ஆன்மிகம்
மாட்டுவண்டியில் சுவாமி-அம்பாள் புறப்பாடாகியபோது எடுத்த படம்.

திருவாதவூர் மாங்கொட்டை திருவிழா: சுவாமி-அம்பாள் மாட்டுவண்டியில் புறப்பாடு

Published On 2019-05-14 06:59 GMT   |   Update On 2019-05-14 06:59 GMT
திருவாதவூர் திருமறைநாதர் கோவில் மாங்கொட்டை திருவிழாவில் நேற்று சுவாமி- அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் மாட்டுவண்டி பல்லக்கில் புறப்பாடு ஆகினர்.
மேலூரை அடுத்த திருவாதவூரில் திருமறைநாதர்-வேத நாயகி அம்பாள் கோவில் உள்ளது. இது பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழமையான சிவாலயங்களில் ஒன்றாகும். தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலாக உள்ளது. இங்கு வைகாசி விஷாக மாங்கொட்டை திருவிழா கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி வேதநாயகி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் திருமறைநாதர் மாட்டுவண்டி பல்லக்கில் மேலூர் சிவன் கோவில் நோக்கி நேற்று புறப்பாடானார். வரும் வழியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மேலூர் தாசில்தார் சிவகாமிநாதனுக்கு முதல் மரியாதை அளித்து பரிவாரங்கள் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுவாமி மேலூரில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி இரவில் சிவன் கோவிலில் தங்கலாகி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். இரவில் விடிய, விடிய ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. அதிகாலையில் திருமறைநாதர் திருவாதவூர் புறப்பாடு ஆகிறார். திருக்கல்யாணமும், தேரோட்டமும் நடைபெற உள்ளது.

மேலூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோவிலுக்கு தினமும் சென்று வணங்கிய பின்னரே அன்றாட பணிகளை தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் வயோதிகம் காரணமாக திருவாதவூர் செல்ல முடியாத காரணத்தால் மனம் உருகி வேதனையடைந்தார். அவரது கனவில் தோன்றிய சிவபெருமான் நானே மேலூருக்கு வந்து பார்க்கிறேன் எனக் கூறினாராம்.

அப்போது ஆங்கிலேயர் காலத்தில் இருந்த மேலூர் தாசில்தார் அந்த சிவபக்தருக்கு உதவி செய்து மேலூரில் கோவில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அந்த புராண நிகழ்வை மெய்ப்பிக்கும் வகையில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் திருவிழா நாட்களில் பல்லக்கில் வருவதாகவும் கோவில் தல வரலாறு கூறுகிறது. அதனாலேயை இன்று வரை மேலூர் தாசில்தாருக்கு என தனியாக மண்டகப்படியும் முதல் மரியாதையும் அளித்து கவுரவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் அப்போது மாம்பழத்தின் விளைச்சல் அதிகம் இருந்த காரணத்தால் பக்தர்கள் சாப்பிட்டு போட்ட மாங்கொட்டைகளாக கிடந்த காரணத்தால் இதுவே மாங்கோட்டை திருவிழா எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News