ஆன்மிகம்

வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி நிகழ்ச்சி

Published On 2019-05-14 04:21 GMT   |   Update On 2019-05-14 04:21 GMT
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் மணப்பாறை பஸ் நிலையம் முன்பு உள்ள முனியப்பசாமி கோவிலிலும் திருவிழா நடைபெற்று வருகிறது. வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் நிறைவாக நேற்று அதிகாலை முதல் கோவில் முன்பு ஆயிரக்கணக்கானோர் பொங்கல் வைத்து, மாவிளக்கு செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாலை 6.30 மணியளவில் கோவில் வழக்கப்படி பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி தலைமையில் காட்டு முனியப்பன் கோவில் சென்று பட்டியூர் கிராமங்களின் முக்கியஸ்தர்களை மேளதாள வாத்தியம் முழங்கிட வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்ததும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் அமர்ந்திருக்க பக்தர்கள் அதனை சுமந்து ராஜ வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். அப்போது, குதிரை மீது மாலைகளை வீசி வழிபட்டனர்.

வேடபரி கோவிலில் இருந்து புறப்பட்டதும் நகரில் பல்வேறு தெருக்களில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு வந்தனர். ஒவ்வொரு வருடமும் வேடபரி நிகழ்ச்சிக்கு முன்னதாக கோவில் முன்பு தீப்பந்தம் விளையாட்டு, சிலம்பம், தற்காப்பு கலை என பழமையான விளையாட்டுக்கள் நடைபெறும். இதே போல் நேற்றும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News