ஆன்மிகம்

சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் காண டிக்கெட் முன்பதிவு

Published On 2019-04-03 05:48 GMT   |   Update On 2019-04-03 05:48 GMT
மதுரை சித்திரை திருவிழாவில், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் காண இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் காண இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.50 மணி முதல் 10.14 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக தெற்குகோபுரம் வழியாக கட்டணமில்லா தரிசனத்திற்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 3,200 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக இணையதளம் மூலமாக ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா தங்கும் விடுதியின் வரவேற்பு அறையில் வருகிற 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நேரடியாக முன்பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக www.maduraimeenakshi.org என்ற இணையதளமுகவரியில் வருகிற 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை முன்பதிவு செய்யலாம்.

கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் பக்தர்களின் வருமானவரி கணக்கு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்டு, வங்கி சேமிப்பு கணக்குபுத்தகம், ஓட்டுநர் உரிமம், ரேஷன்கார்டு, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு சான்று மற்றும் செல்போன் நம்பர், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவுக்கான படிவத்தில் புகைப்படம், முகவரி, சான்று ஆகியவற்றை பூர்த்தி செய்யும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்படும். வருகிற 12-ந் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் விவரம் திருக்கோவில் அலுவலக பலகையில் வருகிற 13-ந் தேதி ஒட்டப்படும். உறுதி செய்யப்பட்ட பக்தர்கள் 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பிர்லா தங்கும் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மையத்தில் ரசீது நகலை கொடுத்து, நுழைவு கட்டணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.

வெளியூரில் வசிக்கும் பக்தர்கள் முன்பதிவு உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்கப்பெற்று இணையதளம் மூலமாக தொகை செலுத்திய பக்தர்கள் மட்டும் பிர்லா தங்கும் விடுதியில் 17-ந் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை ரசீதை காண்பித்து கட்டணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். திருக்கல்யாண நுழைவுக்கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 6.30 மணி முதல் 8 மணி வரை மட்டுமே திருக்கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு கோபுரம் முனீஸ்வரர் சன்னதி பகுதியில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவார்கள். ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாண கட்டணச்சீட்டு முன்பதிவு செய்தவர் களுக்கு இட ஒதுக்கீடு செய்து வழங்குவது குறித்து திருக்கோவில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News