ஆன்மிகம்
நந்தி பகவான் மீது தாரா பாத்திரத்தின் மூலம் அபிஷேகம் நடைபெறுவதை படத்தில் காணலாம்.

வைத்தியநாதசாமி கோவிலில் நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தில் அபிஷேகம்

Published On 2019-05-13 04:53 GMT   |   Update On 2019-05-13 04:53 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசாமி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தின் மூலம் அபிஷேகம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் இதற்கு சிகரம் வைத்தாற்போல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கி, அனல் காற்று வீசி வருகிறது. பொதுமக்கள் கடும் வெயிலின் தாக்கத்தால் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்தநிலையில் மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் கத்திரி வெயிலின் தாக்கம் குறையவும் மழை பெய்யவும் பல நூற்றாண்டுகளாக கோவிலின் மூலவரான சிவபெருமானுக்கு முன்புள்ள நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தின் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய உடன் இந்த பாத்திரத்தின் மூலம் நந்தி பகவானின் தலைக்கு மேல் குளிர்ந்த நீர் சொட்டு சொட்டாக தலையில் விழும் படி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நந்தி பகவான் மனம் குளிர்ந்து, சிவபெருமானிடம் பூமியில் மக்கள் கடும் வெயிலின் தாக்கத்தில் உள்ளனர், மழையின்றி கடுமையான துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே உடனடியாக மழை பெய்ய அருள வேண்டும் என வேண்டுவதாகவும், சிவபெருமானும், நந்தி பகவானின் கோரிக்கையை ஏற்று பக்தர்களை காக்க மழை பொழிய வைத்து, பூமியில் சுபிட்சத்தை உண்டாக்குவார் என்பதும் ஐதீகம்.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் மூலவருக்கு முன்பு உள்ள நந்தி பகவானின் தலைக்குமேல் ஒரு பெரிய தாரா பாத்திரத்தை தொங்கவிட்டு அதிலிருந்து சொட்டு சொட்டாக குளிர்ந்த நீர் நந்தி பகவானின் தலை மீது 24 மணி நேரமும் பொழியும்படி வைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு நந்தி பகவானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் ஜவகர் மற்றும் கோவில் குருக்களும், கோவில் அலுவலர்களும் செய்துள்ளனர்.
Tags:    

Similar News