ஆன்மிகம்

சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மர்

Published On 2018-12-23 08:41 GMT   |   Update On 2018-12-23 08:41 GMT
யோக நிலையில் இருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் அந்த யோகத்தை கைவிட்டு, பக்தர்களை கண் திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார்.


மிக்கானை மறையாய் விரிந்த விளக்க என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானைக் கடிகைத்தடங் குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்து ய்ந்து போனேனே!

-- திருமங்கையாழ்வார்

கார்த்திகை பிறந்து விட்டாலே அய்யப்ப சரண கோஷமும், தீப திருவிழா கோலாகலமும் நிறைந்து இருக்கும். இத்தகைய சிறப்பான கார்த்திகை மாதத்தில் நரசிம்மர் கண் திறந்து பார்க்கும் அற்புதமும் நிகழ்கிறது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மட்டுமே இந்த “கண் திறப்பு” நடக்கிறது.

நரசிம்மர் கண் திறந்து பார்க்கும் அற்புதத்தை நேரில் கண்டு, பலன் பெற விரும்பும் பக்தர்கள் செல்ல வேண்டிய இடம் சோளிங்கர். இங்கு யோக நிலையில் இருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் அந்த யோகத்தை கைவிட்டு, பக்தர்களை கண் திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார்.

எனவே சோளிங்கர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை கார்த்திகை மாதத்தில் என்றாவது ஒருநாள் சென்று வழிபட்டால் அரிய பலன்களை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் சோளிங்கர் திருத்தலம் பற்றிய சிறப்புகளை காணலாம்....

ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ் பெற்ற திருத்தலங்கள் 108. இவை திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 திவ்ய தேசங்களில் சோளிங்கர் மிகவும் பிரசித்தி பெற்ற திவ்யதேசமாகும்.  எந்த நூற்றாண்டில் இந்த தலமும், கோவிலும் ஏற்பட்டது என வரையறுக்க முடியவில்லை என்றாலும் 6-வது நூற்றாண்டில் ஏற்பட்டதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் கருதப்படுகிறது.

சோளிங்கரின் பெயர் புகழுக்கு காரணம் அங்கு இரண்டு தனித்தனி மலைகளில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் இருப்பதுதான். பெரிய மலையில் நரசிம்மரும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் நமக்குக் காட்சி அளித்து, அருளை வாரி வழங்குகிறார்கள். சோளிங்கர் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. சென்றால் பெரியமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீயோக நரசிம்மர் வீற்றிருக்கும் மலை அடிவாரத்தை நாம் அடையலாம். இங்குள்ள நரசிம்ம சுவாமி கோவிலுக்கு ‘கடிகாசலம்‘ என்னும் பெயரும் உண்டு. அதாவது ‘கடிகா+அசலம்‘ என்று பொருள்படும்.

‘கடிகா’ என்றால் ஒரு கால அளவு அல்லது நாழிகை என்று அர்த்தம். ‘அசலம்’ என்றால் மலை என்று பொருள். வாமதேவர், பிரகலாதன், சப்தரிஷிகள் ஆகியோர் நினைத்தவுடன் யோக நரசிம்மர் இம்மலையில் நாழிகைப் பொழுதில் காட்சி அளித்து அவர்களை ஆட்கொண்டார். மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, பய பக்தியுடன் நமஸ்காரம் செய்து எங்களை நல்லபடி ஏற்றி விட வேண்டும் என வேண்டிக் கொண்டு முதலில் பெரிய மலையில் ஏறத் தொடங்க வேண்டும். பெரிய மலை திரும்பிய திசையெல்லாம் பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கிறது.

நாம் பெரிய மலையில் ஏறி சன்னிதானத்தை அடையும் வரை வழியில் ஸ்ரீராமபிரானுக்கு உதவி செய்த குரங்கு கூட்டங்கள் நம்மை முன்னும் பின்னும் தொடர்ந்து வரும். கையில் பை, கேரி பேக் எடுத்துச் செல்ல முடியாது. பழ வகைகள் போன்றவை இருக்கும் என்று நினைத்து குரங்குகள் அவற்றை பிடுங்கிக் கொள்ளும். எனவே கவனமாக செல்ல வேண்டும்.

1305 படிகளைக் கடந்து மலை மீதுள்ள கோவிலை அடைந்ததும் அங்குள்ள குழாயில் கை, கால்களைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பக்தர்கள் வரிசையாக நிற்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். மலைக்குன்றில் உட்புறம் சிறிய குகை போன்ற அமைப்பில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மர் சதுர் புஜங்களுடன் இருப்பதை காணலாம். அதில் இரண்டு கைகளை திருவடி முட்டில் வைத்த வண்ணம் யோகபட்டத்தை கட்டிக் கொண்டு ‘யோக நரசிம்மனாய்’, ‘சாந்த சொரூபியாய்’ லட்சுமி நரசிம்மன் நமக்கு தரிசனம் அளிக்கிறார்.

அவரது தரிசனம் நமக்குப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகும். அதனால்தான் ஸ்ரீயோக நரசிம்மரை ஆழ்வார்களுள் திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் தம் தீந்தமிழ்ப் பாடல்களால் போற்றிப் பாடி, மனம் உருகி மங்களா சாசனம் செய்துள்ளனர். மூலவருக்கு மலைமேல் ஒவ்வொரு சுவாமி நட்சத்திரத்தன்றும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமையன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பெரிய மலையில் கார்த்திகை மாதத்தில் வெள்ளி முதல் ஞாயிறு வரை உள்ள நாட்கள் மிகவும் பிரசித்தம். இந்த மாதத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் யோகத்தை கலைத்து, கண் திறந்து பார்ப்பதால் கார்த்திகை சோளிங்கர் பயணமும் நரசிம்மர் தரிசனமும் மிகவும் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தீராத நோயுள்ளவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் மலை அடிவாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் குளித்து விட்டு 1305 படி ஏறி நரசிம்ம சாமியை தினம் 108 முறை பிரதட்சணம் செய்தால் ஸ்ரீயோக நரசிம்மனே அவர்கள் கனவில் வந்து குறை தீர்ப்பதாகத் தல புராணம் கூறுகிறது.



108 பிரதட்சணம் செய்பவர்கள் வசதிக்காக கோவிலின் மூன்றாவது பிரகாரம் மட்டும் அதிகாலையே திறப்பது வழக்கம். எந்த நிலையிலும், எவருக்குமே இரவில் மலை மேல் தங்க அனுமதி இல்லை. இங்கு தாயாருக்கு ‘அமிர்தவல்லி’ என்று பெயர். வலது திருக்கரத்தால் அமிர்தம் போன்ற அனுகிரகத்தை அளித்துக் கொண்டு நான்கு புஜங்களுடன், இரண்டு திருவடிகளையும் மடக்கி ஆசனத்தில் அமர்ந்துள்ளாள். அப்போதுதான் மலர்ந்த செந்தாமரை போன்ற மந்தகாச முகச்சிரிப்புடன் தாயாரின் தரிசனம் இருக்கிறது.

பெரிய மலையில் தரிசனம் செய்து முடித்த பிறகு கீழ்இறங்கி 2 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயர் எழுந்தருளி இருக்கும் சின்ன மலைக்குச் செல்ல வேண்டும். இந்த இடம் ‘கொண்டபாளையம்‘ என அழைக்கப்படுகிறது. ஸ்ரீஆஞ்சநேயரை தியானம் செய்து கொண்டே சிறிய மலையில் உள்ள 405 படிகள் ஏறிக் கோவிலை அடைலாம். என்ன ஆச்சரியம். தெய்வீகமான சூழ்நிலையில் அமைதியான கோவிலாக ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. தெப்ப உற்சவம் நடக்கும் வற்றாத ‘சக்கரைக்குளம்’ என்றும் அனுமத்புஷ்கரணி என்றும் அழைக்கப்படும் திருக்குளத்தில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு மேற்கு நோக்கி அமர்ந்துள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

மற்ற இடங்களில் நாம் தரிசிக்கும் ஆஞ்சநேயர் போலில்லாமல் ‘சிறிய திருவடி’ என அழைக்கப்படுபவர் தனது இரு திருவடிகளையும் மடக்கி யோக பட்டத்தில் இரண்டு கைகளை வைத்துக் கொண்டு, அந்த இரு கைகளும் நம்மைக் கை காட்டி ‘வாருங்கள்’ என்று அழைக்கும் திருக்கோலத்தில் அமர்ந்துள்ளார். இங்கு ஆஞ்சநேயருக்கும் எம்பெருமானுக்கே உரித்தான சதுர்புஜம் (நான்கு கைகள்) உள்ளன. இரு கைகளில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்குமாக அருள் பாலிக்கிறார்.

அந்த சங்கும், சக்கரமும் பக்தர்களை பாதுகாப்பதற்காக ஸ்ரீயோக நரசிம்மரால் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டதாம். அதனாலேயே இங்கு அனுமனை ‘திருவடி’ என அழைப்பதில்லை. மகாவிஷ்ணு சொரூபமாகவே நினைக்கிறார்கள். மேலும் இதுபோன்ற சங்கு, சக்ர ரூபியாக ஸ்ரீயோக ஆஞ்சநேயன் தரிசனம் நமது தேசத்தில் எங்குமே இல்லை.

ஸ்ரீஅனுமனை வழிபட்ட பிறகு வெளியே வந்து புஷ்கரணிக் கரையில் தரிசனம் தரும் ஸ்ரீராமபிரானையும், ஸ்ரீசங்கநாதரையும் வணங்க வேண்டும். எல்லா கோவில்களிலேயும் ஸ்ரீராமனை உத்தேசித்து அனுமன் சன்னதி இருக்கும். இங்கு ஸ்ரீயோக ஆஞ்சநேயரை உத்தேசித்து ஸ்ரீராமபிரான் வந்து தரிசனம் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆஞ்சநேயருக்குத் தனியாகவே பிரசாதங்கள், நிவேதனம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News