நடக்கிறது. இரவில் சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பாடு நடைபெறுகிறது.

நாளை(சனிக்கிழமை) நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் பால்காவடி எடுத்து கோவிலுக்கு வருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இரவில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளிக்கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அத்துடன் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 20-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News