ஆன்மிகம்
முருகன் கோவிலுக்கு பறக்கும் காவடி எடுத்து வந்த பக்தர்.

குமாரகோவில் முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2018-12-15 03:06 GMT   |   Update On 2018-12-15 03:06 GMT
கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி குமாரகோவில் முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குற்றங்கள் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ காவல்துறை சார்பிலும், மழை வளம் பெருகி விவசாயம் சிறக்க பொதுப்பணித்துறை சார்பிலும் குமாரகோவில் முருகனை வேண்டியும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுத்து வழிபடுவது வழக்கம்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தக்கலை போலீஸ் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறையினர் சார்பாக காவடி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அது போல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று குமாரகோவிலுக்கு காவடி ஊர்வலம் நடந்தது.

தக்கலை போலீஸ் நிலையம் சார்பில் யானை மீது பால்குடம் மற்றும் 2 புஷ்ப காவடிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. போலீஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் பத்மநாபபுரம் மாஜிஸ்திரேட்டு முத்துராமன், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பொதுப்பணித்துறை சார்பில் புஷ்ப காவடி எடுத்து செல்லப்பட்டது. விழாவில் உதவி பொறியாளர் கதிரவன், செயற்பொறியாளர் வேத அருள்சேகர், பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, பாசனத்துறை நிர்வாகி முருகேச பிள்ளை மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.
Tags:    

Similar News