ஆன்மிகம்

பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: உற்சவர் கோவிந்தராஜசாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதிஉலா

Published On 2019-05-13 06:48 GMT   |   Update On 2019-05-13 06:48 GMT
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளான நேற்று முன்தினம் இரவு உற்சவரான கோவிந்தராஜசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்தநிலையில் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவரான கோவிந்தராஜசாமி சிறிய சேஷ வாகனத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவரான கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் அம்ச வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஊர்வலத்தின் முன்பாக கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கோவில் துணை நிர்வாக அதிகாரி வரலட்சுமி, உதவி நிர்வாக அதிகாரி விஜயபாஸ்கரரெட்டி, கோவில் சூப்பிரண்டு ஞானபிரகாஷ், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை உற்சவர் கோவிந்தராஜசாமி சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சம்பந்தப்பட்ட கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

அதன்படி திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியதையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து 132 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் 17 கிலோ 800 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது. காணிக்கையாக வழங்கப்பட்ட பொருட்கள் கோவிந்தராஜசாமி கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயசாமி கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு, பின்னர் ஊர்வலமாக கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.
Tags:    

Similar News