ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் கோவிலில் தை தேரோட்டம்

Published On 2019-01-17 06:20 GMT   |   Update On 2019-01-17 06:20 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் தெப்பத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தை கார்த்திகை தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை தங்க சப்பரத்திலும், இரவில் வெவ்வேறு வாகனங்களிலும் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்தநிலையில் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை தெப்ப முட்டு தள்ளுதல் மற்றும் தை கார்த்திகை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப மிதவை தயார்படுத்தும் பணி நடந்தது. பின்னர் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக தெப்பக்குளத்திற்கு வந்தார். அப்போது தெப்ப முட்டு தள்ளுதல் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சாமி புறப்பட்டு பதினாறு கால் மண்டபம் அருகே தயாராக இருந்த தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின்பு தேரோட்டம் நடைபெற்றது. நிலையில் இருந்த தேரை, பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா“ என்று பக்தி கோஷங்கள் எழுப்பி வடம் பிடித்து இழுத்தனர்.

கீழ ரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர் ஆனது, தென்றலாய் மெல்ல, மெல்ல ஆடி அசைந்து வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (வியாழக் கிழமை) காலை தெப்ப உற்சவம் நடக்கிறது. இரவு 7 மணி அளவில் மீண்டும் மின்னொளியில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News