ஆன்மிகம்

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்

Published On 2019-05-15 06:41 GMT   |   Update On 2019-05-15 06:41 GMT
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம்தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம் தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் சிரசு மிதந்து வரும் கண்கொள்ளா காட்சியை காண்பதற்கே ஆயிரம் கண்கள் வேண்டும்.

கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழாவையொட்டி இன்று (புதன்கிழமை) தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு அதிகாலை சுமார் 5 மணி அளவில் கெங்கைஅம்மன் சிரசு ஊர்வலம் புறப்படும். ஊர்வலம் தரணம்பேட்டை, என்.ஜி.செட்டி தெரு, காந்தி ரோடு, ஜவகர்லால் தெரு, கோபாலபுரம் வழியாக கெங்கையம்மன் கோவிலை வந்தடையும்.

அம்மன் சிரசு ஊர்வலம் வருகிற வழிநெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிநின்று அம்மனை தரிசனம் செய்வார்கள். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபடுவர். மேலும் நேர்த்திக்கடனாக பலர் அம்மன், காளி உள்ளிட்ட வேடம் அணிந்து வழிபடுவார்கள். சிலம்பாட்டம், புலி ஆட்டம் போன்றவை ஊர்வலத்தினை பின்தொடர்ந்து நடைபெறும்.

கெங்கையம்மன் கோவிலை சிரசு வந்தடைந்த பின்னர் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சி உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சாந்த சொரூபியாக மாறும் கெங்கைஅம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருள் பாலிக்கிறார். பின்னர் இரவு 8 மணி அளவில் சண்டாளச்சி உடலில் இருந்து பிரிக்கப்பட்ட அம்மன் சிரசு வீதிஉலாவாக கவுண்டன்ய நதியின் வழியே சென்று புங்கனூர் அம்மன் கோவிலை அடையும். அப்போது கண்ணை கவரும் சிறப்பு வாண வேடிக்கை நடைபெறும்.
Tags:    

Similar News