ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்

Published On 2019-05-16 06:38 GMT   |   Update On 2019-05-16 06:38 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவில் நாளை தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவஇரத்து 2 மணி நேரம் நிறுத்தப்படும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று இரவு மண்டகப்படி நிகழ்ச்சி, சமய உரை, சிறப்பு நாதஸ்வர கச்சேரி, பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருதல் போன்றவை நடந்தது. இன்று (வியாழக்கிழமை) இரவு அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை சிறப்பு அபிஷேகமும், காலை 8 மணிக்கு தேரோட்டமும், மதியம் அன்னதானமும், இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 18-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மனுக்கு கடலில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு தெப்பத்திருவிழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார் மற்றும் தலைமை கணக்காளர் ஸ்ரீ ராமச்சந்திரன் ஆகியோர் தீவிரமாக செய்து வருகிறார் கள்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை நடைபெறும் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள். விவேகானந்த கேந்திர ஊழியர்கள், விவேகானந்தர் மண்டப ஊழியர்கள், பூம்புகார் கப்பல் போக்குவஇரத்து கழக ஊழியர்கள் கலந்து கொள்ள வசதியாக நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவஇரத்து நிறுத்தப்படும். 10 மணிக்கு பிறகு படகு போக்குவஇரத்து நடைபெறும் என்று பூம்புகார் கப்பல் போக்குவஇரத்து கழக மேலாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News