ஆன்மிகம்
திருமணகோலத்தில் பத்மகிரீசுவரர், அபிராமி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

சித்திரை திருவிழா: அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் திருக்கல்யாணம்

Published On 2019-04-18 04:16 GMT   |   Update On 2019-04-18 04:16 GMT
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது ஏராளமான பெண்கள், மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி புது தாலி அணிந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்புடன் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருட சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நாள்தோறும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள், வீதிஉலா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

இதையொட்டி காலை 7 மணியளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு 8 மணியளவில் நடராஜர்-சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கேடயத்தில் வீதிஉலா தொடங்கியது. இந்த வீதிஉலா நகரின் ரதவீதிகள் வழியே வலம் வந்து சன்னதியை அடைந்தது.

அதனைத்தொடர்ந்து மாலை 3 மணியளவில் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கின. இதனை கோவில் தலைமை குருக்கள் குருநாதன், சிவாச்சாரியார் சுரேஷ் நடத்தினர். இதில் முதல் வைபவமாக மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. இதில் சுவாமி பத்மகிரீசுவரர் மணக்கோலத்தில் கேடயத்தில் தேரடி வீதியில் வலம் வந்தார். அதன்பிறகு அபிராமி அம்மன்- பத்மகிரீசுவரர் மாலை மாற்றுதல் நடந்தது. பின்னர் மணக்கோலத்தில் பூஜைகள் நடைபெற்று இரவு 8 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

அப்போது ஏராளமான பெண்கள், மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி புது தாலி அணிந்து கொண்டனர். அதன்பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சண்முகவேல் மில்ஸ் நிர்வாக இயக்குனர்கள் வேலுச்சாமி, கந்தசாமி மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, கணக்கர் ஜெயப்பிரகாஷ், மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர். சித்திரை திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) மாலையில் தேரோட்டம் நடக்கிறது.
Tags:    

Similar News